வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (29/08/2017)

கடைசி தொடர்பு:18:35 (29/08/2017)

⁠⁠⁠⁠⁠ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, தனஞ்செயா... கிரிக்கெட்டின் ரிஸ்ட் ஸ்பின் கலைஞர்கள்!

இந்திய அணியின் இலக்கு 231. ஓபனிங் ஜோடி குவித்தது 109 ரன்கள். விக்கெட் இல்லை. இந்தியா எளிதில் வெற்றிபெறும் என்பது ரசிகர்கள் கணிப்பு. காரணம், இலங்கையிடம் அனுபவம் வாய்ந்த மலிங்கா தவிர சிறப்பான பந்து வீச்சாளர்கள் இல்லை. ரோஹித்தின் அரை சதத்துக்குப் பிறகு நம்பிக்கை இழந்த இலங்கை ரசிகர்கள், மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அந்த நேரத்தில் நிகழ்ந்தது ஒரு மாயாஜாலம்.

ஆஃப் பிரேக் பௌலர் அகில தனஞ்செயா, ரிஸ்ட் ஸ்பின்னராக அவதாரம் எடுத்து திறமையான பேட்ஸ்மேன்கள்கொண்ட இந்திய பேட்டிங் வரிசையைத் திணறடித்தார். கோலி, ராகுல், கேதார் விக்கெட்டுகள் சடசடவென சரிந்தன. அனைத்தும் தனஞ்செயாவின் துல்லியமான கூக்ளிக்கு கிடைத்த பரிசு. 131 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில், புவனேஸ்வர் மற்றும் தோனியின் நேர்த்தியான ஆட்டம், இந்தியாவை வெற்றியடையச் செய்தது. ஆனாலும் ஆட்டத்தின் நாயகன் தனஞ்செயாதான்.

கிரிக்கெட்

இதே தனஞ்செயா, அடுத்தடுத்த ஆட்டங்களில் சோபிப்பாரா என்றால் தெரியாது. ஜொலிக்காவிடினும் சரி, ஓரளவுக்குப் பந்து வீசுவாரா என்றாலும் சரியாகச் சொல்ல முடியாது. இதுதான் ரிஸ்ட் ஸ்பின்னின் மர்மம். கிரிக்கெட் உலகில் பொதுவாக ஒரு பேச்சு நிலவும், ``ரிஸ்ட் ஸ்பின்னர்கள், ஒரே ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்கள். ஒன்று, எதிர் அணி பேட்ஸ்மேன்களைத் திண்டாடச் செய்து விக்கெட்களை எடுப்பர். இல்லையெனில் மோசமான பந்துகளைப் போட்டு, பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விட்டுக் கொடுத்து, சொந்த அணிக்கே சூனியம் வைப்பர்”. 

இதற்கு மாபெரும் உதாரணம், ஆஸ்திரேலியா வீரர் ஃப்ளீட்வுட் ஸ்மித். ஒரே இன்னி்ங்சில் பத்து விக்கெட்டுகள் வீழ்த்தி அணியை வெற்றிபெறச் செய்த அவரே, ஒரு இன்னிங்க்ஸில் அதிக ரன்களையும் (298) விட்டுக்கொடுத்தார்.

ரிஸ்ட் ஸ்பின் வீசும் பந்து வீச்சாளர்களைக் குற்றம் சொல்வதற்கு எதுவும் இல்லை. அந்த முறையான பந்துவீச்சு, அரிதான கடினமான கலை. சரியான லெந்த்தில் மட்டும் தொடர்ச்சியாகப் பந்துவீசக் கற்றுக்கொண்டால், ரிஸ்ட் ஸ்பின்னர்களின் பந்துகள் என்றும் விளையாட முடியாதவைதான். ஜாம்பவான் ஷேன் வார்னை எடுத்துக்கொள்வோம். வேகப்பந்து வீச்சுக்கு ஏதுவான பிட்ச்சில்கூட இவரது சுழல் பந்துவீச்சு தனித்துப் பேசும், திரும்பி எழும்பும். கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இவர், இன்று வளர்ந்துவரும் ஒவ்வொரு ரிஸ்ட் ஸ்பின்னருக்கும் ரோல்மாடல்.

145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகள். இந்த ஒரு ரிக்கார்டு போதும், அவர் எந்த அளவுக்கு ரிஸ்ட் ஸ்பின் கலையைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார் என்று புரிய. அவர் வீசிய அசாத்தியமான ஒரு பந்தை, இன்றும் கிரிக்கெட் ரசிகர்கள் `Ball of the Century' எனக் கொண்டாடுகின்றனர். அவர் அளவுக்கு நீண்ட ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்ற இன்னொரு ரிஸ்ட் ஸ்பின்னர், இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே மட்டும்தான். இவர்களைத் தவிர்த்து, இந்த வகை பந்து வீச்சாளர்கள் யாரும் இவ்வளவு காலம் தாக்குப்பிடித்ததில்லை என்பதன் மூலம், இது எவ்வளவு கடினமான கலை என்பது நமக்கு விளங்கும்.

