வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (30/08/2017)

கடைசி தொடர்பு:09:57 (30/08/2017)

உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் கௌரவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் கௌரவ் பிதுரி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கௌரவ் பிதுரி


உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்துவருகிறது. இதில், 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கௌரவ் பிதுரி கலந்துகொண்டுள்ளார். இதனிடையே நேற்று நடந்த காலிறுதிச் சுற்றில், துனிசிய நாட்டின் பிலைல் மெம்டியும் கௌரவ் பிதுரியும் மோதினர். இதில், சிறப்பாகச் செயல்பட்ட கௌரவ் வெற்றிபெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இந்தியாவுக்கு அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.


அறிமுகமான முதல் உலக சாம்பியன்ஷிப்பிலேயே பதக்கத்தை உறுதிசெய்துள்ள இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கௌரவ் பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த 2011-ம் ஆண்டு விகாஷ் கிருஷ்ணன் அறிமுகமான உலக சாம்பியன்ஷிப்பிலேயே பதக்கம் வென்றிருந்தார். 
இதுகுறித்து கௌரவ் பிதுரி, 'நான் வைல்ட் கார்டு மூலமாகத்தான் உள்ளே வந்தேன். ஆனால், தற்போது பதக்கம் பெறுவோர் பட்டியலில் உள்ளேன். எனக்கு எல்லாமே மிக விரைவில் நடக்கிறது. வெண்கலப் பதக்கத்தைவிட சிறந்த ஒரு பதக்கத்தைப் பெற்று கண்டிப்பாக நான் வரலாறு படைப்பேன்' என்று கூறியுள்ளார்.


அரையிறுதிச் சுற்றில், அமெரிக்காவின் டியூக் ராகனுடன் இன்று மோத உள்ளார்.