யு.எஸ் ஓப்பன்: நடப்புச் சாம்பியனை முதல் சுற்றிலேயே வெளியேற்றிய 19 வயது வீராங்கனை

டென்னிஸ் உலகின் முக்கியத் தொடர்களில் ஒன்றான யு.எஸ் ஓப்பன், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்துவருகிறது.137 வருட பாரம்பர்யம் கொண்ட யு.எஸ் ஓப்பன், கடினமான தரையில் நடைபெறும் போட்டியாகும்.

ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 10 வரை நடக்கும் இந்தத் தொடரில், தகுதிச் சுற்றுகள் முடிந்து, கடந்த திங்கள் கிழமை முதல், பிரதான சுற்றுகள் ஆரம்பித்தன. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத கிராண்ட் ஸ்லாம் தொடரான யு.எஸ் ஓப்பன் முதல் நாளிலிருந்தே பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. 

கடந்த திங்கள்கிழமை, முதல் சுற்று ஆட்டங்கள் ஆரம்பித்தன. அமெரிக்காவில் தற்போது மழை பெய்துவருவதால், அடிக்கடி போட்டிகள் தடைபடுகின்றன. சில போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டன. இதனால் டென்னிஸ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 
ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தின் முதல் சுற்றில், உலகின் முன்னணி வீரர்கள் எதிர்பார்த்ததுபோலவே வெற்றிபெற்றனர். சோங்கா, இஸ்னர், சிலிக், முதல் நிலை வீரரான நடால், தீம், முல்லர் போன்ற முன்னணி வீரர்கள் எளிதாகத் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். 

இன்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ரோஜர் ஃபெடரர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், தங்களின் முதல் சுற்று ஆட்டங்களை இன்று விளையாடுகின்றனர். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முன்னணி வீரர்கள் எதிர்பார்த்ததுபோல வெற்றிபெற, பெண்கள் பிரிவில் முதல் சுற்றிலே பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. முகுருசா, வீனஸ் வில்லியம்ஸ், மரியா ஷரபோவா போன்ற வீராங்கனைகள் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். 

கடந்த முறை சாம்பியனும், இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கருத்தப்பட்ட கெர்பர், முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தார். அவரை ஜப்பானைச் சேர்ந்த 19 வயதே ஆன நோமி ஒசாக்கா  6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றிபெற்றார். 

அதேபோன்று, ஷரபோவா முதல் சுற்றிலே உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஹலேப்-ஐ எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில், ஷரபோவா 6-4, 4-6, 6-3 என்ற செட்களில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலே உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும் வெளியேற்றபட்டுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், இன்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

இரட்டையர் ஆட்டங்கள் நாளை முதல் ஆரம்பமாகின்றன. இந்தியர்கள், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என அனைத்து இரட்டையர் பிரிவிலும்  விளையாடுகிறார்கள். சானியா மிர்சா, பெண்கள் இரட்டையரில் சீன வீராங்கனையான எஸ். பெங் உடன் இணைந்து விளையாடுகிறார். பெங், இரட்டையர் பிரிவில் சிறப்பாக ஆடக்கூடியவர். அவர், இது வரை இரண்டு கிராண்ட் ஸ்லாம் உட்பட 22 இரட்டையர் பட்டங்களைக் கைப்பற்றிய அனுபவ வீராங்கனை. அதனால் இந்த ஜோடி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ஆண்கள் இரட்டையரில், இந்திய வீரர் பெயஸ் சக நாட்டு வீரரான ராஜாவுடன் சேர்ந்து களமிறங்குகிறார். அதே போன்று, போபண்ணா மற்றும் ஷரன் ஆகியோரும் இரட்டையர் பிரிவில் தங்களின் இணையுடன் விளையாட உள்ளனர். இந்தப் போட்டிகள், நாளை நடைபெறுகின்றன. 

Photo courtesy: usopen.org

Do you like the story?

Please Appreciate the Author by clapping!