Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எத்தனை காயம், எத்தனை தோல்வி... ஆனாலும், இவன் ஓய்வதில்லை... நடால் எனும் கம்பேக் நாயகன்! #FedalSlam #Nadal

ரஃபேல் நடால் - டென்னிஸ் உலகம் போற்றும் ஒரு மாபெரும் வீரன். 16-வது கிராண்ட் ஸ்லாம் பதக்கத்தை வென்று, சரித்திரம் படைக்க முன்னேறிக்கொண்டிருக்கிறான் அந்தப் போராளி. சீனியர் டென்னிஸ் போட்டிகளில் கால் பதித்து 16 ஆண்டுகளில் 16 பட்டங்கள். போதாக்குறைக்கு 2 ஒலிம்பிக் தங்கங்கள் வேறு! மொத்த உலகமும் இன்று அவரின் வெற்றியை உச்சிமுகர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் வெறும் வெற்றிப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தால் அந்த நாயகனின் வலியும் போராட்டமும் கண்காணாமல் போய்விடும். காரணம் நடாலின் வாழ்க்கை டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமும் தோல்வியும் ஆட்கொண்ட ஒவ்வொருத்தரும் நடாலின் வாழ்க்கையை  'கேஸ்-ஸ்டடி' செய்து பார்ப்பது அவசியம்.

நடால்

2 ஆண்டுகளுக்கு முன்பு நடால் என்னும் பெயர் டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றுப் பக்கங்களுக்கு மாற்றப்பட்டிருந்தது. ஃபெடரரின் பெயரும் கூட. 2011 விம்பிள்டன் தொடங்கி 2012 அமெரிக்க ஓபன் வரை 3 கிராண்ட் ஸ்லாம் ஃபைனலிலும் நடாலை வென்று சாம்பியனாகிறார் ஜோகோவிச். 2012 ஒலிம்பிக் தங்கம், அமெரிக்க ஓபன் போட்டிகளை ஆண்டி முர்ரே கைப்பற்றுகிறார். 2012 விம்பிள்டனோடு ஃபெடரரின் 'எவர்கிரீன்' ஆட்டம் சோடைபோகிறது. நடாலின் சீற்றமும் 2014 ஃபிரெஞ்சு ஓபனோடு முற்றிலும் அடங்கிப்போகிறது. பல ஆண்டுகள் டென்னிஸ் கோர்ட்டின் ராஜாக்களாக வலம் வந்தவர்கள் காலத்தின் பிடியாலும் காயத்தின் நெடியாலும் தங்கள் ஆதிக்கத்தை இழக்கிறார்கள். மரின் சிலிச், வாவ்ரிங்கா போன்றோரும் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் மீது கைவைக்க, "இனி அடுத்த தலைமுறையின் ஆதிக்கம் தான்" என அடித்துச் சொன்னார்கள் டென்னிஸ் நிபுனர்கள். ஃபெடெரர், நடால் பெயர்களுக்கு முன்னால், 'முன்னாள்' வீரர்கள் என்ற பட்டம் மறைமுகமாகக் கொடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளும் அந்த ஜாம்பவான்களின் ஆதிக்கமின்றியே கடந்துபோக, டென்னிஸ் ரசிகர்களும் மனமுடைந்து போயினர்.  

எத்தனை நேரம்தான் மேகத்தின் பின்னால் கதிரவன் மறைந்திருப்பான்? தமிழக மண்ணில், ஜல்லிக்கட்டுக்காக நம் இனம் வெகுண்டெழுந்த நேரத்தில்தான், அந்த வயதான இரண்டு முரட்டுக் காளைகளும் சீறிப்பாயந்தன. 'இளம் நாயகர்கள்', 'அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள்' என்றெல்லாம் கொண்டாடப்பட்ட அனைவரையும் முட்டித்தள்ளி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். கோமாவில் கிடந்த டென்னிஸ் ரசிகர்களெல்லாம் மீண்டும் விழித்துக்கொண்டனர். 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஃபெடரர் - நடால் மோதும் கிரண்ட்ஸ்லாம் பைனல். அதுவும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாமிலேயே...

