யார் இந்தப் பொடியன்... இந்திய கிரிக்கெட்டின் புது சென்சேஷன்! #ShubhangHegde

கடந்த சனிக்கிழமை இரவு ப்ரோ கபடி பார்த்துவிட்டு சேனல்களை மாற்றியபோது, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டியின் Presentation Ceremony நடந்துகொண்டிருந்தது. கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் பரிசளிப்பு விழா. பெரும்பாலும் பார்த்துப் பழகிடாத முகங்கள். அப்போதுதான் ஒரு விருதை வாங்கிக்கொண்டு போன ஒரு வீரன், மீண்டும் இன்னொரு விருதினை வாங்கிச் சென்றான். பிஞ்சு முகம். 18-19 வயது இருக்கும் என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, "The young promising player of the Tournament award goes to...Shubhang Hegde" - என்று வர்ணனையாளர் சாரு அறிவித்ததும், அதே இளம் வீரன் மூன்றாவது விருதை வாங்க வருகிறான். அந்த ஃபைனலின் Promising young player விருதையும், ஆட்டத்தின் சிறந்த பெளலருக்கான விருதையும் கூட அவன்தான் வென்றிருந்தான். 

Shubhang Hegde

ஸ்டுவர்ட் பின்னி, மனீஷ் பாண்டே, ஸ்ரீநாத் அரவிந்த் ஆகிய இந்திய வீரர்கள் நிறைந்த பெலகாவி அணியில் இப்படியொரு ஆளா? அவன் ஸ்பின்னர் என்று சாரு தெரிவித்திருந்ததால் எனக்குள் ஒரு ஆர்வம். அவனைப்பற்றி கூகுள் செய்தேன். விக்கிபீடியா பக்கம் இல்லை. எந்த கிரிக்கெட் இணையத்திலும் அவர் Profile இல்லை. கடந்த வருடம் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை கிளிக் செய்தேன். முதல் வரியே தூக்கிவாரிப்போட்டது. அவனுக்கு அப்போது வெறும் 15 வயது. ஆம், கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் இந்த சீசனில் தன் சுழற்பந்துவீச்சால் சுழன்றடித்த 16 வயது சூறாவளிதான் அந்த சுபாங் ஹெக்டே!


'சரி, அந்தப் பையன் அப்படி என்னதான்பா பண்ணான்?'. ஆவல் மேலிட,  Hotstar-ல் அந்த இறுதிப் போட்டியைப் பார்த்தேன். அவ்வப்போது 'இந்த சீசனின் சிறந்த அணி' என்று 11 சிறந்த வீரர்கள் கொண்ட அணியை டிஸ்ப்ளே செய்து கொண்டிருந்தனர். அதிலும், அந்தச் சிறுவனின் முகம். ஆம், சிறுவன்தான். 16 வயதுக்காரனை சிறுவன் என்றுதானே சொல்ல முடியும்! ஆட்டத்தின் 4-வது ஓவர். பவர்பிளே வேறு. எந்த சலனமும் இன்றி பந்தைக் கையில் வைத்திருந்தான் ஹெக்டே. ரோனித் மோரே பேட்டிங். Left arm orthodox. ஷார்ட் லெங்த்தில் வீசப்பட்ட பந்து, அற்புதமாக டர்ன் ஆகி ஆஃப்-சைடில் வெளியே சென்றது. அடுத்த பந்தும் அப்படியே. அதுவரை ஆஃப் சைடு பந்துகளை விளாசிக் கொண்டிருந்தார் தாஹா. இந்த முறை பந்து டர்ன் ஆகவில்லை. பேட்ஸ்மேனின் கணிப்புக்குக் கொஞ்சமும் இடம் தரவில்லை. ஃபுல் பால். ஸ்டிக் லெங்த். இரு பேட்ஸ்மேன்களுக்கும் எப்படி வீச வேண்டுமென்று தெளிவான பிளான். அந்த பிளானை எக்சிக்யூட் செய்ததில் அவ்வளவு பெர்ஃபெக்ஷன். 

தன் இரண்டாவது ஓவரை வீச வருகிறார். மீண்டும் மோரே. இறங்கி வந்து அடிக்க முயல்கிறார். முதல் ஓவரில் ஆனது போலவே ஒரு அற்புத டர்ன். ஸ்டம்பிங். அடுத்து 4 'டாட் பால்கள்'. கடைசிப் பந்தில் விக்கெட். மெய்டன் மற்றும் இரண்டு விக்கெட்டுகள். ஃபைனலில் தடுமாறுகிறது பிஜாபுர் புல்ஸ். போட்டுத் தாக்கிவிட்டான் அந்தப் பதினாறரை வயதுச் சிறுவன். "மிகவும் அக்ரசிவான பந்துவீச்சு. பவர்ப்ளே ஓவர்களில் எவ்வளவு தைரியத்துடன் பந்து வீசுகிறார். அற்புதமான பவுலிங். நினைவு கொள்ளுங்கள் இந்த வீரனுக்கு 16 வயது தான் ஆகியுள்ளது"- இடது கை சுழற்பந்து ஜாம்பவான் வெட்டோரி கமென்டர் பாக்சில் அமர்ந்து ஹெக்டேவை புகழ்ந்து கொண்டிருக்கிறார். மெய் சிலிர்க்கிறது. வெட்டோரியின் குரலைக் கேட்டதும் உள்ளுக்குள் ஒருவகையான எண்ண ஓட்டம். ஏன்..? "வெட்டோரிதான் என் ரோல் மாடல்" என்று ஹெக்டே கூறியதாக அந்தக் கட்டுரையில் படித்த ஞாபகம். ஆம்... ஓராண்டுக்கு முன்புதன் ரோல் மாடலாகக் கூறிய வீரரே இப்போது அவனை மைக் பிடித்து புகழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தச் சிறுவனை நினைத்துப் பெருமையாக இருந்தது. கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் வாழ்க்கையாக நினைப்பவனுக்கு அதைத்தவிர வேறென்ன வேண்டும்?

