"ஐ.பி.எல் ஃபைனலில் டிரெஸிங் ரூமில் பேசியது என்ன?" - கலகல ரோஹித் ஷர்மா

‛புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோரே எடுத்திருந்தாலும், பாசிட்டிவ் சிந்தனையும் ஸ்கோர் போர்டை பற்றிக் கவலைப்படாத மனநிலையுமே, மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணம்’ என்றார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா. 

ரோஹித்

சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யு ஷாப்பிங் மாலில் உள்ள அடிடாஸ் நிறுவனத்தின் 'ஹோம் கோர்ட்' (home court) திறப்பு விழாவில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியது:

‛‛சென்னைக்கு வருவது என் வீட்டுக்கு வருவதைப் போன்றது. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று சென்னையில் விளையாடுவதைப் பற்றி நெகிழ்வாகப் பேசினார்.                                                    

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றுவதற்கு என்ன மாதிரியான திட்டங்களை ஓர் அணியாக மேற்கொண்டுள்ளீர்கள்?
இப்போதுதான் சென்னை வந்துள்ளேன். சென்னை நகரம் தரும் அனுபவங்களை உணர வேண்டும். இந்திய அணியிலேயே நான்தான் முதல் ஆளாக இங்கு வந்தூள்ளேன். இன்னும் திட்டங்கள் ஏதும் தீட்டப்படவில்லை. ஓரிரு நாட்களில் போட்டி பற்றி திட்டமிடுவோம். ஸ்மித் சிறந்த வீரர். அவரை விரைவில் அவுட்டாக்க முயற்சிப்போம்.

2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் சிறப்பாக விளையாடினீர்கள். அதையே இம்முறையும் தொடர்வீர்களா?
நிச்சயமாக. அதுபோன்று சிறப்பாக விளையாடவே விரும்புகிறேன். அந்தத் தொடருக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அன்று விளையாடிய ஆஸி அணியிலிருந்து தற்போதைய அணி முற்றிலும் மாறுபட்டுள்ளது. அந்த அணியின் அணுகுமுறை மாறியுள்ளது. இந்திய அணியின் அணுகுமுறையிலும் மாற்றம் உள்ளது. ஒவ்வொரு புதிய தொடரிலும், வித்தியாசமான சூழல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இத்தொடரை புதிதாகத் தொடங்கவே விரும்புகிறேன். கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பது பலன் தராது. இந்த அணுகுமுறை எனக்கு எப்பொழுதும் கைகொடுத்துள்ளது.

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடிக்கொண்டே இருக்கும் நிலையில், உங்கள் உடலை சீராக வைத்துக்கொள்ள என்ன செய்கிறீர்கள்?
தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டிருப்பது என்பது இப்போது தொடங்கியதல்ல. சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடிப் பழகிவிட்டோம். உடல்நிலையை எப்படிக் காப்பது என்பதை நன்கு அறிந்துள்ளோம். பிசியோக்கள், டாக்டர்கள், டிரெய்னர்கள் எங்களுக்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். அதற்காகத்தான் தற்போது வீரர்களுக்கும் சுழற்சி முறையில் ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. எங்களால் 60-70 வயது வரை விளையாட முடியாது. அதனால் முடிந்த வரை சிறப்பாக விளையாட வேண்டும். அதற்கு ஃபிட்னெஸ் ரொம்ப முக்கியம். 

ரோஹித்

ஷிகர் தவான் முதல் 3 போட்டிகளில் ஆடமாட்டார் என்று சற்று முன்னர்  அறிவிக்கப்பட்டுள்ளதே?
 (பலமாக சிரித்துக்கொண்டே) அப்படியா?... எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. நான் கேப்டனோ, அணியின் மருத்துவரோ, பயிற்சியாளரோ கிடையாது. 