'தி கிங்ஸ் ஆர் பேக்' என்று ஆர்ப்பரித்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் அணுவளவும் வீணாகவில்லை. இந்த ஆண்டின் 4 ஸ்லாம்களையும் இவர்கள் இருவருமே 'கிளீன் ஸ்வீப்' செய்து மெர்சல் செய்துள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களைப் புறம்தள்ளிய உலக மீடியாக்கள் இப்போது பிராய்சித்தம் தேடிக்கொண்டிருக்கின்றன. இவர்களின் இந்த எழுச்சி இதோடு ஓயப்போவதில்லை. மீண்டும் ஒரு நடால் - ஃபெடரர் அத்தியாயம் தொடங்கப்போகிறது. அதற்கு 2017ம் ஆண்டு ஒரு தொடக்கமே!

Rafael Nadal

சரி, நடாலைப் பற்றிய கட்டுரையில் ஏன் ஃபெடரரைப் புகழ வேண்டும்? காரணம் இருக்கிறது. "நீயும் நானும் இதை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் விதி. நான்தான் உன்னை முழுமையாக்குகிறேன்" என்று ‛தி டார்க் நைட்’ திரைப்படத்தில் பேட்மேனிடம் ஜோக்கர் சொல்வான். அதுபோலத்தான் இவர்கள் இருவரும். நடால் இல்லையேல் ஃபெடரர் இல்லை. ஃபெடரர் இல்லையேல் நடால் இல்லை. அவர்களின் போட்டி ரசிகர்களுக்கு விருந்து. அவர்கள் மற்றவர் மீது கொண்டிருந்த நட்பும் மரியாதையும் அனைத்து விளையாட்டுகளைச் சார்ந்த வீரர்களுக்கும் பெரிய பாடம். ஃபெடரரின் வாழ்க்கை கொஞ்சம் முன்னதாகவே தொடங்கியிருக்கலாம். அவர் அப்போதே உச்சத்தைத் தொட்டிருக்கலாம். ஆனால் ஒரு கடினமான எதிர்ப்பை அவருக்கு அளித்தது நடால்தான். 19 கிராண்ட்ஸ்லாம் பதக்கங்களுடன் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் என்ற அந்தஸ்தைக் கொண்டிருக்கும் ஃபெடரரை 37 போட்டிகளில் 23 முறை தோற்கடிக்க ஒருவனால் முடிகிறதென்றால் அவன் டென்னிஸை உயிருக்கும் மேலாய் நேசிக்கிறவனாய் இருக்க வேண்டும். அது நடாலைத் தவிர வேறு யாராக இருக்க முடியும். ஆம், நடாலின் வளர்ச்சி எவரும் எதிர்பாராதது.

பிப்ரவரி 2,2004 - முதன்முதலாக உலகின் நம்பர் -1 வீரர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார் ரோஜர் ஃபெடரர். அப்போது நடால் டாப் 40-யில் கூட இல்லை. அடுத்த மாதம் மியாமி மாஸ்டர்ஸ் தொடர்.  நம்பர் -1 வீரர் ஃபெடரரை முதன்முறையாக எதிர்கொண்டு நேர் செட்களில் வீழ்த்தினார் 18 வயது நடால். ஆண்டு இறுதியில் டேவிஸ் கோப்பை. நம்பர் -2 வீரர் ஆன்ட்டி ரோடிக்கை வீழ்த்தி ஸ்பெயினின் வெற்றிக்கு வித்திட்ட  நடால், அந்த ஆண்டு இறுதியில் பிடித்திருந்த இடம் 51. அடுத்த 6 மாதங்களில் நடந்ததெல்லாம் ஆச்சர்ய அற்புதங்கள். 19 வயதில் ஃபிரெஞ்சு ஓபனை தன் முதல் முயற்சியேலேயே வென்று ஜூலை 25, 2005-ல் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார் நடால். அதன்பிறகு ஃபிரெஞ்சு ஒபனைத் தன் செல்லப் பிள்ளையாக்கிக்கொண்டார்.

 

நடாலின் இந்த வெற்றிகள் அவரின் வேகத்துக்கும், பலத்துக்குமான பரிசு. 'நெவர் எவர் கிவ் அப்' - நடாலின் மந்திரம். எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நடால் பின்வாங்கியது இல்லை. இரண்டு செட்களை இழந்த பிறகு போராடி போட்டியை வென்ற தருணங்கள் பல. களிமண் தரையின் ராஜாவான நடால், கிராஸ் கோர்டிலும், ஹார்ட் கோர்டிலும் சளைத்தவரல்ல என்று நிரூபித்தார். புல்தரை மைதானங்களில் பட்டையைக்கிளப்பிய ஃபெடரரையும் அசாதாரணமாக எதிர்கொண்டார். ஆனால், நடாலின் டென்னிஸ் வாழ்க்கை எப்பொழுதும் சீராகச் சென்றதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் காயங்கள் நடாலின் காலைப் பிடித்து இழுத்தது. எதிராளிகளை எளிதாக எதிர்கொண்ட நடால், காயங்களிடம் சற்று தடுமாறினார்.

2005ம் ஆண்டு தன் முதல் ஃபிரெஞ்சு ஓபனை வென்ற நடாலைத்தான் நமக்குத் தெரியும். ஆனால், 2004 ஃபிரெஞ்சு ஓபனிலிருந்தும் கூட அவர் காயத்தால் வெளியேற நேரிட்டது. ஆம், அவ்வளவு இளம் வயதிலும் காயத்தால் அவதிப்பட்டார். அதற்காக அவரது உடல் பலவீனமானது என நினைத்துவிட வேண்டாம். மற்ற டென்னிஸ் வீரர்களை ஒப்பிடும்போது நடாலின் உடல்வாகு பிரமிப்பானது. அப்படியிருந்தும் ஏன் அவ்வளவு காயங்கள்? காரணம், நடால் தன் உடல்திறனையே தன் ஆயுதமாகப் பயன்படுத்தினார். நடாலின் ஃபோர்ஹேண்ட் ஷாட்களுக்கு ஈடு கொடுத்து ஆடும் ஆட்டக்காரர்கள் சொற்பம். களத்தின் இரண்டு முனைகளையும்  நொடியில் கவர் செய்துவிடுவார். இவை எல்லாமுமே அவரின் பிரச்னைகளை வலுவாக்கியது.

சான் ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த டென்னிஸ் ஆராய்ச்சியாளர் ஜான் யாண்டெல், ஃபோர்ஹேண்ட் ஷாட்களின்போது பந்து சராசரியாக ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறை சுழல்கிறது என்று ஆராய்ந்தார். முன்னாள் ஜாம்பவான்களான பீட் சாம்ப்ரஸ், ஆந்த்ரே அகாசியின் ஃபோர்ஹேண்ட் ஷாட்களால் பந்து முறையே நிமிடத்துக்கு 1800, 1900 முறை சுழன்றுள்ளது. ஃபெடரரின் ஃபோர்ஹேண்ட்கள் நிமிடத்துக்கு 2700 முறை சுழன்றுள்ளன. ஆனால், நடாலின் ஃபோர்ஹேண்ட் ஷாட்களால் பந்து சராசரியாக நிமிடத்துக்கு 3,200 முறை சுழன்றுள்ளது. அதிலும் ஒருமுறை உச்சகட்ட வேகமாக 4,900 முறை சுழன்றுள்ளது! நடாலின் இந்த மிகப்பெரிய பலம்தான் கடந்த 2 ஆண்டுகள் அவரை ஓய்வில் அமர்த்தியது. மணிக்கட்டு பிரச்சனை, ஒட்டுக்குடல் பிரச்னை என எதுவும் எளிதில் ஓயவே இல்லை. அதிலிருந்து மீண்டார்; மிரட்டினார்.

Rafael Nadal

கையை விட நடாலைப் பெரிதும் தொந்தரவு செய்தது அவருடைய கால்களே. பிறவியிலேயே ஏற்படக்கூடிய கோஹ்லர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். காலில் அடிக்கடி வீக்கமும் வலியும் ஏற்படுத்தக்கூடிய இந்நோய் நடாலின் டென்னிஸ் வாழ்க்கையையே பாதித்திருக்கும். ஆனால், நடால் விடுவதாய் இல்லை. அப்போதுதான் உண்மையில் நடாலின் போராட்டங்கள் தொடங்கின. கடந்த 12 ஆண்டுகளாக அடிக்கடி காலில் காயம் ஏற்பட்டு ஓய்வறையில் முடங்கியிருந்தார். காயத்தின் வலிக்கு வெற்றிகளால் மருந்திட்டார். 2005-ம் ஆண்டு பலத்தமான காயத்தால் அவதிப்பட்ட நடால், முழுமையாகக் குணமடையாமலே மீண்டும் விளையாடினார். அந்தக் காயம் அவரை 2 ஆண்டுகளுக்கும் மேலாகத் துரத்தியது. 2005-ல் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகிய அந்த இளைஞன் மீண்டு வந்து ஃபிரெஞ்சு ஓபனை வென்றான். 2007-ல் அமெரிக்க ஒபனின்போதும் காயம், 2009 விம்பிள்டன் தொடரிலிருந்து காயத்தால் விலகல், 2010 ஆஸ்திரேலிய ஓபனில் காயம், 2011 ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் காயம், 2012 ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகல், அமெரிக்க ஓபனிலிருந்து விலகல், வயிற்றுப் பிரச்சனையால் 2013 ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகல் என நடால் பங்கேற்றதற்கு இணையான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது அவர் நிராகரித்த தொடர்களின் எண்ணிக்கை. 

