Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோலி, ரோஹித் செஞ்சுரி... இலங்கை ஏன் இப்படி வீழ்ந்தது? #MatchAnalysis #IndiaVsSrilanka #Dhoni300

அதே பழைய கதைதான். இலங்கையை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது இந்தியா. தோனியின் 300-வது போட்டி, அவரை விட கோலி, ரோஹித்துக்கு ரொம்ப ஸ்பெஷல். இது மட்டும்தான் புதுசு. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என எல்லா துறைகளிலும் இந்திய வீரர்கள் ஜொலிக்க, பிறகென்ன... வழக்கம்போல வெற்றிதான். புதிய கேப்டன் மலிங்காவாலும் இலங்கை அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

கோலி, ரோஹித், தோனி

ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி இதுவரை 16 முறை டாஸ் ஜெயித்துள்ளார். ஆனால், இரண்டுமுறை மட்டுமே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். நேற்று இரண்டாவது முறை. இதற்கு முன் விராட் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தபோது, ரோகித் விளாசியது 264 ரன்கள். எதிரணி இதே இலங்கை. ரோகித் படைத்தது புதிய சாதனை. இன்று வரை ஒருநாள் போட்டிகளில் தனிநபர் அடித்த உச்சபட்சம் அதுவே. இன்றும் எதிரணி அதே இலங்கை. கொல்கத்தா ஈடன் கார்டனில் நிகழ்ந்த அதே அதிசயம் இன்று கொழும்பு பிரேமதசா மைதானத்திலும் நிகழுமா? அதற்கான சாத்தியங்களும் இருந்தது. 

இந்திய அணி ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி விட்டது. இது டெட் ரப்பர் மேட்ச். போதியவரை சாதித்தாகி விட்டது. இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற நிலை. `ஹிட்மேன்' ரோகித் சர்மா, `ரன் மிஷின்’ விராட் கோலி பார்ட்னர்ஷிப். இருவரும் நங்கூரமிட்டுவிட்டனர். இவர்களைப் பிரிக்க நினைக்கும் இலங்கையின் பெளலிங் இம்மியளவும் எடுபடவில்லை. போகிற போக்கைப் பார்த்தால், இந்தியா அசால்ட்டாக 400 ரன்களைத் தாண்டும் என்ற நிலை. அப்போதைய ஸ்கோர்டு போர்டும் அதைத்தான் சொன்னது. 29 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள். சந்தித்தது 165 பந்துகளே. ரோகித் 75 பந்துகளில் 86 ரன்கள், கோலி 93 பந்துகளில் 131 ரன்கள். சந்தேகமே இல்லை. ரோகித், விராட் இருவரும் இன்று இரட்டைச் சதம் விளாசுவர், இந்தியா 450 ரன்களுக்கு மேல் குவித்து புதிய சாதனை படைக்கும் என விறுவிறுவென சிந்தித்தது ரசிகனின் மனது.

Virat Kohli

கோலி ஒருபுறம் 29-வது சதம், இலங்கைக்கு எதிராக 2,000 ரன்களைக் கடந்து நடைபோட, மறுபுறம் கேப்டனுக்கு நல்ல கம்பெனி கொடுத்த ரோகித்தும் ரன்ரேட்டை ஏற்றினார். ஒருவழியாக சிரமப்பட்டு, இந்த ஜோடியைப் பிரித்தார் மலிங்கா. பெளண்டரிக்கு ஆசைப்பட்ட கோலி, மலிங்கா பந்தில் முணவீராவிடம் கேட்ச் கொடுத்தார். இது மலிங்காவின் 300-வது விக்கெட். தொடர்ந்து அசத்திய ரோகித், மலிங்கா வீசிய ஃபுல்டாஸ் பந்தை பெளண்டரிக்கு அனுப்பி, தனது 13-வது சதத்தைப் பதிவுசெய்தார். 35-வது ஓவரை வீசிய மேத்யூஸ் ஹர்திக் பாண்ட்யாவையும் ரோகித் சர்மாவையும் வெளியேற்றி டபுள் செக் வைத்தார். அடுத்த வந்த கே.எல்.ராகுல் ஏழு ரன்களில் தனஞ்செயாவின் பந்துவீச்சில் கேட்ச் ஆக, இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்திருந்தது. 400 ரன்களைக் கடக்கும் என்றிருந்த சூழல் மாறி, ஒரு கட்டத்தில் 49 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

