ஆஸ்திரேலியாவை அசைத்த வங்கதேசம்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது!

ஆஸ்திரேலிய அணி, தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,  இரண்டு டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, வங்கதேசம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ban wins over australia


டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 260 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்க ஆஸ்திரேலியா, வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல், 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் தரப்பில் அனுபவ வீரர், ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அபாரமாகப் பந்து வீசி, 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதன் பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம், 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 265 ரன்களை நிர்ணயித்தது வங்கதேசம். 


அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ரென்ஷா மற்றும் கவாஜா ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தாலும், ஸ்மித் மற்றும் வார்னரின் பொறுப்பான ஆட்டத்தினால் அந்த அணி நல்ல நிலையில் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வார்னர், சதமடித்து, பின்னர் ஆட்டமிழந்தார். இந்நிலையில், இன்று காலை வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் ஆஸ்திரேலியா அணியைத் தனது பந்துவீச்சால் திணறடித்தார். சிறப்பாகப் பந்து வீசி, ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில், அந்த அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 


வங்கதேசம், டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, வங்கதேச அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!