Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேப்பாக் சேலஞ்ச்... விராட் படையை சமாளிக்குமா ஆஸி அணி! #IndVsAus

 

இதோ... நம் தலைநகரில் இன்று மதியம் தொடங்குகிறது இந்தியா - ஆஸ்திரேலியா (IndVsAus) யுத்தம். இலங்கையை வேட்டையாடிவிட்டு கெத்தாக தமிழ் மண்ணில் கால் பதித்திருக்கிறது கோலி அண்ட் கோ. சாம்பியன்ஸ் டிராபியில் முதல் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலிய அணி அதன்பின் விளையாடும் முதல் ஒருநாள் தொடர் இதுதான். டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு உச்சபட்ச ட்ரீட் அளித்த இந்த இரு அணிகளின் மோதல், முன்பை விடப் பல மடங்கு எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இந்தியா தன் ஆதிக்கத்தை தொடருமா? ஒருநாள் போட்டிகளில் மீண்டும் ஆஸி வெற்றிப்பாதைக்குத் திரும்புமா? அலசுவோம்...

IndVsAus

 

தொலைநோக்குப் பார்வை

இந்த  ஜூலை மாதம் முடிவடைந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர், இந்திய அணியின் 'ஓல்ட்-அப்ரோச்'சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. முன்னாள் மேலாளர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராகி கோலியுடன் கைகோத்ததும் தொடங்கிவிட்டது 'ஆப்ரஷேன் 2019'. அதிரடி முடிவுகள், எதிர்காலத் திட்டங்கள் சத்தமின்றி கதவுகளின் பின்னே எடுக்கப்பட்டன. ஃபார்மை விட ஃபிட்னசிற்கு முன்னுரிமை தரபட்டது - யுவி, ரெய்னா அவுட். அடுத்து அனுபவத்தை விட ஃபார்முக்கு முன்னுரிமை தரப்பட்டது - ஓய்வு என்ற பெயரில் அஷ்வின், ஜடேஜா அவுட் (ஒருநாள் போட்டிகளில் ஃபார்ம் சிறப்பாக இல்லை). ஒவ்வொரு வீரருக்கும் அணியில் என்ன பங்கு என்ற திட்டம் தீட்டப்படுகிறது - சிறந்த பிளேயிங் லெவனில் இடம் இல்லாத ரஹானேவின் துணைக்கேப்டன் பதவி ரோஹித் வசம் செல்கிறது. ஆனால் இவையெல்லாம் ஏதோ அவசர முடிவுகள் இல்லை. இதுவரை இல்லாத வகையில் பக்காவாக பிளான் செய்து அதை எக்சிக்யூட் செய்துகொண்டிருக்கிறது இந்திய அணி. 

இதனால் இந்திய அணிக்கு 100 சதவிகிதம் நன்மையே. ஆஸ்திரேலிய தொடரில் உடனடிப் பலன்கள் கிடைக்கிறதோ இல்லையோ, இதே பாதையில், இதே பிளானிங்கோடு பயணிக்குமாயின் 2019ல் மிகப்பலமான ஒருநாள் போட்டி அணியாக இந்திய இங்கிலாந்து மண்ணில் களமிறங்கும். அதற்காக ஆஸி தொடரில் நாம் பின் தங்குவோம் என்று அர்த்தமில்லை. எந்த வகையில் பார்த்தாலும் ஆஸி அணியை விட இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இலங்கைத் தொடரில் அவ்வப்போது பேட்டிங்கில் சற்று சறுக்கினாலும், மொத்த அணியின் செயல்பாடும் திருப்திகரமாகவே இருந்தது. அனைத்து வீரர்களும் தங்களின் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர். மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற வீரர்கள் அணியில் தங்களின் ரோலை மிகச்சிறப்பாக உணர்ந்துகொண்டுள்ளனர். 

