வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (29/08/2017)

கடைசி தொடர்பு:15:24 (29/08/2017)

ஓர் ஒலிம்பிக் பதக்கத்துக்குப் பின்னால்...! #NationalSportsDay #3MinutesRead

‘ஒலிம்பிக்கில் வாங்கிய தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்றால் 2 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால், அதை வாங்குவதற்கு குறைந்தது ஒரு கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும்!’ - இது, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியரான அபினவ் பிந்த்ரா சொன்னது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் அபினவ் தங்கம் வென்றார். இந்தப் பதக்கத்தை வாங்க அவர் செலவழித்தது 20 ஆண்டுகள், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய். ‘Born with silver spoon’ குடும்பத்தில் பிறந்த பிந்த்ராக்களுக்கு இது சாத்தியம். சாமானியனுக்கு?

ஜி.லட்சுமணன்

ஒலிம்பிக்கை விடுங்கள். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு, வேறு எவராலும் பதக்கம் வெல்ல முடியவில்லை. சமீபத்தில் லண்டனில் நடந்த இந்தத் தொடரில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக வீரர் ஜி.லட்சுமணனுக்கு முத்திரை பதிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அவருக்கு, அங்கு போன பின்புதான் தெரிந்தது, வேர்ல்ட் சாம்பியன்ஷிப் என்பது பெருங்கடல். எல்லோராலும் அவ்வளவு எளிதில் கரை சேர முடியாது என்று.

பள்ளிகளில் பி.இ.டி வகுப்பு புறக்கணிக்கப்படுவதில் இருந்து, ஆசிய அளவிலான போட்டியில் சாதித்தவனுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போவது வரை, அரசின் அலட்சியம், அதிகாரிகளின் மெத்தனம், விளையாட்டு சங்கங்களில் இருக்கும் அரசியல், தேவையில்லாத இடத்தில் குவியும் பணம், உள்கட்டமைப்பில் ஓட்டை என சர்வதேச அரங்கில் பதக்கம் கிடைக்காதன் பின்னணியில் பல காரணங்கள்.

ஏழு கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் இருந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 6. பதக்கம் வெல்வது ஒருபுறம் இருக்கட்டும், ஒலிம்பிக்கில் பங்கேற்பதே நமக்கு குதிரைக் கொம்பு. தமிழ் நாட்டில் இருந்து பத்து பேரைக் கூட ஒலிம்பிக் அனுப்பி வைக்க முடியாத அளவு, முட்டுக்கட்டையாக இருக்கும் விஷயங்கள் என்ன? இதை எல்லாம் பற்றி தேசிய விளையாட்டு தினமான இன்று அலசுவோம். 

எலைட் பேனல் நிலவரம்

ஒலிம்பிக்கில் சாதிக்கவல்ல வீரர், வீராங்கனைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுதோறும் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே எலைட் பேனல். ஆனால் இந்தத் திட்டத்தில் இருப்பவர்களில் பலர் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. ஒலிம்பிக்கில் பங்கேற்ற வெயிட்லிஃப்டர் சதீஷ் சிவலிங்கம், தடகள வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், தருண், ராஜா இவர்கள் யாரும் உரிய நேரத்தில் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. வாள்வீச்சில் சர்வதேச அளவில் சாதித்து வரும் பவானி தேவிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனிக்கவனம் செலுத்தினார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், பவானிக்கு சேர வேண்டிய உதவித்தொகை இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ‘‘எப்ப கொடுக்கிறாங்களோ கொடுக்கட்டும். நம்ம எதாவது சொல்ல, கிடைக்கிறதும் கிடைக்காம போயிடும்’’ - என்ற பயம் எல்லா வீரர்களுக்கும் இருக்கிறது.

உலகக் கோப்பை நழுவியது ஏன்?

இந்தியாவில் விரைவில் அண்டர்- 17 உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) நடத்தும் இந்தப் போட்டி, நம் ஊர் மைதானத்தில் நடக்க வேண்டும் என, பிற மாநிலங்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, கொச்சியில் போட்டி நடப்பதற்கான உரிமம் பெறும் வேலையை 15 நாட்களில் முடித்தது கேரள அரசு. ஆனால் தமிழ்நாடு அரசு? 

