வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (27/09/2017)

கடைசி தொடர்பு:10:59 (27/09/2017)

பயமறியான், பதற்றமடையான்... எவர்கிரீன் என்டெர்டெய்னர் மெக்கல்லம்! #HBDMcCullum

``பேர கேட்டாலே... சும்மா அதிருதுல!" - ரஜினியின் இந்த பன்ச், யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நியூஸிலாந்தின் முன்னாள் கேப்டனுக்கு நச்செனப் பொருந்தும். ஏன்? பிப்ரவரி 28, 2010, இடம் கிறிஸ்ட்சர்ச். ஷான் டெய்ட் 155 கி.மீ வேகத்தில் ஸ்டம்ப்பைப் பதம் பார்த்து வீசியதை, படுத்துக்கொண்டு விக்கெட்டின் பின்புறம் பறக்கவிட்டார். அது ராக்கெட் மாதிரி 90 டிகிரியில் பயணித்து சிக்ஸராக மாறியது. எவ்வளவு வேகத்தில் பந்து தன்னிடம் வந்ததோ, அதே வேகத்தில் பெளண்டரியைவிட்டு வெளியே அனுப்பினார். ஒருமுறை அல்ல, இருமுறை. இதெல்லாம் அவர் ஏற்கெனவே செய்ததுதான். ஆனால், இவ்வளவு வேகமாகப் போட்ட பந்தை அதற்கு முன்னரும் பின்னரும் வேறு எவரும் அடிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தை, சிறுத்தைப்போல இரண்டு எட்டு எடுத்துவைத்து சுழற்றி `எக்ஸ்ட்ரா கவர்' திசையில் இவர் அடித்த அடி ஒவ்வொன்றும் சரவெடி. 

Brendon McCullum

கிரிக்கெட்டை தீவிரமாக நேசிக்கும் அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும், தங்களது அணியைவிடுத்து வேறோர் அணி வெற்றிபெற்றால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அணியாக இருப்பது நியூஸிலாந்து மட்டுமே. அது, ஏன்?

மற்ற அணிகளைப்போல வருடம் முழுவதும் விளையாடிக்கொண்டிருக்க, அந்த நாட்டின் சீதோஷ்ணநிலை ஒத்துழைப்பதில்லை. டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மட்டுமே சம்மர். அதுவும் பேருக்குத்தான் வெயில் காலம். ஏறிப்போனால், 20 டிகிரி வெப்பம் இருக்கும். ரக்பி, பேஸ்பால், ஹாக்கி விளையாட்டுகள் விளையாடப்படும் மைதானத்தில்தான் கிரிக்கெட்டும் ஆடுவார்கள். அதனால்தான் மற்ற தேசங்களில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்கள்போல் அல்லாமல், முக்கோணம், செவ்வகம் என கிரவுண்ட் டிசைனாகவும், சிறிய பௌண்டரிகள் எனப் பார்க்கவே வித்தியாசமாகவும் இருக்கும். ஆனாலும், அங்குள்ள ஒவ்வொரு மைதானமும் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். பெரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும், உலகத் தரமான வீரர்களை விதைத்தபடியே, கிரிக்கெட்டைக் கொண்டாடிவரும் தேசம், நியூஸிலாந்து. 

McCullum

ஜான் ரைட், ஜெஃப் க்ரோ, மார்ட்டின் க்ரோ, லீ ஜெர்மான், ஸ்டீபன் பிளெமிங், டேனியல் வெட்டோரி வரிசையில், நியூஸிலாந்தின் எழுதப்படாத அகராதியின்படி, கண்ணியம், மரியாதை, ஒழுக்கம், நேர்மை என 'கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன்களின் ஆட்டம்' என்றால் அதில் நாங்கள்தான் தலைசிறந்த அணி’ என காலம்காலமாக நிரூபித்து வரும் வீரர்களை வழிநடத்திய மாபெரும் வீரன், மெக்கல்லம்.

50 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகைகொண்ட நாட்டிலிருந்து (அதாவது, உலக மக்கள்தொகையில் வெறும் 0.06 சதவிகிதம் மட்டுமே) உலகத்தரமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி இது சாத்தியம் எனில், நீண்ட தூரம் பயணிக்கத் தேவையில்லை. இந்தியாவின் முதல் அயல்நாட்டுப் பயிற்சியாளராக ஜான் ரைட் செயல்பட்டத் தருணம், இந்திய அணியின் பொற்காலம். சச்சின், டிராவிட், கும்ப்ளே, லட்சுமணன், கங்குலி, ஸ்ரீநாத் எனத் தனித்தனி கில்லிகளாக வலம்வந்தாலும், அவர்களின் ஆற்றலை ஒன்றிணைத்து இளைஞர்களான ஜாகீர் கான், முகமது கைஃப், யுவராஜ், நெஹ்ரா என வியூகம் அமைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணங்களில் சவால்விடும் அணியாக இந்தியாவை உயர்த்தி, 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிவரை வழிநடத்திச் சென்ற வித்தைக்காரர்.

Brendon McCullum

அவர்களது  வழியில் கற்ற பாடங்களைக்கொண்டு, மிகவும் அமைதியாக அதே சமயத்தில் காரியத்தில் மிகவும் அழுத்தமாகச் செயல்படக்கூடிய உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான ஸ்டீபன் ஃபிளெமிங், ஐ.பி.எல் போட்டிகளில் பத்து வருடங்களாக தோனியுடன் பயணித்துவருகிறார். ஃபிளெமிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக களம்கண்ட மெக்கல்லம், படிப்படியாகத் தன்னை மெருகேற்றிக்கொண்டே வந்தார். 

