ஜப்பான் ஓப்பன் பேட்மின்ட்டன்: மீண்டும் மோதும் சிந்து-ஒக்குஹரா

ஜப்பான் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் தொடர், ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் நடைபெற, ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள்  நேற்று நடைபெற்றன. 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடினர். இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீன வீரரை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், ஸ்ரீகாந்த் 21-15, 12-21, 21-11 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றார். மற்ற இந்திய வீரர்களான பிரணாய் மற்றும் வெர்மா ஆகியோர், காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். சாய் ப்ரணீத் தோல்வியடைந்து வெளியேறினார். 

பெண்கள் ஒற்றையரில், இந்தியாவின் சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் 21-17, 21-9 என எளிதில் வெற்றிபெற்றார். மற்றொரு நட்சத்திர வீராங்கனையான பி.வி சிந்துவும் தனது முதல் போட்டியில் வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்திய வீராங்கனைகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. 

பி.வி. சிந்து, ஜப்பானின் ஒக்குஹராவை எதிர்கொள்கிறார். கடந்த கொரிய ஓப்பன் மற்றும் அதற்கு முந்தைய சாம்பியன்ஸ் தொடர் இறுதிப் போட்டியில், பி.வி. சிந்து ஒக்குஹராவை எதிர்கொண்டார். இந்த இரு சந்திப்பில், இருவரும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தனர். இருவரும் விட்டுகொடுக்காமல் ஆடுவதில் சிறந்தவர்கள் என்பதால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும். 

அதேபோன்று, சாய்னா நேவாலும் தனது அடுத்த போட்டியில், உலகின் முன்னணி வீராங்கனையும் கடந்த ஒலிம்பிக் சாம்பியனுமான கரோலினா மரினை எதிர்கொள்கிறார். ஜப்பான் ஓப்பன் தொடரில் உலகின் முன்னணி வீரர்- வீராங்கனைகள் அனைவரும் கலந்துகொள்வதால், முதல் சுற்றிலிருந்தே போட்டி கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கலப்பு இரட்டையரில், இந்திய இணைகளான ரான்கி ரெட்டி - பொன்னப்பா மற்றும் ப்ரணவ் சோப்ரா- சிக்கி ரெட்டி இணை முதலாவது சுற்றில் வெற்றி கண்டு, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!