வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (29/08/2017)

கடைசி தொடர்பு:11:35 (30/08/2017)

சாய்னா, சிந்துவுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்களுடன் காத்திருந்த ஒலிம்பிக் சாம்பியனின் தாய்!

ரியோ ஒலிம்பிக்கிக்கில் தங்கப் பதக்கம் வென்ற கரோலினா மரினின் தாய், இந்திய பேட்மின்டன் வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்துவுடன் செல்ஃபி எடுக்க காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது. 

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்தது. இந்த தொடரில் கலந்துகொண்ட பி.வி.சிந்து, வெள்ளிப்பதக்கமும், சாய்னா நேவால் வெண்கலப் பதக்கமும் வென்றனர். தொடரின் இறுதி நாளன்று சாய்னா மற்றும் சிந்துவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டினர். அவர்களுள் முக்கியமானவர், ரியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்ற ஸ்பெயினின் கரோலினா மரினின் தாய் டோனி மார்டின். 

உலக சாம்பியன்ஷிப் தொடர் நடந்த மைதானத்துக்கு வெளியில் சாய்னாவுக்காக காத்திருந்த அவரது பெற்றோர்களைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட டோனி மார்டின், அவர்களுக்கு வாழ்த்தும் கூறினார். போட்டிகள் முடிந்து வெளியில் வந்த சாய்னாவுடன் அவர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். அவர்கள் இருவரும் செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.