அடுத்து ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் தோனியும் மணீஷ் பாண்டேவும் ரன்ரேட்டை அதிகரித்தனர். தன் 300-வது ஆட்டத்தில் களமிறங்கிய தோனி, ரசிகர்களை ஏமாற்றாமல் பெளண்டரி விருந்துவைத்தார்; மலிங்காவின் 48-வது ஓவரில்  டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்தினார். அவருக்கு கம்பெனி கொடுத்த மணீஷ் பாண்டேவும் பெளண்டரி மழை பொழிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 375 ரன்களைக் குவித்தது. கடைசிப் பந்தில் மணீஷ் பாண்டே அரை சதம் எட்ட, தோனியும் 49 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி 131 ரன்களும்,ரோகித் 104 ரன்களும் விளாசினர். இலங்கை சார்பில் மேத்யூஸ் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சவாலான இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு, தொடக்க வீரர்கள் ஏமாற்றினர். முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் இளம் ஷர்துல் தாகூர். அவரது பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர் டிக்வெல்லா தோனியிடம் கேட்ச் ஆக, அவரை ஃபாலோ செய்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் முனவீராவும் பும்ரா பந்துவீச்சில் தோனியிடமே சிக்கினார். பாண்ட்யா வீசிய 15-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் புல்ஷாட் மூலம் ஃபைன் லெக்கில் சிக்ஸர் விரட்டிய திரிமன்னே, அடுத்த பந்தில் பரிதாபமாக கவர் திசையில் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் மேத்யூஸும்  ஸ்ரீவர்த்தனாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இலங்கை அணியின் நம்பிக்கை கூடியது. இருவரும் அக்சர் படேல், பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகிய மிடில் ஓவர் பெளலர்களைக் கொஞ்சம் சோதித்துதான் பார்த்தனர். ஒருவழியாக பாண்ட்யாவே இந்த ஜோடியைப் பிரித்தார். அவர் வீசிய 29-வது ஓவரின் இரண்டாம் பந்தை டிரைவ் செய்ய நினைத்த ஸ்ரீவர்த்தனா மட்டையைச் சுழற்ற, அவுட்சைடு எட்ஜாகி பேட்டில் உரசியபடி சென்ற பந்தை தோனி தவறிழைக்காமல் தன்வசமாக்க, 39 ரன்களில் வெளியேறினார் ஸ்ரீவர்த்தனா. 

தோனி

மறுமுனையில் நிதானம் காட்டிய மேத்யூஸ், தனி ஒருவனாக அரை சதம் அடித்தார். அடுத்து வந்த ஹசரங்கா கொஞ்சம் அதிரடி காட்டினாலும், பும்ரா மற்றும் அக்சர் ஜோடியின் அபார முயற்சியில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அக்சர் படேல் வீசிய 38-வது ஓவரில் முதல் பந்தை பெளண்டரிக்கு அனுப்பிய மேத்யூஸ் அடுத்த பந்தையும் லெக்சைடில் அடிக்க முயற்சிக்க, பந்து அவரை ஏமாற்றிவிட்டு எட்ஜாகி தேர்டுமேன் இடத்தில் நின்ற தாக்கூரின் கைகளில் விழுந்தது. பந்தோடு சேர்த்து இலங்கையின் நம்பிக்கையும் விழுந்தது என்றால் அது உண்மைதான். மேத்யூஸ் 70 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த டெய்ல் எண்டர்ஸும் வந்த வேகத்தில் நடையைக்கட்டினார். குல்தீப் வீசிய 43-வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஃபெர்னாண்டோ கேட்ச் ஆக, நான்காம் பந்தில் மலிங்கா கோல்டன் டக் அவுட் ஆனார். இலங்கை அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இலங்கை சார்பில் மேத்யூஸ் 70 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். இந்தியா சார்பில் பும்ரா, பாண்ட்யா மற்றும் குல்தீப் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க மறந்துவிட , கிடைத்த வாய்ப்பில் பட்டையைக் கிளப்பினர் இந்திய வீரர்கள். 300-வது போட்டியில் களமிறங்கிய தோனி, பேட்டிங்கிலும் கீப்பிங்கிலும் மெர்சல் செய்து மாஸ் காட்டினார். ரோகித், தனது பேட்டிங் திறமையை சதமடித்து நிரூபித்தார். சிறப்பான ஒரு சதத்தைப் பதிவுசெய்து மீண்டும் இந்திய அணியை பெருமைகொள்ளச் செய்த கேப்டன் கோலி, ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement