படுதோல்வி எதிரொலி: 2019 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை!

இந்திய அணிக்கு எதிரான படுதோல்வியால், 2019 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.

இலங்கை


இந்திய அணி, தற்போது இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு ஏற்கெனவே, டெஸ்ட் தொடரில் இலங்கையை வொய்ட் வாஷ் செய்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரிலும், அந்த அணி வொய்ட் வாஷ் ஆகும் தருவாயில் உள்ளது. மொத்தம் முடிந்துள்ள 4 போட்டிகளில், இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, நேற்று நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில், இலங்கை அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது.


அடுத்தடுத்த தோல்வி அந்த அணியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியத் தொடரில் ஏற்பட்ட படுதோல்வியால், அந்த அணி 2019 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. 2019 உலகக் கோப்பைக்கு, தரவரிசையில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிடும். மீதம் உள்ள அணிகள் தகுதிச்சுற்றில் கலந்து கொண்டு, அதில் வெற்றி பெற்றுதான் உலகக்கோப்பைக்குள் நுழைய வேண்டும்.


அடுத்த ஆண்டு மே மாதம் உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடங்க உள்ளது. இந்நிலையில், தற்போது இலங்கை அணி 8-வது இடத்தில் உள்ளது. இந்தியாவுடனான 5-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி 88 புள்ளிகளுடன் இருக்கும். ஆனால், நேரடியாக தகுதி பெற 88 புள்ளிகள் போதாது.

இலங்கை


இலங்கைக்கு அடுத்து இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்ததாக அயர்லாந்து அணியுடன் ஒரு போட்டியிலும், இங்கிலாந்துடன் 5 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்தியாவுடனான கடைசிப் போட்டியிலும் இலங்கை தோற்கும்பட்சத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணியுடன் தலா ஒரு வெற்றி பெற்றாலே, 88 புள்ளிகளை எட்டிவிடும்.


இலங்கை அணி கடந்த 1996 உலகக் கோப்பை சாம்பியன்ஸ். மேலும், 2007, 2011 என்ற தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையின் ரன்னர்ஸ். இப்படி உலகக் கோப்பையில் ஃபுல் ஃபார்மில் இருந்த இலங்கை அணி, 2019 உலகக் கோப்பைக்குள் நேரடியாக நுழைய முடியாதது அந்நாட்டு ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!