'இந்திய அணியின் வெற்றிக்காக எந்த வரிசையிலும் களமிறங்கி விளையாடுவேன்' - ஹிர்திக் பாண்ட்யா பேச்சு

'இந்திய அணியின் வெற்றிக்காக எந்த வரிசையிலும் களமிறங்கி விளையாடுவேன்' என இந்திய வீரர் ஹிர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

ஹிர்திக் பாண்டியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து ஒரு நாள் போட்டித் தொடரின் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இந்தூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்தது. ஆரோன் பிஞ்ச் 124 ரன்னும், ஸ்மித் 63 ரன்னும், வார்னர் 42 ரன்னும் எடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ரோகித் சர்மா, ரகானே மற்றும் ஹிர்திக் பாண்ட்யா ஆகியோர், அரை சதம் கடந்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்டோன் அகர் பந்து வீச்சில், 4 சிக்சர் விளாசினார், ஹிர்திக் பாண்ட்யா. ஹிர்திக் பாண்ட்யா 72 பந்தில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த வெற்றியின்மூலம், 5 போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில், ஆட்ட நாயகன் விருதுபெற்ற ஹிர்திக் பாண்ட்யா பேசும்போது, "அணியின் வெற்றிக்காக எந்த வரிசையிலும் களமிறங்கி விளையாடத் தயாராக இருக்கிறேன். இதை நான் சவாலாகத்தான் நினைக்கிறேன். அணிக்கான எனது பங்களிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் நினைக்கிறேன்" என்றார். ஆஸ்திரேலியாவுடனான தொடரில், 3-0 என தொடரைக் கைப்பற்றி இருப்பதால், இந்திய அணி தர வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!