வெளியிடப்பட்ட நேரம்: 08:16 (24/09/2017)

கடைசி தொடர்பு:08:23 (24/09/2017)

இதேநாளில் அன்று - இந்திய அணி வெற்றி வாகை சூடியது! #10YearsOf2007T20WC..

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஐசிசி நடத்திய முதல் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்து இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைகிறது.

dhoni

 

2007 ஆம் ஆண்டு, செப்டம்பர் 24 ஆம் தேதி, இந்திய கிரிக்கெட் அணிக்கு புது அத்தியாயம் தொடங்கியது என்றே கூறலாம். காரணம் அதே ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி  லீக் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்திய வீரர்களின் பெயர் மட்டுமல்லாமல் அவர்களது வீடுகளும் கடும் சேதாரமடைந்தது. உலகக் கோப்பையில் தோல்வியடைந்த விரக்தியில் டி20  உலகக்கோப்பையை  ஆட மூத்த வீரர்களும் தயக்கம் காட்டினர். எனவே கங்குலி,சச்சின், டிராவிட் டி20  உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. சச்சின் டெண்டுல்கர் அறிவுரையின்படி அப்போதைய இளம் வீரரான மகேந்திர சிங் தோனிக்கு கேப்டன் பொறுப்பு அளித்து இளம் வீரர்கள் அடங்கிய அணியை பிசிசிஐ  தேர்வு செய்தது.

’மூத்தவீரர்கள் இடம் பெற்ற அணியே மோசமான தோல்வியைத் தழுவியது. இதில்  இந்த இளம் அணி என்ன சாதித்து விடும்’ என்று இந்திய ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் எண்ணினர்.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தோனி தலைமையிலான அந்த அணி தென்னாப்பிரிக்கா சென்றது.

dhoni

குரூப் D'இல் இடம் பெற்ற இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடன் மோத நேர்ந்தது. ஆனால் தொடர் மழையால் அப்போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது போட்டியில் இரு அணிகளும் 141 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. எனவே இப்போட்டியின் மூலம் கிரிக்கெட் போட்டிகளில்  முதல் முறையாக பவுல் அவுட் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர்-8  சுற்றுக்கு தகுதி பெற்றது.

சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியுற்ற இந்திய அணி, அடுத்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இங்கிலாந்துடனான போட்டியில் ஸ்டூவர்ட் பிராடு வீசிய ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்சரடித்து இந்திய வீரர் யுவராஜ் சிங் உலக சாதனை படைத்தது பசுமையான நினைவாகும்.

செப்டம்பர் 22 ஆம் தேதி,முதல்  அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2ஆம்   அரையிறுதிப் போட்டியில்  ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி  மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 188 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அனைத்து ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப்போட்டிக்கு அந்த நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். செப்டம்பர் 24ஆம் தேதி, ஜோகன்ஸ்பெர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒரு பக்கம் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற,  தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பிர் சிறப்பாக ஆடி 54 பந்துகளில்75 ரன்கள் விளாசினார். கடைசியில் அதிரடி காட்டிய ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30  ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 157 ரன்கள் எடுத்தது.

158 ரன்கள் என்ற உலகக் கோப்பை வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் கண்டது. பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.முதல் ஓவரிலேயே நட்சத்திர வீரர் ஹபீஸ் அவுட் ஆகி வெளியேனார். மற்றோரு தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் நசீர் அதிரடியாக 33 ரன்கள் அடித்த போதும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஆனால் மிஸ்பா உல் ஹக்  மட்டும் நிதானமாக ஆடி போட்டியை சமநிலையில்  கொண்டு சென்றார்.

வெற்றி பெற 4 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்பஜன்  சிங் வீசிய ஓவரில் 3 சிக்சரும், ஸ்ரீசாந்த் வீசிய ஓவரில் 2 சிக்சரும் அடித்து பாகிஸ்தான் அணி மிரட்டியது. உலகக் கோப்பையை வெற்றி பெற, கடைசி ஓவரில், பாகிஸ்தான் அணி  13 ரன்களும் இந்திய அணி வெற்றி பெற ஒரு விக்கெட்டும் தேவை என்ற நிலை உண்டானதால் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியை  தொலைக்காட்சியில் கண்டுகொண்டிருந்த ரசிகர்களுக்கும் இதயத்துடிப்பு பன்மடங்கு எகிறியது.

ஹர்பஜன் சிங் கடைசி ஓவரை வீசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கேப்டன் தோனி, ஜோகிந்தர் ஷர்மாவை பந்து வீச அழைத்தார். "என்ன நடந்தாலும் சரி. இந்த முடிவால் வரும் பின்விளைவுகளை நான் சந்தித்துக்கொள்கிறேன். நீ கவனம் சிதறாமல் பந்து வீசு" என்று தோனி கூறியதாக ஜோகிந்தர் பின்னர் ஒரு பேட்டியில் கூறினார். முதல் பந்தை வைட் ஆக்கிய ஜோகிந்தர், அடுத்த பந்தில் ஒரு சிக்சை விட்டுக்கொடுத்து அனைத்து இந்திய ரசிகர்களின் இதயத்தையும் உடைத்தார். அடுத்து நான்கு பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மகிழ்ச்சியில் மிதந்தனர். அடுத்து அவர் வீசிய பந்தை, மிஸ்பா ஸ்கூப் ஷாட் அடிக்க, அதை ஷார்ட் பைன் லெக்கில் நின்ற ஸ்ரீசாந்த் பிடித்தார். இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இந்த உலகக் கோப்பை வெற்றி, இந்திய அணிக்கு உலகத்தர கேப்டன் ஒருவரை தந்து உதவியது. போட்டி முடிந்த பின் பேசிய கேப்டன் தோனி, இந்த வெற்றியை தனது வாழ்நாள் பொக்கிஷமாக கருதுவதாக தெரிவித்தார். இந்த வெற்றிக்கு முழு அணியே காரணம் என்று தனது அணியை பாராட்டினார். இந்த உலகக் கோப்பை வெற்றி, அணியின் மற்ற வீரர்களின் எதிர்கால கிரிக்கெட் பயணத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இன்றுடன் டி20 உலகக் கோப்பையை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், இனி வரும் காலங்களிலும் இந்திய அணி உலகக் கோப்பைகளை வென்று சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.