வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (20/09/2017)

கடைசி தொடர்பு:14:51 (20/09/2017)

’தோனிக்கு பத்மபூஷண் விருது’ - பி.சி.சி.ஐ பரிந்துரை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு, பத்மபூஷண் விருது வழங்க இந்தியக் கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) பரிந்துரைசெய்துள்ளது. 

Photo Credit: BCCI


நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதுக்கு தோனியின் பெயரை மட்டும் பரிந்துரைசெய்துள்ளதாக, பி.சி.சி.ஐ வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன. இதுதொடர்பாகப் பேசிய பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ‘இரண்டு உலகக் கோப்பைகளை (2007 - டி20 உலகக் கோப்பை, 2011- 50 ஓவர் உலகக் கோப்பை) இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்த தோனி, நிச்சயம் இந்த விருதுக்குத் தகுதியானவர். தோனியின் பெயரைப் பரிந்துரைசெய்வதில் பி.சி.சி.ஐ உறுப்பினர்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. தோனியின் பெயரை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தே பரிந்துரைசெய்துள்ளோம். நடப்பு ஆண்டில் பத்மபூஷண் விருதுக்கு தோனியின் பெயரை மட்டுமே பரிந்துரைசெய்துள்ளோம்’ என்றார். 

இதுவரை, 302 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 9,737 ரன்கள் குவித்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1,212 ரன்களையும் குவித்துள்ளார். இரண்டு உலகக் கோப்பைகள் தவிர, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டெஸ்ட் தர நிலையில் முதலிடம் என தோனி தலைமையில், இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.