உலக லெவன் அணியைத் தோற்கடித்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தானில், கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு ஐ.சி.சி-யின் ஆதரவுடன் நடைபெற்ற டி-20 போட்டியில், உலக லெவன் அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

பாகிஸ்தான்


கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பிறகு, அங்கு நீண்ட காலமாக சர்வதேசப் போட்டிகள் நடைபெறாமல் இருந்துவந்தன. இதனிடையே, கடந்த 2015 -ல், ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடியது. ஆனால், அது ஐ.சி.சி-யின் ஆதரவு இல்லாமல்தான் நடைபெற்றது. அந்தத் தொடருக்கு ஐ.சி.சி தனது நடுவர்களை அனுப்ப மறுத்துவிட்டது.


இந்நிலையில், சாம்பியன் ட்ராபி கைப்பற்றியவுடன் அனைவரது கவனமும் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. இப்போதாவது பாகிஸ்தானுக்கு விளையாட வாருங்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஐ.சி.சி அனுமதியுடன் மூன்று டி-20 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, டுபிளெசிஸ் தலைமையில் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி, லாகூரில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. பாபர் அசாம் 52 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அதகளம் செய்தார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய உலக லெவன் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால், அதை அந்த அணி தக்கவைத்துக்கொள்ளவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!