வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (01/09/2017)

கடைசி தொடர்பு:15:41 (01/09/2017)

அர்ஜுனா விருதுக்கு அனிதா பால்துரை! - சாட்டையைச் சுழற்றிய உச்ச நீதிமன்றம்!

அனிதா பால்துரை

இந்தியக் கூடைப்பந்து மகளிர் அணியின் 'மோஸ்ட் வான்டட்' கேப்டன் அனிதா பால்துரைக்கு, இரண்டு வார காலத்துக்குள் அர்ஜுனா விருதை வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். '18 ஆண்டுகால உழைப்புக்கு உச்ச நீதிமன்றம் வழியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது' என நெகிழ்கிறார் அனிதா.  

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர் அனிதா பால்துரை. கடந்த மாதம் நடந்த ஆசியா (ஃபிபா) விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி பதக்கம் வெல்லக் காரணமாக இருந்தவர். இதுமட்டுமல்ல இவரது சாதனை. கடந்த 18 ஆண்டுகளாக இந்திய மகளிர் கூடைப் பந்து அணியை வெற்றிக் கோப்பையை நோக்கி நகர்த்தியவர். உலகின் மிகச் சிறந்த 10 வீராங்கனைகளில் ஒருவராக 2013-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர். எட்டு முறைக்கும் மேல் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக கலந்துகொண்ட ஒரே இந்திய வீராங்கனையும் இவர்தான். ஆனாலும், தேசிய விருதுக்கான அங்கீகாரத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார் அனிதா பால்துரை. ஆசிய கோப்பையில் பதக்கம் வென்றதால், அர்ஜுனா விருது தேடி வரும் என உற்சாகத்தில் இருந்தவருக்குக் கூடுதல் ஏமாற்றத்தை அளித்தது இந்திய விளையாட்டுத் துறை. 'இனியும் நமக்கான உரிமையைப் பெற தாமதிக்கக் கூடாது' என உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய பிறகுதான் தேசிய விருதுக்கான நோக்கம் நிறைவேறியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை இந்த வழக்கு வந்தபோது, 'இந்த ஆண்டே அனிதாவுக்கு விருது வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளனர் நீதியரசர்கள். 

அனிதா பால்துரையிடம் பேசினோம். “எங்கள் உழைப்புக்கான அங்கீகாரமே மத்திய அரசின் விருதுகள்தான். பல ஆண்டுகளாக அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பித்து வருகிறேன். 'இந்த ஆண்டு கண்டிப்பாகக் கிடைக்கும்' என விளையாட்டுத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தார்கள். ஒலிம்பிக் போட்டியை முடித்துக்கொண்டு வந்தபோது, 15 பேருக்கு அர்ஜுனா விருதை அறிவித்தார்கள். அதில், கூடைப்பந்து அணியை எப்போதும் ஒரு பொருட்டாகவே அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலிருந்து அர்ஜுனா விருதுக்காகச் சென்ற ஃபைல்களில் என் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது. 'வேறு யாருடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. நம்பிக்கையோடு இருங்கள்' என மாநில விளையாட்டுத்துறை அதிகாரிகளும் உறுதியளித்தனர். 100 சதவிகித தகுதியோடு இருப்பதால், 'கட்டாயம் என்னுடைய பெயர் இடம்பெறும்' என நம்பினேன். ரயில்வே நிர்வாகமும் என் பெயரைப் பரிந்துரை செய்திருந்தது. 15 பேருக்கு அர்ஜுனா விருதை அறிவித்தவர்கள், கூடைப்பந்து மற்றும் வாலிபால் அணியைக் கைவிட்டுவிட்டார்கள். ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, மத்திய அரசின் விருதுப் பட்டியல் நடைமுறையையே மாற்றிவிட்டார்கள்" எனக் கொந்தளித்தவர், 

"இந்த ஆண்டும் அர்ஜுனா விருதுப் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை எனத் தெரிந்தவுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். 'இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ள ப்ராசாந்தி சிங்கைவிட பல வகையிலும் எனக்கு அதிக தகுதி இருக்கிறது' என்பதை உச்ச நீதிமன்ற வழக்கில் குறிப்பிட்டேன். வழக்கு விசாரணையில் பதில் அளித்த மத்திய அரசு, 'விருதுப் பட்டியல் முன்னரே அறிவித்துவிட்ட காரணத்தால், அடுத்த ஆண்டு அர்ஜுனா விருதுக்கு அனிதா பெயரைப் பரிந்துரைப்போம்' எனத் தெரிவித்தது. இதை ஏற்காத உச்ச நீதிமன்றம், 'இந்த ஆண்டே அனிதா பால்துரைக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து இன்னும் இரண்டு வார காலங்களில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது" என நெகிழ்ந்தவர், "18 ஆண்டுகாலமாக, திருமணம்-குழந்தை என வாழ்க்கைச் சூழல் மாறியபோதும், எவ்விதத் தடையுமின்றி கூடைப்பந்தைக் கையில் ஏந்தி விளையாடி வருகிறேன். இத்தனை ஆண்டு கால உழைப்பு, நாட்டுக்காகப் பெற்றுத் தந்த வெற்றிகள் என அனைத்தையும் கடந்து ‘அர்ஜுனா விருது’ என்ற அங்கீகாரத்துக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். பெண்களுக்கு உரிய அங்கீகாரமும் வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டால், விளையாட்டுத்துறையில் பெண்கள் தொடர்ந்து முன்னேறுவார்கள்" என்றார் நம்பிக்கையோடு.