Chennai Nehru Stadium

சென்னையில் உள்ள, நேரு மைதானம் இந்தியாவிலேயே சிறந்த ஸ்டேடியம். என்ன பயன்? அங்கு உலக கோப்பை நடக்கப் போவதில்லை. காரணகர்த்தா தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு கால்பந்து சங்கமும். ‘மினிஸ்டரை பிடிக்கவே முடியலை. அவர் பை எலக்ஷன்ல பிசியா இருக்கார்’ என தமிழ்நாடு கால்பந்து சங்கம் விளக்கம் சொல்ல, ‘நான் ஒரு மாசமா சென்னையில்தான் இருக்கேன். யாரும் வந்து என்னைப் பார்க்கலை’ என நழுவினார் அப்போதைய ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர். இரு தரப்பு மிஸ்கம்யூனிகேசனால் வேர்ல்ட் கப் நடத்தும் வாய்ப்பு மிஸ் ஆனது. முதல் அமைச்சரிடம் பேசி MoE வாங்க முடியாததால், உலக கோப்பைப் போட்டிகள் வேறு இடத்துக்கு மாறுவது எல்லாம், நம் ஊரில் மட்டுமே சாத்தியம்.

பரிசு வழங்குவதில் தாமதம்:

‘அது ஒன்னுமில்லைங்க. அம்மா கையால குடுக்கணும்னு காத்துட்டு இருக்கோம்’ இது, 2014 ஏசியன் கேம்ஸில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கேட்டபோது அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சுந்தர்ராஜ் சொன்ன பதில். அப்போது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்தார்.

‘பரிசுக்கு நீங்க தகுதியானவர்னு லெட்டர் வந்துருச்சு. ஆனா, இழுத்தடிக்கிறாங்க. சீக்கிரமே கொடுத்தா நல்லா இருக்கும். நாம ஏதாவது சொல்ல, அதையும் நிறுத்திட்டா...?. வர்ற நேரத்துல வரட்டும்’ என புலம்பினர் பதக்கம் வென்றவர்கள். ஜெயலலிதா மீண்டும் அரியணையில் அமர்ந்து, சாவகாசமாக பரிசுத் தொகையை கொடுத்தபோது ஓராண்டு கடந்திருந்தது. 

காமன்வெல்த், ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால், பரிசுத்தொகையை உடனடியாக வழங்காமல் இழுத்தடிப்பது அரசின் வாடிக்கை. 

சம்மந்தம் இல்லாதவர்களுக்கு பரிசு

ஒருபுறம் பதக்கம் வாங்கியவர்கள் பரிசுக்காக ஏங்கி நிற்க, சம்பந்தமே இல்லாதவர்கள் கல்லா கட்டி வருகின்றனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் தடகள வீரர் ஜி.லட்சுமணன், வேர்ல்ட் தடகள சாம்பியன்ஷிப் வரை முன்னேறிவிட்டார். தேசிய அளவில், 5,000; 10,000 மீட்டர் ஓட்டத்தில் லட்சுமணனை மிஞ்ச ஆளில்லை. சிறப்புக் கவனம் செலுத்தி, அவரை தயார் செய்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து... எதுவும் இல்லை. ராணுவத்தில் மட்டும் அவர் வேலை பார்க்கவில்லை எனில், வேர்ல்ட் சாம்பியன்ஷிப் செல்வதை அவர் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது. 

சாம்பியன்களைக் கண்டுகொள்ளாத இந்த அரசுதான், துருக்கியில் நடந்த பள்ளி அளவிலான போட்டிகளில் ஜெயித்தவர்களுக்கு ரூ.50 லட்சம் ரூபாய், டெனிகாய்ட்  உலக கோப்பையில் ஜெயித்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் அள்ளிக் கொடுத்தது. இந்த இரண்டும் அவ்வளவு பெரிய தொகைக்கு ஏற்ற போட்டிகளே இல்லை என்பதே கொடூரமான உண்மை! 

போதாக்குறைக்கு, தேசிய அளவில் வில்வித்தைப் போட்டி நடத்துகிறேன் என ரூ.50 லட்சத்தை லபக்கிச் சென்றார் அதிமுக அட்டென்சன் சீக்கிங் பேர்வழி ஒருவர். ஆனால் செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாதித்த சேதுராமன், அதிபன், பயிற்சியாளர் ரமேஷ் இவர்களுக்கு உரிய நேரத்தில் அங்கீகாரமே கிடைக்கவில்லை. விஸ்வநாதன் ஆனந்த் உச்சத்தில் இருந்தபோது கூட, ஒலிம்பியாட் தொடரில் இந்தியா பதக்கம் வென்றதில்லை. சாதித்தவர்களை இந்த லட்சணத்தில் நடத்தினால், இன்னொரு ஆனந்த் எப்படி உருவாக முடியும்?

சி.எம். டிராபியின் நோக்கம் என்ன?

ஜெயலலிதாவின் முயற்சியில்  உதித்த ‘முதல் அமைச்சர் கோப்பை’ உண்மையிலயே நல்ல விஷயம். முதலிடம் பிடித்தால் ஒரு லட்சம், குழு விளையாட்டு எனில் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம், மாவட்ட அளவில் வென்றவர்களுக்கும் ஆயிரக் கணக்கில் பரிசு என, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு பரிசு கொடுத்ததில்லை. பாராட்டுக்குரிய விஷயம். ஆனால்...
பத்தாயிரம் ரூபாய்க்கு கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தினாலே, ஏரியா எம்.எல்.ஏ-வைக் கூப்பிட்டு அலப்பறை பண்ணும் மார்க்கெட்டிங் உலகம் இது. கேரளாவில் பள்ளி அளவிலான போட்டிகள் கூட, ஊடகங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. எனில், கோடிகளைக் கொட்டி நடத்தும் சி.எம் டிராபி தொடரை எப்படி எல்லாம் பிரபலப்படுத்தி இருக்க வேண்டும்? இந்த விஷயத்தில் SDAT-யின் செயல்பாடு மோசமாக உள்ளது! 

சங்கங்களில் நடக்கும் அரசியல்:

இந்தியாவில் இருக்கும் ஒரு விளையாட்டு சங்கம் கூட விளையாட்டை வளர்க்கும் நோக்கில் செயல்படவில்லை. தமிழகமும் அதற்கு விதி விலக்கு அல்ல. பதவியில் இருப்பதெல்லாம் விளையாட்டுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள். 30 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு விளையாட்டு சங்கத்தின் தலைவராக நீடிக்கிறார் ஒருவர். அவரை நீக்கி விட்டு அந்த இடத்தில் அமரத் துடிக்கிறார் இந்திய ஒலிம்பிக் கவுன்சிலில் இருக்கும் இன்னொருவர். அவரை சமாதானப்படுத்த புதிதாக ஒரு பதவி உருவாக்கப்படுகிறது. 

வாலிபால் சங்க தலைவர் ஒரு மீட்டிங் போட்டு, செயலாளரை டிஸ்மிஸ் செய்கிறார். செயலாளர் தன் ஆதரவாளர்களுடன் ஒரு கூட்டம் கூட்டி தலைவரை நீக்குகிறார். பேட்மின்டன் சங்கத்திலும் இதே கூத்து. பின் எப்படி ஸ்போர்ட்ஸ் வளரும்? 

தடகளம், வாலிபால் பரவாயில்லை. தமிழகத்துக்கு பரிச்சயம் இல்லாத ஜிம்னாஸ்டிக், டிரையாத்லன், நீச்சல் என எல்லா சங்கத்திலும் அரசியல். வாள் வீச்சில் பவானிதேவிக்கு அரசு பணம் கொடுத்தால், இதை எதிர்த்து மொட்டைக் கடிதம் எழுதத்தான் ஆள் இருக்கிறதே தவிர, ஃபென்சிங்கை வளர்ப்பதற்கு அல்ல.

கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளை அழித்து விட்டதாக சொல்வது அபத்தம். சி.எஸ்.கே சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், ஒரே வருடத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரை ஆரம்பித்தது தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில். மற்ற சங்கங்கள் இப்படி ஒரு தொடரையாவது நடத்தி இருக்கிறதா? 