IndVsAus


ஆல் யூனிட்ஸ் ரெடி!
இந்திய அணியைப் பொறுத்தவரை முன்புபோல் பேட்டிங்கை நம்பி மட்டும் களமிறங்காது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடர்களில் ஒரு செஷனில் கோட்டை விட்டாலும், மீண்டு வந்து பிரேக்-த்ரூ கொடுத்தனர் நமது வீரர்கள். நமது பவுலிங் யூனிட் நீண்ட நாட்களுக்குப் பிறகு 'கன்சிஸ்டென்டாக' செயல்பட்டு வருகிறது.  ஷமி, பூம்ரா ஆகியோரோடு 'சிக்கன' புவியும் இப்போது விக்கெட் டேகிங் பவுலராக உருவெடுத்துள்ளார். சாஹல், குல்தீப் என வெரைட்டியான ஸ்பின் அட்டாக் ஆஸி வீரர்களுக்குக் கடும் சவாலாக இருக்கும். "ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை விட இந்திய அணியின் பவுலிங்கே பலமாக இருக்கிறது" என்று ஆஸி முன்னாள் வீரர் கில்லெஸ்பி சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பவுலிங் யூனிட் நாலடி பாய்ந்தால், பெயர்போன நமது பேட்ஸ்மேன்கள் நாற்பதடி பாய்வார்களே..! பாரபட்சமின்றி அட்ராசிட்டி செய்து வருகின்றனர் நமது பேட்ஸ்மேன்கள். "என்னப்பா டீம்ல 7 பேட்ஸ்மேன் தானா? இன்னும் ஒரு ரெண்டு மூணு பேர சேத்துக்கங்கப்பா" என்று சொல்லுமளவு நிரம்பி வழிகிறது. தவான் ஒரு ஆள் விலகினால் அந்த இடத்திற்கு இருமுனைப் போட்டி. அந்த இருவருமே டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் என்பதுதான் இந்திய அணியின் பலம். சற்று அடிவாங்கிய மிடில் ஆர்டரை மனீஷ், ஜாதவ் பலப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ச்சியாக அதிக ஓவர்கள் அவர்கள் விளையாடும்பட்சத்தில் மிடில் ஆர்டர் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படும். சிக்சர் அடித்து ஃபினிஷ் செய்தால் தான் அது ஃபினிஷிங் என்று அர்த்தமல்ல, புவனேஷ்வர் குமாரை அரைசதம் எடுக்கவிட்டு ஆட்டத்தை முடித்துவைத்தாலும் அது ஃபினிஷிங் தான் என்று நிரூபித்துவிட்டார் தோனி. 2019 வரை பேக்-அப் கீப்பர்கள் ரஞ்சியிலும் ஐ.பி.எல்-லில் மட்டும் கவனம் செலுத்தலாம்.


சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இந்தியாவின் டாப் -3 பேட்ஸ்மேன்களின் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் பிரமிப்பு! 5 போட்டிகளில் 1 சதம், 2 அரைசதம் உட்பட 279 ரன்கள் அடித்துள்ளார் ரஹானே. கேப்டன் கோலி 14 போட்டிகளில் 800 ரன்கள் விளாசியுள்ளார். 3 சதமும், 5 அரைசதங்களும் அதில் அடக்கம். ரோஹித் இருவருக்கும் ஒரு படி மேல். தனது கடைசிப் பத்து போட்டிகளில் 3 அரைசதம், 3 சதம் உட்பட 606 ரன்கள் அடித்து நொறுக்கியுள்ளார். மரண ஃபார்மில் இருந்த தவான் முதல் 3 போட்டிகளுக்கு இல்லை. இருந்திருந்தால் டரியல் தான்!
பேட்டிங், பவுலிங்கை விட கோலி ஃபீல்டுங்குக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார். அதிரடி காட்டியும் ஆர்.சி.பி-யின் சர்ஃபராசை வெளியில் உட்கார வைத்தபோதே கோலி ஃபீல்டிங் மீது செலுத்தும் அக்கறை வெளிப்பட்டது. நேற்று நடந்த பிரெஸ் மீட்டில் கூட, ஆல்ரவுண்டர் என்பவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மட்டும் ஜொலிப்பவராக இல்லாமல், நல்ல ஃபீல்டராகவும் இருக்க வேண்டுமென்று தெரிவித்தார். ஆக, இந்திய அணியின் அனைத்து யூனிட்டும் இந்த யுத்ததுக்கு தயார். மைனஸ் என்றால், தவானின் ஸ்டிரைக் ரேட்டை விடக் மிகக்குறைவாய் இருக்கும் ரஹானேவின் வேகம் மட்டுமே.

மீண்டு எழுமா ஆஸி?

IndVsAus

ஆஸி வீரர்கள் அனுபவசாலிகள். ஆனால் இந்தியாவில் ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு மிகக்குறைவு. ஐ.பி.எல் அனுபவம் சிலருக்குக் கைகொடுத்தாலும், ஆகர், கார்ட்ரைட், மேத்யூ வேட், ஹாண்ட்ஸ்கோம்ப் போன்றவர்களுக்கு அந்த அனுபவமும் சொற்பமே. இந்தியா வந்திறங்கிய ஆஸி அணியில், 2013 தொடரில் விளையாடிய வீரர்கள் 4 பேர் மட்டுமே. அதில் கூல்டர்நைல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடவில்லை. ஃபின்ச், காயத்தால் இன்று ஆடப்போவதில்லை. கேப்டன் ஸ்மித், வார்னர் கூட அத்தொடரில் இல்லை. அன்று பேட்டிங்கில் பொளந்துகட்டிய பெய்லியோ இப்போது பாகிஸ்தானில் ஆடிய உலக லெவனில். இந்திய பருவநிலையும், மாநிலத்துக்கு மாநிலம் மாறும் தட்பவெப்ப நிலையும் அவர்களுக்குக் கைகொடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. அவர்கள் கடைசியாக ஆடிய 6 போட்டிகளில், 1 போட்டி நடக்கவே இல்லை, 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை, 3-ல் தோல்விகள். சாம்பியன்ஸ் டிராபியில் 2 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட, வங்கதேசத்திடம் அரையிறுதி வாய்ப்பை இழந்து விசும்பிக்கொண்டிருக்கையில், அதே வங்கதேசத்திடம் முதல் டெஸ்ட்டில் தோல்வி. விரைவில் ஆஸஷ் தொடர் வேறு. போதாக்குறைக்கு ஸ்டார்க் காயத்தால் விலக, இந்திய மண்ணில் ஆடிய அனுபவத்திற்காக ஃபால்க்னரையும் ஃப்ளைட்டில் ஏற்றி வந்துவிட்டனர் ஆஸி அணியினர். 

டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், ஃபின்ச்சின் இழப்பு, வேட், மேக்ஸ்வெல், ஹாண்ட்ஸ்கோம்ப் ஆகியோரின் ஃபார்ம் சற்றுப் பின்னடைவே. ஆஸி அணியைப் பொறுத்தவரையில் வார்னர், ஸ்மித், சாம்பா, கம்மின்ஸ் ஆகியோரையே நம்பியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் அசத்திய சாம்பா, இந்திய மிடில்-ஆர்டருக்கு மிகப்பெரிய சவாலாய் விளங்குவார். கம்மின்ஸ் காயத்திலிருந்து இப்போதுதான் மீண்டுள்ளதால் அனைத்துப் போட்டிகளிலும் ஆடுவதே சந்தேகமே.  


முக்கிய யுக்தங்கள்


ரோஹித் VS கம்மின்ஸ்
கம்மின்ஸின் வேகம் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். மணிக்கு 150 கி.மீ  வேகத்தில் தொடர்ச்சியாகப் பந்துவீசுவதில் கில்லாடி. ஓபனிங் ஓவர்களில் பந்தை பறக்கவிடும் கம்மின்ஸை சமாளித்து ஆடுவது ரோஹித்துக்கு பெரிய சவால். நல்ல டச்சில் இருக்கும் ரோஹித், எந்த சூழ்நிலையிலும் அவசரம் காட்டாமல் வழக்கம் போல் பொறுமையாக இன்னிங்சை  'பில்ட்' செய்தால் கம்மின்ஸின் அச்சுறுத்தலை ஆஃப் செய்யலாம்.


கோலி VS சாம்பா
புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணிக்காக சூப்பராய் பெர்ஃபார்ம் செய்த சாம்பா தான் ஆஸி அணியின் துருப்புச்சீட்டு. ஷேன் வார்னைப் போலவே ஸ்டைல் உடைய சாம்பா, தனது லெக்-பிரேக்குகளால் பேட்ஸ்மேன்களைத் தினற வைப்பதில் கில்லாடி. இலங்கை தொடரில் தஞ்செயாவிடம் ஏற்பட்டதைப் போல் ஒரு சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கோலியின் மிகப்பெரிய பொறுப்பு. தனஞ்செயாவைப் போல் ஆஃப் ஸ்பின்னராக இல்லாவிடிலும் அவ்வப்போது ஆஃப்-பிரேக் போட்டு அலற விடுவார். எனவே அவரைக் கேப்டன் கோலி தனது கூல் ஸ்டைலில் ஹேண்டில் செய்ய வேண்டும்.

IndVsAus


வார்னர் VS பூம்ரா
வங்கதேசத்துடனான டெஸ்டில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்ப 2 சதங்கள் அடித்து அசத்தினார் வார்னர். வார்னரை தொடக்கத்திலேயே காலி செய்யாவிட்டால் மனிதன் நம்மை காலி செய்துவிடுவார். புவி ஒருபுறம் ரன்களைக் கட்டுப்படுத்தினாலும், வார்னரின் விக்கெட் மிக முக்கியம். 30 ஓவர்கள் வரை அவர் களத்தில் நின்றுவிட்டால் ரன்-ரேட் எகிறிவிடும். . ஓபனிங் ஸ்பெல்களில் எப்போதும் பிரேக்-த்ரூ கொடுக்கும் பூம்ரா, வார்னரை டார்கெட் செய்து சாய்க்க வேண்டும்.


தொடர் முழுதாய் நடக்குமா?
இதுவரை ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 7 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றுள்ளது. 2000-01ம் ஆண்டு நடந்த தொடரில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 5 போட்டிகளும் முழுதாய் நடந்துள்ளன. மற்ற 6 தொடர்களிலும், குறைந்தபட்சம் 1 ஆட்டமாவது தடைபட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


உத்தேச அணி:
இந்தியா : ரோஹித் ஷர்மா, ரஹானே, கோலி (கேப்டன்), மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தோனி, ஹர்டிக் பாண்டியா, குல்தீப், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா.


ஆஸ்திரேலியா : வார்னர், ஹெட், ஸ்மித் (கேப்டன்), ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், வேட், ஸ்டோய்னிஸ், ஆடம் சாம்பா, கூல்டர்நைல், கம்மின்ஸ், ஹேசில்வுட்.

 இந்திய கிரிக்கெட் அணியின் வெரைட்டி போட்டோஸ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement