'எதிரணி பாகிஸ்தான் என்றால் ஒரு காலில்கூட விளையாடுவேன்' - தோனி

'பாகிஸ்தானுக்கு எதிராக என்றால், நான் ஒரு காலில்கூட விளையாடுவேன்' என்று தோனி கூறிய நெகிழ்ச்சி வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளது.

தோனி


கடந்த 10 ஆண்டுகளில், தோனி இல்லாத இந்திய கிரிக்கெட் அணியை கனவிலும் கற்பனைசெய்ய முடியாது. டி-20 உலகக் கோப்பை, உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி என்று அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இந்தியாவை சாம்பியன் ஆக்கினார். உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குச் செல்வதையே பெரிய சாதனையாக நினைத்த காலகட்டங்களில், சொந்த மண்ணில் உலகக் கோப்பையைக் கைப்பற்றி, இந்திய அணியை வீறு நடை போடவைத்தார்.


இந்நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், தோனி குறித்து  நெகிழ்ச்சிச் சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, "கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை காலகட்டம் அது. ஜிம்மில், பளுதூக்கும் கருவியைத் தூக்கும்போது, தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவரால் நகரவே முடியவில்லை. இதையடுத்து, உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.


தோனியால் நடக்கக்கூட முடியவில்லை. அடுத்த சில நாள்களில், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான ஒரு போட்டி நடைபெற இருந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால், 'கவலை வேண்டாம்' என்று தோனி ஆறுதல் கூறினார். ஆசியக் கோப்பை விதிகளின்படி 24 மணி நேரத்துக்கு முன்பு அணி வீரர்களை அறிவிக்க வேண்டும். எனவே, வேறு வழியில்லாமல் தோனிக்குப் பதிலாக பார்த்தீவ் பட்டேலை வரவைத்தோம். அன்று மாலையே அவர் அணியுடன் இணைந்துகொண்டார். 


 தோனி,' நான் விளையாடுவேன்' என்பதையே மீண்டும் கூறினார். அன்று இரவு 11 மணி அளவில், நான் அவரது அறைக்கு மீண்டும் சென்றேன். அறையில் அவர் இல்லை. நடக்கவே முடியாத நிலையில், கடைசி ஃப்ளோரில் நடப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது தோனி, 'என்னிடம் சொல்லாமலேயே பார்த்தீவை அழைத்துவிட்டீர்கள். அதனால், நீங்கள் பாதுகாப்பு அடைந்துவிட்டீர்கள்' என்றார். எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.

 
பாகிஸ்தானுடன் போட்டி நடைபெறும் நாள். இந்திய ஜெர்சியுடன் தோனி ரெடியாக மோத இருந்தார். அப்போது என்னை அழைத்து, 'எதற்காக இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? பாகிஸ்தானுக்கு எதிராக என்றால் நான் எனது ஒற்றைக் கால்கூட இல்லாமல் விளையாடுவேன்' என்று கூறினார். அந்தப் போட்டியில் களமிறங்கி, இந்தியாவை வெற்றிபெறவைத்தார்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!