வேலைவாய்ப்பு ஜீரோ

ஒலிம்பிக்


சென்னையில் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டி நடந்தபோது, கேரளாவில் இருந்து வந்த பயிற்சியாளர் ஒருவர், ‘எங்களுக்கு ஒரு குறை என்றால் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவோம். இங்கு விளையாட்டில் வேலைவாய்ப்பே இல்லையே... இதுசம்பந்தமாக யாராவது ஒருவர் முதலமைச்சரிடம் பேச வேண்டும்’ என்றார் அப்பாவியாக. அவர் சொன்னதைப் போல, டிபார்ட்மென்ட்டுகளில் விளையாட்டு வீரர்களை வேலைக்கு எடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

மின் வாரியத்தில் வாலிபால், போலீஸில் கால்பந்து என, குறைந்தபட்சம் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வோர் அணியை உருவாக்கலாம். ஜாப் செக்யூரிட்டி இருக்கும் பட்சத்தில் சாதிப்பது சாத்தியம். அப்படி வேலைக்கு எடுப்பவர்களிடம், ‛உச்சத்தில் இருக்கும் வரை நீ தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்’ என வரைமுறை வகுத்துக் கொள்ளலாம். அதேநேரத்தில் திறமையான வீரர்களை அடிமாட்டு விலைக்கு பணிநியமனம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

மல்யுத்த வீரர்களான யோகேஷ்வர் தத், சுஷில் குமார் இருவரும் ஹரியானாவில் டி.எஸ்.பி. லெவலில் வேலையில் இருப்பவர்கள். அந்த மாதிரி திறமையான வீரர்களை அதிக சம்பளம் கொடுத்து, உயரிய பதவியில் பணி நியனம் செய்ய வேண்டும். 10,000, 12,000 ரூபாய் சம்பளத்துக்கு பந்தோபஸ்து பணியில் இருந்து கொண்டு, விளையாட்டிலும் சாதிக்க எந்த வீரனும் சம்மதிக்க மாட்டான். 

உள்கட்டமைப்பு மேம்பாடு

சென்னையில் செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியைச் சுற்றிலும் ஒரு காலத்தில் நிறைய ஹாக்கி மைதானங்கள் இருந்தன. இப்போது இல்லை. சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி தவிர மற்ற இடங்களில் சின்தெடிக் கிரவுண்ட் இல்லை. சென்னையில் பாதிக்கும் மேற்பட்ட கார்ப்பரேசன் மைதானங்கள், இயற்கை உபாதை கழிக்கும் இடங்களாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. பெருநகரங்களில் இந்த நிலைமை எனில், பிற பகுதிகளில் சொல்லத் தேவையில்லை. சென்னை தவிர்த்து திருச்சி போன்ற பெரு நகரங்களில் கூட போதிய அகாடமிகள் இல்லை. 

சென்னை நேரு மைதானத்தில் இன்டோர் ஸ்டேடியம் பரவாயில்லை. ஆனால், உபகரணங்கள் அரதப் பழசாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசு நினைத்தால் மட்டுமே உள்கட்டமைப்பில் புரட்சி ஏற்படுத்த முடியும். கொல்கத்தாவில் நகரின் மையப்பகுதியில் ஏக்கர் கணக்கில் மைதானங்கள் இருக்கின்றன. அதேபோல, ஒவ்வொரு நகரிலும் ஹார்ட் ஆஃப் தி சிட்டியில் நிறைய மைதானங்கள் இருக்க வேண்டும். திறந்தவெளி இடங்களை மைதானங்களாக மாற்றலாம். பிரைவேட் நிறுவனங்களுடன் சேர்ந்து உள்கட்டமைப்பை மேம்படுத்தலாம். மாவட்ட தலைநகரங்களில் அவுட்டோர் ஸ்டேடியம் கட்டும் பணி வரவேற்கத்தக்கது. ஆனால், பேட்மின்டன், வாலிபால், டேபிள் டென்னிஸ், ஹேண்ட் பால், பேஸ்கட் பால் போட்டிகள் அனைத்தும் இன்டோர் ஸ்டேடியத்தில் நடப்பவை. எனவே, முக்கிய நகரங்களில் எல்லாம் சிறிய அளவில் இன்டோர் ஸ்டேடியம் கட்ட வேண்டும். 

ஸ்போர்ட்ஸ் கோட்டா எதற்கு?