அவன் பந்துவீசியபோது அவனுக்குள் இருந்த தன்னம்பிக்கை வியப்பு! எங்கு ஃபீல்டர் இருக்க வேண்டும் என்று கேப்டனிடம் தெளிவாகக் கூறுகிறான். அடிக்கப்படும் பந்துகள் ஃபீல்டர் நிற்கும் திசை தவிர எங்குமே போகவில்லை. அவ்வளவு தெளிவான ஃபீல்டு பிளேஸ்மென்ட். பவுலிங்கில் அவ்வளவு தெளிவு. நான்கு ஓவர் முடிவில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள். வர்ணனையில் அமர்ந்திருந்த மைக் ஹஸ்ஸி, வெட்டோரி, சாரு, இந்தி நடிகர் சுனில் ஷெட்டி வரை அனைவரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்த ஒரு போட்டியினால் மட்டும அல்ல. இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அந்தச் சிறுவன் இதைத்தான் செய்துள்ளான். 8 போட்டிகளில் 7 விக்கெட்டுகள். எகானமி வெறும் 6.31 தான். அதனால் தான் போட்டி முடிந்ததும் அத்தனை விருதுகள். ஒருநாள் நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிப்பான் என்ற நம்பிக்கை. ஆனால் யாராக?

Shubhang Hegde


போட்டியின் போது சுபாங்  ஹெக்டே பவுலராக அடையாளப்படுத்தப்பட்டான். 2017 கர்நாடகா பிரீமியர் லீக் தொடரில் கூட 2 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டிருந்தான். ஆனால் அந்தக் கட்டுரையில் அவன் 'ஆல் ரவுண்டர்' என்று பார்த்ததாக ஞாபகம். ஆம், 2016-ல் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் டிவிஷன் போட்டிகளில் 4 சதங்கள் அடித்திருந்தான் ஹெக்டே. அதிகபட்சமாக 191. பேட்டிங்கிலும் அவன் கில்லாடி. "நான் ஒரு பவுலிங் ஆல் ரவுண்டர் ஆக விரும்புகிறேன்" என்று சொல்லியிருந்தான். அவனது ரோல் மாடல் வெட்டோரியைப் போலவே! 

சச்சினும், டிராவிட்டும் கூட அவனுக்குப் பிடித்த வீரர்கள். பேட்டிங்கை விட பவுலிங் சிறப்பாக இருப்பதனால், அனைவரின் பார்வையும் அவனது பவுலிங்கின் மீது மட்டும் படுவதைப் போன்ற உணர்வு. விஜய் மெர்சென்ட் 'Under-16' தொடரில் 5 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் அள்ள, 'சிறந்த பவுலர்' என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களுக்கு, வலைபயிற்சியில் பந்துவீசியுள்ளான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் Trials-ல் பங்கேற்று வெட்டோரியின் கண்முன் பந்துவீசியிருக்கிறான். அப்போது அவனைத் தேர்வு செய்யாத வெட்டோரி, வர்ணனையின்போது நிச்சயம் வருந்தியிருப்பார். இப்படித்தான் கர்நாடகா பிரீமியர் லீகிலும் அவனது பேட்டிங்கை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லையோ என்று சந்தேகம் எழுகிறது.

"1984-ல் இருந்து பயிற்சியளித்து வருகிறேன். சுபாங்கைப் போல் ஒரு ஆல்ரவுண்டரைப் பார்த்தது இல்லை" என்று பிரமிக்கிறார் அவனது பயிற்சியாளர் இர்ஃபான் சேத். அந்த ஆல்ரவுண்டர் அப்படியே ஆல்ரவுண்டராக வளர வேண்டும். தலைசிறந்த ஆல்ரவுண்டராக கிரிக்கெட் உலகை ஆள வேண்டும். அதுவே அவனுக்கான வெற்றி. அதுவே, "உன் தோல்விகளை நேசி. அது உனக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்களைக் கற்றுக்கொள்" என்று கூறிய அவரது தந்தைக்கான வெற்றி. அவனது தந்தை சமாரத் ஹெக்டேவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

பயிற்சியாளர் சொன்னதுபோல சுபாங் ஹெக்டே ஒரு மாபெரும் திறமைசாலி. இளம் பொக்கிஷம். 16 வயதுதான் ஆகிறது. இரண்டு மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தால், நிச்சயம் இந்திய அணியில் அவனுக்கு இடம் உறுதி. ஆனால், அடுத்த குல்தீப்பாகவோ, ஓஜாவாகவோ அவன் அணிக்குள் நுழையக்கூடாது. ஏன் அடுத்த ஜடேஜாவாகக்கூட நுழையக்கூடாது. ஒரு சர்வதேச ஜாம்பவானைப் போல்... அவன் ரோல் மாடல் வெட்டோரியைப் போல்... இல்லை இல்லை வெட்டோரிக்கும் மேல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!