வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (18/09/2017)

கடைசி தொடர்பு:18:29 (18/09/2017)

மெஸ்சி பாதி, கிறிஸ்டியனோ மீதி... கலந்து செய்த சாம்பியன் இவன்! #HBDRonaldoNazario

ரொனால்டோ... இந்தப் பெயரைக் கேட்டதும் கட்டுமஸ்தான ரியல் மாட்ரிட் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உருவம் கண்முன் விரிகிறதா? எனில், நீங்கள் 90-களில் கால்பந்தை தீவிரமாகக் கவனிக்கவில்லை என்று அர்த்தம். மொட்டைத் தலையும், தெற்றுப் பல்லும்தான் இவரின் அடையாளம். மெஸ்சியின் துடிப்பான இடது காலையும், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வலது காலையும் கலந்து செய்த கலவை! 90-களில் கால்பந்து உலகை ஆண்ட முடிசூடா மன்னன். உலகின் முழுமையான முன்கள வீரர்களுள் ஒருவன். பலமும் வேகமும் சேர்ந்து மிரட்டும் டெக்னிக்கல் நாயகன். ஃபினிஷிங்கில் செஞ்சுரி அடிக்கும் ”கிளினிக்கல் ஃபினிஷர்”. கவுண்டர் அட்டாக் ஸ்பெசலிஸ்ட். வலதுகாலில் கோல் அடிப்பது அசால்ட்டு என்றால், இடது காலில் அடித்த  கோல்கள் ஏராளம். பிரேசில் தேசிய அணிக்கு இரண்டு உலகக் கோப்பைகளைப் பெற்றுத்தந்தவன்.

Ronaldo Nazario

பலத்திலும் வேகத்திலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அப்பன். டிரிப்பிளிங்கிலும் நட்மெக்கிலும் (எதிரணி வீரரின் கால்களுக்கிடையில் பந்தை தள்ளி ஏமாற்றுதல்) மெஸ்சியின் முன்னோடி. கால்களாலே கபடி ஆடுவதில் நெய்மாருக்கு சித்தப்பன். கோல் பாக்சிற்கு பந்துடன் நுழையும் முன்னரே எதிரணி வீரர்களை ஏமாற்றுவதில் கில்லி. கோல் அடிக்குமுன் எதிரணியின் கோல் கீப்பர்களைக் கதற விடுவது இவர் வாடிக்கை. பிரேசில் உருவாக்கிய கால்பந்து ஜாம்பவான்களில் தலைசிறந்தவன். இன்று பிறந்தநாள் காணும் நாயகன் ரொனால்டோ நசாரியோ.

ரொனால்டோவின் ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு தெரியும் மேற்சொன்னவை எல்லாம் சொற்பம் என்று...

யார் இந்த ரொனால்டோ?

இயற்பெயர் : ரொனால்டோ லுயிஸ் நசாரியோ டி லிமா. 18 செப்டம்பர் 1976-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அப்போதைய பிரேசில் இளைஞர்களைப் போல் கால்பந்துதான் வாழ்க்கை என முடிவு செய்தார். 16 வயதில் க்ரூசெய்ரோ என்ற சிறிய கிளப்பில் சேர்ந்து தன் கரியரை ஆரம்பித்தார். அதே வருடம் நவம்பரில் பாஹியா அணிக்கு எதிராக 5 கோல்கள் அடித்தபோதே ‛யார் இவன்’ என கால்பந்து ரசிகர்கள் புருவம் உயர்த்தினர். ”முதன் முதலாக அவரை க்ரூசெய்ரோவில் விளையாடிக்கொண்டிருந்த போதுதான் பார்த்தேன். பிரமித்தேன். அந்த ஆட்டத்தில் இந்தப் பொடியன் அடித்தது ஐந்து கோல்கள். அப்போதே நான் வேற மாதிரி பிளேயர் என உலகுக்குச் சொல்லி விட்டான்” என ரொனால்டோவைப் பற்றி பின்னாளில் சிலாகித்தார் பிரேசிலின் முன்னாள் டிஃபெண்டரும் லெஜண்டுமான கஃபு.