அஷ்வின் - ஜடேஜா கூட்டணியிலிருந்து, இப்போது அக்சர் படேல் போன்ற இளம் வீரர்களுடன் இந்திய சுழல் கூட்டணி களமிறங்கப் போகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இது எப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும்?
ஒவ்வொருவருடைய அணுகுமுறையும் வித்தியாசமானது. அக்சர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளப்போகிறார். இதுவரை மிகவும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். சஹால் மற்றும் குல்தீப் நம்பிக்கையான இளம் வீரர்கள். 'ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ்' (wrist spinners) அணிக்கு எப்போதுமே உதவிகரமாக இருப்பார்கள். அவர்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறார்கள்.

நீங்கள் மிகவும் நேசிக்கும் கிரிக்கெட் தவிர்த்து, ரிலாக்ஸ் ஆவதற்கு நீங்கள் விளையாடும் விளையாட்டு எது?
சிறுவயது முதல் கால்பந்து பார்ப்பேன். நிறைய போட்டிகளை நேரடியாக மைதானத்துக்கு சென்று ரசித்துள்ளேன். அவ்வப்போது நண்பர்களுடன் விளையாடுவேன். நண்பர்களுடன் வேடிக்கையாக பொழுதைக் கழிப்பது மிகவும் பிடிக்கும்.

பெர்சனலாக ஓய்வு வேண்டுமென்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நிச்சயமாக இல்லை. நான் இப்போதுதான் ஓய்விலிருந்து மீண்டு வந்துள்ளேன். என்னால் முடிந்தளவு நிறையப் போட்டிகளில் விளையாட வேண்டும். 

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ரோஹித் பதிலளித்துக்கொண்டிருக்கையில் ரசிகர் கூட்டத்திலிருந்த ஒரு சிறுவன் மைக்கை வாங்கி அவரிடம் ஒரு கேள்வி கேட்டான். சுமார் 12 வயது மதிக்கத்தக்க அச்சிறுவனின் கேள்வி ரோஹித் உட்பட அங்கு கூடியிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அச்சிறுவனின் கேள்வி:-

ரோஹித்

ஐ.பி.எல் ஃபைனலில் மிகவும் குறைவான ஸ்கோர் தான் எடுத்தீர்கள். ஆனால் வெற்றி பெற்றீர்கள். இன்னிங்ஸ் இடைவெளியில் வீரர்கள் அறையில் என்ன பேசினீர்கள். அந்த அசாத்திய வெற்றியை சாத்தியமாக்கிய உரையாடல் என்ன?
மிகவும் அற்புதமான கேள்வி. முதலில் பேட் செய்யும்போது எந்த ஸ்கோருமே நல்ல ஸ்கோர் தான். இரண்டாவதாக பந்து வீசும்போது ஸ்கோர் போர்டை பார்க்காமலே இருக்க வேண்டும். நான் வீரர்களிடம் சொன்னது - ' இந்தத் தொடரின் மிகச்சிறந்த செயல்பாட்டை இப்போது நாம் கொடுக்க வேண்டும்' என்பதுதான். ஒரு கேப்டனாக, அணியின் வீரர்கள் அனைவரையும் நான் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பேன். குறைவான ஸ்கோர் தான். ஆனால் எங்களிடம் பூம்ரா, பாண்டியா சகோதரர்கள் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். கடைசி வரை பாசிடிவாக இருந்தோம். வெற்றி வசமானது என்றார். 

ரியல் மாட்ரிட் அணியின் தீவிர ரசிகரான ரோஹித்துக்கு அவரது செல்லப்பெயர் (Hitman) பொறிக்கப்பட்ட ஒரு ரியல் மாட்ரிட் ஜெர்ஸி பரிசளிக்கப்பட்டது. அதன்பின்னர் அடிடாஸ் ஹோம் கோர்ட் ஷோரூமில் அமைக்கப்பட்டிருந்த மினி கால்பந்து கோர்டில் ரசிகர்களுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு விடைபெற்றார் ரோஹித்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!