வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (03/09/2017)

கடைசி தொடர்பு:10:13 (04/09/2017)

அமெரிக்க ஓப்பன்: ஃபெடரர், நடால், சானியா மிர்சா காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

மெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தகுதிச் சுற்று போட்டிகளுடன் ஆரம்பித்த இந்தத் தொடர் தற்போது முக்கியக் கட்டத்தை நெருங்கி வருகிறது. டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்களான நடால் மற்றும் ஃபெடரர் ஆகியோர் தற்போது காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

federer

அமெரிக்க ஓப்பன் தொடரில் தற்போது மூன்றாம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டிகளில் டென்னிஸ் உலகின் முக்கிய வீரர்களான ஃபெடரர் மற்றம் நடால் தங்களது மூன்றாவது சுற்று ஆட்டதில் விளையாடினார்கள். 

ஃபெடரர் இந்த முறை அமெரிக்க ஓப்பன் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இன்றையப் போட்டியிலும் அவரது சிறப்பான ஆட்டம் தொடர்ந்தது. அவர், 6-3, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் லோபசைத் தோற்கடித்தார். கடந்த இரண்டு போட்டிகளிலும் 5 வது செட் வரை போராடி வென்ற ஃபெடரருக்கு, தனது மூன்றாவது சுற்று வெற்றி சற்று நம்பிக்கை அளித்திருக்கும். அதே போன்று மற்றொரு முன்னணி வீரரான நடால் தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், முதல் செட்டை இழந்தாலும் அடுத்தடுத்த செட்களில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். இதன் மூலம் இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மற்ற முன்னணி வீரர்களான டெல் போட்ரோ, டி. தீம் போன்ற வீரர்களும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். நாளை காலிறுதிக்கு முன்றைய சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷரபோவா, வீனஸ் வில்லியம்ஸ், முகுருசா ஆகிய  வீராங்கனைகள் நாளை தங்களது காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளில் விளையாட உள்ளனர். 
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ் - ராஜா இணை இன்று இரவு தங்களது இரண்டாவது சுற்று போட்டியில் விளையாடுகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நாளை காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சானியா இணை விளையாடுகிறது.