இலங்கைக்கு வழிவிட்ட வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

Photo Credit - ICC


 ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டி, மழையால் 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜானி பேரிஸ்டோவின் சதத்தின் உதவியால் 30.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஜானி பேரிஸ்டோவ் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கனவைத் தகர்த்தது. 

இங்கிலாந்து அணிக்கெதிரான  ஐந்து போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரை  5-0 அல்லது 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற முடியும் என்ற நிலையில், வெஸ் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்தத் தோல்வியின்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி, சர்வதேசத் தர வரிசையில் கடைசி 3 இடங்களில் உள்ள ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்றில் விளையாடியே உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதிபெற முடியும். 1975 மற்றும் 1979-ம் ஆண்டுகளில், உலகக் கோப்பை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக் கோப்பை தொடர் ஒன்றுக்கு நேரடியாகத் தகுதிபெற இயலாதது, அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதன்மூலம், 8-வது அணியாக உலகக் கோப்பைத் தொடருக்கு இலங்கை அணி தகுதிபெற்றது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர், இங்கிலாந்தில் நடைபெறுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!