இந்தூரும் இந்தியாவும்….தொடருமா வெற்றிப் பயணம்? #IndVsAus

சென்னை, கொல்கத்தா இரண்டு ஊர்களிலும் வெற்றிபெற்று இந்தூரில் நடக்கும் மூன்றாவது போட்டியை எதிர்நோக்கியுள்ளது இந்திய அணி. அந்நிய மண்ணில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வியடைந்ததால், மூன்றாவது ஒருநாள் போட்டியில் முத்திரை பதிக்கக் காத்திருக்கிறது உலக சாம்பியன். ஸ்மித் அண்ட் கோ மீண்டு வருமா? இந்தப் போட்டியை மட்டுமல்லாது தொடரையும் (#IndVsAus) வெல்லுமா விராட் படை? 

IndVsAus

அக்டோபர் 14, 2015. தென் ஆப்பிரிக்காவை 22 ரன்களில் வீழ்த்தியிருந்தது இந்திய அணி. Presentation ceremony தொடங்கியது. வெற்றி கேப்டனான தோனி, அப்படியே ஆட்ட நாயகன் விருதையும் வாங்கி வருகிறார். ஸ்டேடியத்தில் இருந்த 30,000 ரசிகர்களும் ஆர்ப்பரிக்கின்றனர். நீல உடையில், இந்திய மண்ணில், அவர் வாங்கிய கடைசி ஆட்ட நாயகன் விருது அது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே அந்த விருதை வென்றிருக்கிறார். அதுவும் வெஸ்ட் இண்டீசில். அந்த விருதை மீண்டும் இதே இடத்தில் தோனி வாங்குவாரா? வாங்க வேண்டும் என்று காத்திருக்கிறது இந்தூர் ஹோல்கர் மைதானம்!

நம்மோட ராசி நல்ல ராசி

இந்தூர் மைதானம் இந்திய அணிக்கு மிகவும் ராசியானது. இதுவரை இங்கு விளையாடியுள்ள நான்கு ஒருநாள் போட்டிகளையும் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் நடந்த ஒரே டெஸ்ட் போட்டியிலும் வெற்றி. இப்படி வெற்றிகளை வழங்கியிருக்கும் மைதானத்தில் தான் தொடரை நிர்ணயிக்கும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அந்தப் போட்டியில் 20 ஓவர்கள் டெய்ல் எண்டர்களுடன் ஆடி, ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்தார் தோனி. அதோடு நிற்காமல் 3 கேட்சுகள், 1 ஸ்டம்பிங் வேறு. மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியிருந்த நிலையில் ரஹானேவும் அரைசதம் கண்டிருந்தார். ஆம், ரஹானேவுக்கு இந்த ஸ்டேடியும் ரொம்பவுமே ராசி. சென்ற ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் விளாசினார் அஜிங்க்யா. அந்த ஆட்டத்தில், கோலி ஒருபடி மேலே சென்று இரட்டைச் சதம் விளாசினார். கோலியாவது டெஸ்டில் தான். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம் பார்த்து, ஒருநாள் போட்டியிலேயே இரட்டைச் சதம் அடித்தார் சேவாக். அதுவும் இங்கு தான்.

இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் அள்ளினார் ஸ்ரீசாந்த். அஷ்வின், நியூசிலாந்துடனான டெஸ்டில் 13 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அக்சர் படேல், யுவராஜ் ஆகியோரும் இந்த மைதானத்தில் விக்கெட் வேட்டை நடத்தியுள்ளனர். இப்படி இந்த மைதானத்தில், ஒவ்வொரு போட்டியிலும் இந்திய வீரர்கள் ‘ஒன் மேன் ஷோ’ நடத்தியுள்ளனர்.

IndVsAus

 

மனீஷ் VS ராகுல்

இந்நிலையில் ராசியான இந்த மைதானத்தில் இந்திய அணி நம்பிக்கையுடன் ஆஸி அணியை எதிர்கொள்ளும். கோலி, ரஹானே, பாண்டியா நல்ல டச்சில் இருக்கிறார்கள். ஜாதவ், தோனி நன்றாக செட்டில் ஆகிவிட்டால் பெரிய ஸ்கோர் எடுத்துவிடுவார்கள். பவுலிங் யூனிட் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. சாஹல், குல்தீப் சுழல் கூட்டணி இரண்டு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். ஹாட்ரிக் நாயகன் குல்தீப்பை மீறி ஜடேஜாவுக்கு அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியே. புவியின் மேஜிக்கல் பவுலிங் தொடரும் பட்சத்தில் ஆஸி டாப் ஆர்டரை ஆட்டம் காண வைக்கலாம். தென்னாப்பிரிக்காவுடன் இங்கு நடந்த போட்டியில் புவி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