ஆண்டுதோறும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 500 பேர் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் வருகின்றனர். குறிப்பாக, யாருக்குமே தெரியாத ரோலர் ஸ்கேட்டிங், ஒலிம்பிக்கில் இல்லாத த்ரோ பால் போன்ற போட்டிகளின் மூலம் உள்ளே நுழைகின்றனர். அண்ணா பல்கலையில் நுழைவதும், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சீட் வாங்குவதும்தான் அவர்கள் இலக்கு. அடித்துப் பிடித்து கோட்டாவில் சீட் வாங்கி விட்டு, முதல் செமஸ்டரிலேயே விளையாட்டுக்கு குட்பை சொல்லி விடுகின்றனர். எனில், எதற்காக அந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா? 

எஸ்டிஏடி செயல்பாடு.

SDAT - ஒலிம்பிக்

SDAT என்பது தமிழ்நாட்டில் விளையாட்டை மேம்படுத்துவதற்கான ஆணையம். இங்கு பணி புரிபவர்கள் விளையாட்டை நேசிப்பவராக, நிபுணத்துவம் வாய்ந்தவராக, உடனுக்குடன் ஆவணங்களை சரிபார்ப்பவராக, விரைந்து முடிவெடுக்கும் திறமையுள்ளவராக இருக்க வேண்டும். பெரிய அளவிலான தொடர் நடத்துவதற்கு முன் அதிகாரிகள், நிபுணர் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழ்.

பயிற்சியாளர்கள்தான் ரீஜினல் ஆஃபீசர்ஸ், ஸ்போர்ட்ஸ் ஆஃபீசர் என உயரிய பொறுப்புகளை வகிக்கின்றனர். இவர்களால் நிர்வாகத்தை நடத்துமளவு சிந்திக்க முடிவதில்லை. அதனால்தான் குரூப் 1 தேர்வு எழுதி வருபவர்களை நியமிக்க வேண்டும் என, மெம்பர் செக்ரட்டரி கேட்பதாக கேள்வி.  திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும், அந்த துறை புரிய சில நாட்களாகும். அதற்குள் அவரை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது. இதையெல்லாம் விட, ‘பாதி விளையாட்டுக்கும் மேல், இந்தியாவில் நாம்தான் சாம்பியனாக இருக்க வேண்டும்’ என இலக்கு வைக்கும், ஸ்போர்ட்ஸ் மீது பிரியம் உள்ளவர் விளையாட்டு அமைச்சராக இருக்க வேண்டும்.

பள்ளியே தொடக்கப் புள்ளி 

‘அன்னிக்கி மட்டும் கணக்கு வாத்தியார் P.E.T வகுப்பை கடன் வாங்காம இருந்திருந்தா, இன்னிக்கு நான் ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சிருப்பேன்’ என ஒலிம்பிக் சமயத்தில் ட்விட்டரில் கமென்ட் தட்டினார் ஒருவர்.  தமிழ்நாட்டில் மொத்தம் 4,426 பி.இ.டி ஆசிரியர் பணியிடங்களில் 517 காலியாக உள்ளன. 250 மாணவர்களுக்கு ஒரு பி.இ.டி ஆசிரியர் கட்டாயம் என்பது விதிமுறை. ஆனால், 3,600 பள்ளிகளில், 8 லட்சம் மாணவர்களுக்கு 326 பி.இ.டி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, பி.இ.டி ஆசிரியர்கள் விளையாட்டு தவிர்த்து வேறு வித வேலைக்கும் பணிக்கப்படுகின்றனர். 
தனியார் பள்ளிகளில் அவர்களுக்கு சம்பளமும் குறைவு. பள்ளி முதல்வர்கள் அவர்களை வார்டன்கள் போல பாவிக்கின்றனர். மதிப்பதே இல்லை. அடுத்த குறை மைதானம். மொத்தம் உள்ள 57,583 பள்ளிகளில் 13,249 பள்ளிகளில் மைதானங்கள் இல்லை. இந்த நிலை மாற வேண்டுமெனில், பெயரளவில் இருக்கும் விதிமுறைகளை தூசி தட்ட வேண்டும். 

இவை எல்லாவற்றையும் விட, ‘எப்பப்பாரு விளையாட்டு..’ என மட்டம் தட்டும் பெற்றோர் மனநிலையிலும் மாற்றம் வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்