‘பலே’ பல்வந்த்... தொடர்கிறது இந்தியாவின் வெற்றிநடை! #MACvIND

2019 ல் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் மக்காவ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தி அமர்க்களப்படுத்தினர் சுனில் செத்ரி தலைமையிலான இந்தியப் புலிகள். இரண்டாம் பாதியில் மாற்று வீரராக களம் கண்ட பல்வந்த் சிங் இரண்டு கோல்கள் அடித்து மிரட்ட, கொஞ்சம்  பலவீனமான எதிரணியான மக்காவை துவம்சம் செய்தது இந்திய அணி. மேலும், இது ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

இந்தியா


ஸ்டீபன் காண்ஸ்டண்டைன் பயிற்சியின் கீழ் இந்திய அணியின் ஆட்டம் நாளுக்கு நாள் மெருகேறி வருவது உண்மைதான் என்பதை இந்திய வீரர்கள் நன்கு நிரூபித்தனர். குறிப்பாக பல்வ்ந்த் சிங், நாராயண் தாஸ் மற்றும் பிரிதம் கொடல் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது. ஓரிரு முறை மட்டுமே மக்காவ் அணிக்கு கிடைத்த வாய்ப்புகளையும் காலி செய்த  சந்தேஷ் ஜிங்கான் வழக்கம் போல டிபென்ஸில் மெர்சல் செய்தார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே  இந்திய அணியின் கை ஓங்கியிருந்தது. மக்காவ் அணியின் கோல் கம்பத்தை நோக்கி போர் தொடுத்தனர் இந்திய வீரர்கள். ஆனால் ஏறக்குறைய மக்காவ் அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் அவர்களின் பாதியில் அடைத்து நின்று டிஃபென்சில் கெத்து காட்டினர். அட்டாக்கிங் என்பதையே மறந்து விட்டு குறிப்பாக இந்திய வீரர்களின் ‛ஆன் டார்கெட் ஷாட்டு’களை காலி செய்வதே மக்காவ் வீரர்களின் வேலையாக இருந்தது. சுனில் செத்ரி,ஜேஜே, நார்சரி, நாராயண் தாஸ், ஹொலிச்சரண் மற்றும் உதந்தா ஆகிய இந்திய அணி வீரர்களின் சிறப்பான முயற்சிகளெல்லாம் வீணாகிக் கொண்டிருக்க, முதல் பாதி கோல் ஏதுமின்றி கழிந்தது.

இந்தியா - மக்காவ்

இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கிய இந்திய அணியின் பல்வந்த் சிங் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார். பந்தை முழுவதுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய அணி வீரர்கள் இடைவிடாமல் தொடுத்த அட்டாக்கிற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் நாராயண் தாஸ் அருமையாக கிராஸ் செய்த பந்தை ஒருவழியாக ஹெட்டிங் செய்து முதல் கோலை அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார் பல்வந்த் சிங். இருந்தாலும் கூட அட்டாக்கை விட்டுவிட்டு இப்போதும் டிபென்ஸிலேயே மக்காவ் அணி கவனம் செலுத்த, எங்களுக்குத் தேவை இன்னுமொரு கோல் என, கிடைத்த கேப்பில் எல்லாம் கிடா வெட்டினர் நம் வீரர்கள். 

தொடர்ந்து அசத்திய பல்வந்த் சிங் 83-வது நிமிடத்தில் மீண்டுமொரு கோலை அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். மக்காவ் அணிக்குக் கிடைத்த கார்னரை தடுத்த இந்திய அணி கோல் கீப்பர் குர்பரீத் சிங் சந்து உடனடியாக பந்தை மக்காவ் பாக்ஸை நோக்கி வலுவாக உதைத்தார். அதை அந்த  அணியின் டிபெண்டர் தவறவிட, பந்து பல்வந்த் சிங்கிடம் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பந்தை உதைக்க,  பதற்றத்தில் வேகமாக வந்த மக்காவ் கோல்கீப்பரை ஏமாற்றிய பந்து நேராக வலைக்குள் சென்றது. 

 

இறுதிக்கட்டத்திலும் கூட மக்காவ் அணியின் கோல்கீப்பரை ரெஸ்ட் எடுக்க விடாமல் பிசியாகவே கிறங்க வைத்தனர் நம் வீரர்கள். 93-வது கூடுதல் நிமிடத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த கோல்,  ஆஃப் சைட் என அறிவிக்கப்பட்டதால், இந்திய அணி இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் மக்காவ் அணியை வீழ்த்தி வெற்றிக்கனியை ருசித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!