Ronaldo Nazario

இவ்வளவு திறமையான வீரன் பிரேசில் அணியில் இணையாமல் போனால்தானே ஆச்சர்யம். ஆம், பிரேசில் தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. தன் 17 வது வயதில் 1994-ம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்கு எதிரான நட்புப் போட்டியில் அறிமுகமானார் ரொனால்டோ. அதே ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்கும் தேர்வானார். ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1997 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற  கோபா அமெரிக்கா தொடர்களில் மிரட்டினார். குறிப்பாக 1999 கோபா அமெரிக்க தொடரின் டாப் ஸ்கோரர், சிறந்த வீரரும் இவரே. முன்னதாக 1997-ல் நடந்த கன்ஃபெடரேசன் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரொனால்டோ அடித்த ஹாட்ரிக்  கோல், முதன்முதலாக பிரேசில் அணி கன்ஃபெடரேசன் கோப்பையை கைகளில் ஏந்தக் காரணமானது.

ஃபிரான்ஸில் 1999-ல் நடந்த உலகக் கோப்பையிலும் முத்திரை பதித்தார் ரொனால்டோ. ஆனால் ஃபிரான்சுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கன்சல்சிவ் ஃபிட் எனும் மூளை நோயால் பாதிக்கப்பட்டார். வீரர்கள் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டாலும் பல சமாதானங்களுக்குப் பிறகு களமிறங்க அனுமதிக்கப்பட்டார். விடாப்பிடியாக களம் இறங்கிய அவரால் பலம் பொருந்திய  ஸ்ட்ரைக்கராக ஜொலிக்க முடியவில்லை. பிரான்ஸ் கோல் கீப்பருடன் மோதியதில் காயம் வேறு. விளைவு இறுதிப்போட்டியில் பிரேசில் அணி மண்ணைக் கவ்வியது. கண்ணீர் மல்க ரொனால்டோ வெளியேறினார். அத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருது எந்தவகையிலும் அவரை திருப்திபடுத்தவில்லை.

 

 

 2002-ல் அடுத்த உலகக் கோப்பை. ஆனால் 2000-ல் வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரொனால்டோ தகுதிச் சுற்று போட்டிகளில் பங்கேற்கவில்லை. தகுதிச்சுற்றுப் போட்டிகளில் தடுமாறிய பிரேசில் அணி, ஒருவழியாக சமாளித்து உலகக் கோப்பையில் பங்கேற்றது.  2002-ம் ஆண்டு  ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் நடந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி. அதுவும் அசுர பலம் பொருந்திய ஜெர்மனிக்கு எதிராக. பிரேசிலும் லேசுப்பட்ட அணி அல்ல. குறிப்பாக அட்டாக்கிங் திரிசூலமாக ரிவால்டோ, ரொனால்டோ மற்றும் ரொனால்டினோ ஆகியோர் வரிசைகட்டி நின்றனர்.  இரு பக்கங்களிலும் தீப்பறந்தாலும் கோல்கள் விழவில்லை. ஜெர்மனி கோல்கீப்பரான ஆலிவர் கானை தாண்டிப் பந்து செல்லவில்லை.

இக்கட்டான நேரத்தில் கோல் அடிப்பவன்தானே வீரன்; ஜாம்பவான். ரொனால்டோ ஜாம்பவான். ஆம், இரண்டு சூப்பரான கோல்களை பதிவு செய்து பிரேசில் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஐந்தாவது முறையாக பிரேசில் உலக சாம்பியன். காரணகர்த்தா ரொனால்டோ. ஒட்டுமொத்த தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியைத் தவிர அனைத்து போட்டிகளிலுமே கோல் அடித்து டாப் ஸ்கோரருக்கான தங்க ஷூ விருதையும் தட்டிச் சென்றார். வெற்றிக்குப் பின்னர் வின்னருக்கான பதக்கத்தை பீலேவிடமிருந்து வாங்கியபோது, ரொனால்டோ ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள் (12 கோல்கள்) அடித்திருந்த பீலேவின் சாதனையையும் சமன் செய்திருந்தார்.

