அஷ்வின், ஜடேஜாவிடம் கற்றுக்கொண்ட வங்கதேச பந்துவீச்சாளர்கள்!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணி பெற்ற முதல் வெற்றி அதுவாகும்.


மிர்பூரில் நடந்த அந்தப் போட்டியில், வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் 19 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். அதிலும் குறிப்பாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் சாய்த்தார். வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி  என அறியப்படுகிறார். இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் ஜோஷி, வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராகக் கடந்த வாரம்தான் நியமிக்கப்பட்டார். 

போட்டிகுறித்து பேசிய சுனில் ஜோஷி', இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து சுழற்பந்துவீச்சில் குறிப்பாக ஒருவிதமான பந்துவீச்சை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் திறம்படக் கையாள முடியவில்லை. ஆனால், அது எந்தவிதமான பந்துவீச்சு என்பதைத் தொடர் முடியும் வரை நான் கூறப்போவதில்லை. அதுவே, ஆஸ்திரேலிய அணியின் பின்னடைவுக்குக் காரணம். இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் தொடரின்போது, அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பந்துவீசிய வீடியோக்கள் மூலம் வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் நிறைய கற்றுக்கொண்டனர்’ என்று அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!