இந்திய அணியின் முக்கியப் பிரச்னை ஃபீல்டிங். இத்தொடரில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை நழுவ விட்டுள்ளனர். அடிக்கடி மிஸ்ஃபீல்டிங்காலும் ரன் போகிறது. ஃபீல்டிங்கின் போது வீரர்கள் ஷார்ப்பாக இருப்பது அவசியம். ரோஹித் – ரஹானே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ‘கிளிக்’ ஆவதும் அவசியம். பவுலிங்கில் குல்தீப் கன்சிஸ்டென்டாக பந்துவீச வேண்டும். மேக்ஸ்வெல்லுக்கு பந்து வீச அவர் ‘பிளான் பி’ வைத்திருப்பது நல்லது.

IndVsAus

மற்றொரு பெரிய பிரச்னை 4-வது இடத்தில் யாரை இறக்குவது?  இலங்கை தொடரில் அசத்திய மனீஷ் பாண்டே இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 3 ரன்களே எடுத்துள்ளார். அவருக்குப் பதிலாக ராகுல் களமிறக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இன்றைய போட்டியில் மனீஷுக்கு ஒரு வாய்ப்பு வழங்கலாம். ராகுல் அடித்து ஆடக்கூடியவர். மிடில் ஆர்டரில் ஜாதவ், ராகுல், பாண்டியா என அனைவரும் ஒரே மைண்ட் செட்டில் ஆடும் வீரர்களாக இருக்கும்பட்சத்தில் அது அணிக்குப் பின்னடைவாக அமையும். 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் 193 ரன்கள் எடுத்துள்ளார் மனீஷ். அவருக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கலாம்.

மீண்டு வருமா அஸி?

ஆஸ்திரேலிய அணிக்கு இது போதாத காலகட்டம். அந்நிய மண்ணில் தொடர்ந்து 10 ஒருநாள் போட்டிகளில் தோல்வி. இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டும். இல்லையேல் தொடரை இப்போதே இழக்க நேரிடும். எனவே நிச்சயமாக ஸ்மித் பல புதிய திட்டங்கள் தீட்டியிருப்பார். வெற்றி முக்கியம் என்பதால், இன்னும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தயாராகாத கார்ட்ரைட்டுக்குப் பதில் ஹாண்ட்ஸ்கோம்பை இறக்குவது நல்லது. ட்ராவிஸ் ஹெட் ஓபனிங்கில் வார்னருடன் இணைந்து நல்ல தொடக்கம் கொடுக்கலாம். ஆஷ்டன் அகருக்குப் பதிலாக மீண்டும் ஜாம்பாவையே அணியில் சேர்த்தால், அணிக்கு வலு சேர்க்கும்.

இந்திய மண்னில் வார்னரின் சொதப்பல் தொடர்கிறது. மிகவும் திணறுகிறார். மேத்யூ வேடின் மோசமான ஃபார்ம் அணிக்குப் பெரும் பின்னடைவு. கடந்த போட்டியில் அசத்திய வேகப்பந்து கூட்டணி இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்குப் பெரும் சவாலாக இருக்கும். முதல் இரண்டு போட்டிகளில், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் இருவரையும் பந்துவீச்சில் அதிகம் பயன்படுத்தாத ஸ்மித் இந்தப் போட்டியில் அவர்களை அவசியம் பயன்படுத்த வேண்டும்.

IndVsAus

வழிவிடுவாரா வருண பகவான்?

முதலிரு போட்டிகளைப் போலவே இந்தப் போட்டிக்கும் மழை அச்சுறுத்தல். கடந்த ஒரு வாரமாக இந்தூரில் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான நாட்கள் மைதானம் மூடப்பட்டே இருக்கிறது. இன்றும் மழைவருவதற்கான அறிகுறி இருப்பதாகத் தெரிகிறது.

உத்தேச அணி:

இந்தியா : ரஹானே, ரோஹித், கோலி, மனீஷ் பாண்டே, ஜாதவ், தோனி, ஹர்திக், புவனேஷ்வர் குமார், குல்தீப், சாஹல், பும்ரா.

ஆஸ்திரேலியா : வார்னர், ட்ராவிஸ் ஹெட், ஸ்மித், ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், ஜாம்பா, கம்மின்ஸ், கோல்டர் நைல், ரிச்சர்ட்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!