 

 

2006 உலகக் கோப்பையில் ரொனால்டோ சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பிரேசில் காலிறுதியோடு நடையைக்கட்டியது. இளம் வீரர்களின் வருகையும் அதிகரிக்க, காயங்களும் வாட்டி எடுக்க, மெல்லமெல்ல பிரேசில் அணியை விட்டு விலகத்தொடங்கிய ரொனால்டோ 2011ம் ஆண்டு நடந்த ரோமானியா அணிக்கு எதிரான நட்புப் போட்டியுடன் சர்வதேச போட்டிகளுக்கு குட்பை சொன்னார். பிரேசில் அணிக்காக 98 போட்டிகளில் 62 கோல்களை அடித்து பீலேவுக்கு பிறகு இரண்டாவது டாப் ஸ்கோரராக இருக்கிறார்.

கிளப் போட்டிகளிலும் சாதாரண ஆளில்லை. உலகின் தலைசிறந்த அணிகளாக கருதப்படும் ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட், இத்தாலியின் இண்டர் மிலன் மற்றும் ஏ.சி மிலன் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக பல்வேறு கிளப் அணிகளுக்காக 518 போட்டிகள் விளையாடிய ரொனால்டோ 352 கோல்களை பதிவு செய்துள்ளார். 2011-ம் ஆண்டில் கிளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

Ronaldo Nazario

18 வருட கால்பந்து வாழ்க்கையில் முழங்கால் காயம், முன்கால் எலும்பு முறிவு, கால் மூட்டெலும்பு சிதைவு, கை முறிவு என ஐந்து முறை பெரிய காயங்களால் பாதிக்கப்பட்ட ரொனால்டோ 1,082 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்திருக்கிறார். அதிலும் 2000-ம் ஆண்டு ஏற்பட்ட முழங்கால் காயத்துக்குப் பின் இனி கால்பந்து விளையாடுவதே கனவாகத்தான் இருக்கும் என மருத்துவ உலகத்தால் கைவிரிக்கப் பட்ட போதும், மீண்டு வந்து உலகக் கோப்பையை வென்று தந்தார். வெற்றிகளை அவர் துரத்திய போதெல்லாம் காயங்கள் அவரை விடாமல் துரத்தியது அவரின்  துரதிர்ஷ்டம். இறுதியாக கொரிந்தியன்ஸ் அணியிலிருந்து ஓய்வுபெறும்போது கூட ஹைப்போதைராய்டிசம் என்னும் சோர்வு மற்றும் உடல் எடை கூடும் நோயால் பாதிக்கப்பட்டார். 

இரண்டு முறை Ballon d'or (1997 மற்றும் 2002) விருது, தங்க ஷூக்கள், தங்க பந்துகள் என அவர் வாங்கிய விருதுகள் இன்றும் அவரது பெருமையைப் பறைசாற்றும். பிரேசிலைத் தாண்டி,எல்லா நாட்டு கால்பந்து ரசிகர்கள் மனதிலும் நீங்கா ஒரு இடத்தைப் பிடித்தவர்தான், போராட்டக் குணம் கொண்ட இந்த ரொனால்டோ. க்ளப்களில் பரம வைரிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), ஏ.சி மிலன் - இன்டர் மிலன் (இத்தாலி) என எல்லா க்ளப்களிலும் விளையாடியபோதிலும், யாராலும் வெறுக்கப்படாத ஒரே வீரர் ரொனால்டோ மட்டுமே. 

ஹாப்பி பர்த்டே ரியல் ரொனால்டோ!


டிரெண்டிங் @ விகடன்