வேறு ஒருவராக இருந்தால் இத்தனை காயங்களுக்குப் பிறகு டென்னிஸில் இருந்தே விலகியிருப்பார்கள். ஆனால் போராட மட்டுமே தெரிந்த இந்த ஸ்பெயின் வீரனுக்கு அப்படி அமைதியாக இருக்க மனமில்லை. 2009 விம்பிள்டனிலிருந்து விலகியவர் அடுத்த கிராண்ட் ஸ்லாம் தொடரான  அமெரிக்க ஓபனை அசால்டாகத் தூக்கினார். 2010 ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் முர்ரேவுடன் மோதிய நடால், காயத்தைப் பொருட்படுத்தாமல் இரண்டு செட்கள் ஆடினார். இருப்பினும் வலியின் வீரியம் அதிகமாகவே, போட்டியிலிருந்து விலகினார். அதன்பிறகு மீண்டும் வாரக் கணக்கில் ஓய்வு. ஆனால், அவருக்குள் இருந்த பதக்க வெறி மட்டும் ஓயவே இல்லை. விளைவு அந்த ஆண்டின் மற்ற 3 கிராண்ட் ஸ்லாம்களும் நடாலிடம் செல்லமாய்க் கடிபட்டன. அடுத்த ஆண்டும் 'சேம் சிசுவேஷன்'. ஆஸ்திரேலிய ஓபன் விலகல் - ஃபிரெஞ்சு ஓபன் சாம்பியன்!

நடால்

இப்படி ஒவ்வொரு முறையும் மாஸாக கம்பேக் கொடுத்துக்கொண்டிருந்ததால், 'கிங் ஆஃப் கிளே' என்னும் பட்டம் ' கம்பேக் கிங்' என்று மாறியது. ஆனால் 2014-ல் தான் நடாலின் பிரச்னைகள் உச்சத்தை அடைந்துவிட்டன. மீண்டும் முழங்கால் பிரச்னை. அதிலிருந்து சில மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டு வந்தாலும், பழைய வேகம் இல்லை. அவரால் மீண்டுமொரு கம்பேக்கைத் தர முடியவில்லை. கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் நான்காம் சுற்றுக்குக் கூட முன்னேற முடியாமல் தடுமாறினார். 2016-ல் அவர் ஆடிய இரண்டு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபனிலும், அமெரிக்க ஓபனிலும் முறையே முதல் மற்றும் நான்காம் சுற்றுகளிலேயே வெளியேறி ரசிகர்களை புலம்பவைத்தார் நடால். ஆனால் புத்தாண்டு யாருக்கு விடிவாக அமைந்ததோ இல்லையோ நடாலுக்கு மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது.

இதோ... இப்போது 16 கிராண்ட் ஸ்லாம்கள் வென்றாகிவிட்டது. ஃபெடரருக்கு 35 வயதாகிவிட்டது. அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு முடிவை அறிவிக்கலாம். அவரின் 19 ஸ்லாம்களை நெருங்க இன்னும் 3 வெற்றிகள் தான். 2018-ன் ஃபிரெஞ்சு ஓபனில் அவரது பெயரை இப்போதே பொறித்துவிடலாம். அதுபோக இன்னும் 2 ஸ்லாம்கள் மட்டுமே பாக்கி. இன்னும் இரண்டு ஆண்டுகள் நடால் தன் ஃபிட்னஸை பாதுகாத்தால் நிச்சயம் ஃபெடரரை அவர் ஓவர்டேக் செய்து தலைசிறந்த டென்னிஸ் வீரனாக அரிதாரம் எடுப்பார். அதில் எந்த சந்தேகமுமில்லை. காரணம், நடாலைப் போன்று கம்பேக் கொடுத்த ஒரு விளையாட்டு வீரன் இதுவரை பிறந்ததில்லை. இந்த கம்பேக் கிங் ஒருநாள் மொத்த டென்னிஸ் உலகிற்கும் ராஜாவாய் முடிசூட்டுவான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement