வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (29/08/2017)

கடைசி தொடர்பு:08:50 (29/08/2017)

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த வங்கதேசம்; டாக்கா டெஸ்ட்டில் முன்னிலை!

ஆஸ்திரேலிய அணி தற்போது, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  இரண்டு டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டாக்காவில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், வங்கதேசம் முன்னிலை பெற்றுள்ளது. 

shahib al hasan


ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் வரும்  செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக, வங்கதேசத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் கலந்துகொண்டு விளையாடிவருகின்றது. 

டாஸ் வென்ற வங்கதேசம், முதலில்  பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. முதல் நாளில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 260 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 84 ரன்களும், தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் 71 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், நாதன் லியோன் மற்றும் அகர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். 
அதன் பின்னர், ஆஸ்திரேலியா தனது  முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் நளில், அந்த அணி மூன்று விக்கெட்களை இழந்து தத்தளித்தது. இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே வங்கதேசம் அதிரடி காட்டியது. ஆஸ்திரேலிய நடு வரிசையை துவம்சம்செய்தது வங்கதேசம். ஒருகட்டத்தில், அந்த அணி 124 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து பரிதாப நிலையில் இருந்தது. அதன் பின்னர், பந்துவீச்சாளர்கள் அகர் மற்றும் கம்மின்ஸ் உதவுயுடன் அந்த அணி 200 ரன்களைக் கடந்தது. இறுதியில், 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக, தொடக்க ஆட்டக்காரரான ரென்ஷா 45  ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில்  அனுபவ வீரர், ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அபாரமாகப் பந்து வீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

அதன் பின்னர் களமிறங்கிய வங்கதேசம், பொறுமையுடன் விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது அந்த அணி 88 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் மூன்று நாள்கள் ஆட்டம் பாக்கி உள்ளதால், இந்த ஆட்டத்தில் முடிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தி  ருந்துதான் பார்க்க வேண்டும். சொந்த ஊரில் வங்கதேசம் ஆக்ரோஷமாக விளையாடிவருகிறது. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய அணியை எந்தச் சூழ்நிலையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. அதனால், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.