வார்னேவின் `பால் ஆஃப் தி செஞ்சுரி' வீடியோ லிங்க்.

 

 

கும்ப்ளே, வார்னே ஓய்வுக்குப் பிறகு, லெக் ஸ்பின்னர்கள் பெரிய அளவுக்கு நிலையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. `unplayable' எனச் சொல்லும் வகையில் தொடர்ச்சியாக பந்து வீச்சை வெளிப்படுத்தியதில்லை, அதற்கேற்ப டெஸ்ட் போட்டிகள் மீது உள்ள சுவாரஸ்யமும் குறைந்தது. அதனால் இடையில் அவர்களுக்கான மோகமும் குறைந்திருந்தது. இப்போது மீண்டும் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் தாக்கமும் தேவையும் அதிகரித்துள்ளது. இதற்கு, ஐ.பி.எல் மாபெரும் சாட்சி.

ஸ்பின்

இருபது ஓவர்களே நடக்கும் இன்னிங்ஸில் பவுண்டரி, சிக்ஸர் மழை பொழியும். அனைத்து பெளலர்களும், தர்ம அடி வாங்குவது வழக்கம். இந்த வேளையில்தான் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் தேவை மீண்டும் உருவெடுத்தது. காரணம், இருபது ஓவர் போட்டிகளில் பேட்ஸ்மேன் கிரீஸ் தாண்டி  இறங்கி வந்து ஆடும்போதும், பந்து மட்டையில் படாமல் கீப்பருக்குச் சென்று ஸ்டம்பிங் ஆகும்போதும், பந்து மட்டையின் விளிம்பில் பட்டு எகிறி கேட்ச் ஆவதற்கான வாய்ப்பை, இந்த ரிஸ்ட் ஸ்பின்னர்களால் ஏற்படுத்த முடியும். கேப்டன்கள் அனைவருக்கும் அணியில் ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் துருப்புச்சீட்டுகளாகப் பயன்பட்டனர்.

தாஹிர், மிஸ்ரா, பத்ரி ஆகியோர் T20 ஹீரோக்கள் ஆக ஆரம்பித்தனர். சாஹல், குல்தீப், ஷம்ஷி, ரஷித், சண்டகன் போன்ற புதிய பெயர்கள் பெரிதாகப் பேசப்படுகின்றன. தமிழக வீரர் முருகன் அஷ்வின் 4.5 கோடி ரூபாய்க்கு புனே அணிக்கு ஏலம்போனது, ரிஸ்ட் ஸ்பின்னர்களின் தேவையைக் காட்டுகிறது. இதில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் இடக்கை (சைனாமேன்) என்பதால், அவருக்கு கூடுதல் மவுசு. சைனாமேன் பௌலர்களைப் பயன்படுத்தும்போது கேப்டனுக்கு கூடுதல் பொறுப்பு. ஏனெனில், இயங்கு ஆற்றல், ஃபீல்டிங் பரிமாணங்கள் என அனைத்தும் மாறுபடும்.

ஸ்பின்

தொழில்முறை கிரிக்கெட்டராக விளையாடுபவர்கள் அனைவருக்கும், இந்த ரிஸ்ட் ஸ்பின் என்பது ஓர் அழகிய கலை என்பது தெரியும். குறைந்த அடி நடந்து வந்து பந்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, மணிக்கட்டை வளைத்து பந்தை சரியான இடத்தில் குத்தி எழும்பச் செய்ய அதிக பயிற்சி தேவை. இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களின் ஒருவரான பிஷன்சிங் பேடி, தொடக்கத்தில் ரிஸ்ட் ஸ்பின்னை அதிகம் முயற்சித்தும் ஒழுங்காகப் பந்து வீச வராமல்தான், பின்பு ஃபிங்கர் ஸ்பின்னுக்கு மாறினார்.

பள்ளி, கல்லூரி கிரிக்கெட் அணிகளைக் கூர்ந்து கவனித்தாலே தெரியும், ஒருவனுக்கு பெரிய உடல் தகுதி இல்லாவிடினும், அவன் இந்த ரிஸ்ட் ஸ்பின் கலையில் தேர்ந்திருந்தால், அவனுக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கப்படுவதை நாம் காணலாம். கலையும் விளையாட்டும் வெவ்வேறு அல்ல. ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு கலை இருக்கிறது. கிரிக்கெட் என்னும் புத்தியும் உடலும் சேர்ந்து பயன்படுத்தும் விளையாட்டில், இந்த ரிஸ்ட் ஸ்பின் நன்கு கற்க வேண்டிய ஓர் அழகிய கலை. 


டிரெண்டிங் @ விகடன்