சச்சினை சமன்செய்த கோலி!: வெளியானது ஐ.சி.சி தர வரிசைப் பட்டியல்!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி தர வரிசைப் பட்டியலில், அதிக தரப் புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர்களில், சச்சின் படைத்திருந்த சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார்.

விராட் கோலி

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 125 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலிருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரில், 4 - 0 என்று முன்னிலை வகித்துவந்த இந்திய அணி, இன்று கொழும்புவில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று, இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. 

இதன்மூலம், அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது இந்திய அணி. அதேநேரம், பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலில், கோலி தொடர்ந்து தனது முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி முன்னேற்றம் அடைந்து, பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் 10-ம் இடத்தையும், ரோஹித் சர்மா 9-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

இதேபோல, பந்துவீச்சாளர்களுக்கான தர வரிசைப் பட்டியலில் 27 இடங்கள் முன்னேறி, நான்காம் இடம் பிடித்துள்ளார் பும்ரா. இலங்கைக்கு எதிரான தொடரில், பும்ரா 15 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இந்த அதி முன்னேற்றத்துக்கான காரணம். மேலும், அதிக தரப் புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர்களில், சச்சின் படைத்திருந்த சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார். 1998-ம் ஆண்டில், சச்சின் 887 புள்ளிகள் பெற்றிருந்தார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில், இரண்டு சதங்கள் விளாசிய கோலி, தற்போது, ‌887 புள்ளிகள் பெற்று அந்தச் சாதனையைச் சமன்செய்துள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!