கோலியைச் சீண்டிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்... பதிலடிகொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள்!

பாகிஸ்தானில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐ.சி.சி அனுமதியுடன் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலியை, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் துப்புரவுப் பணியாளர் எனச் சீண்ட, அதற்கு இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் இணைந்து தக்க பதிலடிகொடுத்துவருகின்றனர். 
பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாமல் இருந்துவந்தது. இந்நிலையில், அங்கு மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் கடுமையான முயற்சி எடுத்தது. இதன் பலனாக, தற்போது பாகிஸ்தானில் அந்த அணிக்கு எதிராக, டுபிளெசிஸ் தலைமையில் உலக லெவன் அணி டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. 

அதே வேளை, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியப் பத்திகையாளர் டென்னிஸ் ஃப்ரீட்மேன் என்பவர், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தைக் கோலி சுத்தப்படுத்தும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு, “உலக லெவன் போட்டிக்காகத் துப்புரவுப் பணியாளர்கள் மைதானத்தைச் சுத்தப்படுத்துகிறார்கள்” என ட்வீட் செய்ய, கோலி ரசிகர்கள் கொதித்துவிட்டனர். 
உண்மையில், அந்தப் புகைப்படம் தூய்மை இந்தியா திட்டத்துக்காக, கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற விழிப்புஉணர்வு நிகழ்ச்சியில், கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஈடன் கார்டன் மைதானத்தைச் சுத்தம்செய்தபோது எடுக்கப்பட்டது. 

இதனால் கோபமடைந்த இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து, ஆஸ்திரேலியப் பத்திரிகையாளருக்கு ட்விட்டரில் தக்க பதிலடிகொடுத்துவருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்கள், நாங்கள் கோலி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வந்து விளையாடுவதை ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளோம் என்றும் கூறியுள்ளனர். 

இந்திய ரசிகர் ஒருவர், ”அவர் வளர்ந்து வந்த இடத்தை அவர் சுத்தம்செய்கிறார். நீங்கள் உங்கள் மனதை சுத்தம்செய்யுங்கள்” என ட்வீட் செய்துள்ளார். இதுபோன்று பல ரசிகர்களும் பல விதமாக அவர்களைத் திட்டித்தீர்த்துள்ளனர். டென்னிஸ் ஃப்ரீட்மேன், இதுபோன்று இந்திய வீரர்களைப் பலமுறை சீண்டியுள்ளார். அவை அனைத்துக்கும் சேர்த்து, தற்போது ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் ரசிகர்கள், பாகிஸ்தான் மண்ணில் இந்திய வீரர்கள் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளனர் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்தி உள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!