பெரேரா, ஆம்லா அதிரடியால் பாகிஸ்தானை வீழ்த்திய உலக லெவன் அணி

நீண்ட காலத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் மண்ணில் உலக லெவன் அணி டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டியில், ஆம்லா மற்றும் பெரேராவின் அதிரடி ஆட்டதால் உலக லெவன் அணி வெற்றிபெற்றது. 

world xi vs pakistan

டுபிளெசிஸ் தலைமையில் உலக லெவன் அணி, தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி20 தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானின் கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி, நேற்று அதே மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஃபக்கார் சமான்  மற்றும் ஷேஷாத் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக, பாபர் அஸாம் 45 ரன்கள் எடுத்தார். மாலிக் தன் அதிரடியால், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. உலக லெவன் தர்ப்பில் பத்ரீ, பெரேரா தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். 

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய உலக லெவன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், தமீம் இக்பால் மற்றும் ஆம்லா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இக்பால் 23 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஆம்லா தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தார். போட்டியின் கடைசி இரண்டு ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட, பெரேரா ருத்திரதாண்டவம் ஆடினார். 19-வது ஒவரின் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், கடைசி ஓவரிலும் சிக்ஸர் அடித்து, அந்த அணியை வெற்றிபெறவைத்தார். ஆம்லா 72 ரன்களும் பெரேரா 19 பந்துகளில் 47 ரன்களும் எடுத்தனர். 

இதன்மூலம் மூன்று போட்டிகள்கொண்ட தொடரில் தற்போது, 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி, நாளை நடைபெறுகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!