வேகப்பந்து, ஸ்விங் ஆகியவற்றுக்கு மட்டுமே துணைபோகும் வகையில் இருக்கும் ஆடுகளத்தில் பயிற்சிப் பெற்றாலும், மற்ற அணிகளைவிட மிகச் சொற்பமான ஆட்டங்களை ஆடினாலும், சுற்றுப் பயணங்களில் நியூஸிலாந்து சோடைபோவதில்லை. வெயில் கொளுத்தக்கூடிய இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மைதானங்களில் பன்முகத்தன்மைகொண்ட அணியைக்கொண்டு வெற்றிகளைக் குவித்தேவருகிறார்கள். 

டெஸ்ட் போட்டிகளில் ஏழாவது வீரராகக் களம் காண்பது மிகவும் கடினமான விஷயம். 80 ஓவர்கள் கழித்து புதிய பந்துகளைக்கொண்டு வீசும் வேளையில், ஏழாவது வீரராக வருவது என்பது கிட்டத்தட்ட முதல்நிலை வீரராக ஆடுவதைப்போலத்தான். தடுப்பாட்ட முறைகளில் பெரிதும் நம்பிக்கையில்லாமல் அதிரடியாக கிரீஸிலிருந்து வெளியே வந்து பந்து ஸ்விங் ஆகும் முன்னரே நொறுக்க ஆரம்பித்தார். பௌன்ஸர் பந்துகளை அவர் சுழற்றி அடிக்க முற்பட்டபோதெல்லாம் பாதி நேரங்களில் கேமராவுக்கே தலை சுற்றிவிடும். 

ஒரு நாள் போட்டிகள் மற்றும் இருபது ஓவர் ஆட்டங்களில் தொடக்க ஆட்டக்காரராக தன்னை மெருகேற்றிக்கொள்ள இந்த `பயமறியா டிசைன்’ பெரிதும் உதவியதாகத் தெரிவித்தார். 

Brendon McCullum

டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக நான்கு சதங்களைக் குவித்திருக்கிறார். அதில் இரண்டு இரட்டைச்சதம் ஒரு முச்சதம் என்று, எல்லாமே சரித்திரப் புகழ்பெற்றவை. பொதுவாக அடுத்தடுத்த ஆட்டங்களில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவது என்பது டெஸ்ட் ஆட்டங்களில் கைகூடாத கலை. 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆக்லாந்தில் 224 ரன்கள் அடித்த கையோடு, அடுத்த போட்டியில் 246 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடரை இழந்துவிடக் கூடாது என்ற முனைப்போடு, தன்னுடைய இயல்பான ஆட்டத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, 775 நிமிடம் ஆடி (360 நிமிடம் ஒரு நாள் டெஸ்ட் போட்டியின் நேரம்) 559 பந்துகளை எதிர்கொண்டு 302 ரன்களைக் குவித்து அணியைத் தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார். 

``சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிவிட்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறேன்`' என்று அறிவித்துவிட்டு, உலகக்கோப்பை தோல்விக்குத் திருப்பி அடித்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் காத்துக்கொண்டிருந்தார். கடைசிப் போட்டியில் அணியின் முன்கள வீரர்கள் சீக்கிரம் நடையைக்கட்ட, வெள்ளை உடை அணிந்து `டெஸ்ட்தான் ஆடுகிறோம்' என்பதை மறந்து, தன்னுடைய இருபது ஓவர் போட்டிகளின் வெறித்தனத்தை உடுத்திக்கொண்டு, 79 பந்துகளில் 145 ரன்கள் விளாசினார். ஆறு சிக்ஸர், 21 பெளண்டரிகள் என ஒரு பௌலரைகூட விட்டுவைக்காமல் அடித்து துவம்சம் செய்தார். 

Brendon McCullum

விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் மிஸ்பா உல் ஹக்கின் வாழ்நாள் சாதனையை தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில், அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தபோது, 54 பந்துகளில் சதம் அடித்து, குணத்தில் சாதுவாக இருந்தாலும் அடித்து நொறுக்குவதில் சிங்கம் என கர்ஜித்துவிட்டே, சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெற்றார்

2015-ம் ஆண்டின் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நியூஸிலாந்து அணியை, தன் அதிரடியின் மூலம் ஃபைனல் வரை அழைத்துச்சென்றார். லீக் ஆட்டங்களில் மெக்கல்லம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஆடிய ருத்ரதாண்டவம் எல்லாம் காலத்துக்கும் நிலைத்திருக்கும். அரை இறுதியில் பலம்வாய்ந்த தென்னாப்பிரிக்காவை வென்று, இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முன்னர், ``உங்களைவிட வேறு யாருக்கும் ஓர் உலகக்கோப்பையை வெல்வது எவ்வளவு சந்தோஷம் கொடுக்கும் எனத் தெரியாது. முதல்முறையாக இறுதிக்குள் செல்லும் எங்கள் அணிக்கு உங்களின் ஆதரவைத் தாருங்கள்'' என்று இந்திய ரசிகர்களின் ஆதரவைக் கோரினார். தன்னுடைய ஹீரோவான மார்ட்டின் க்ரோ, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த முன்னாள் வீரனுக்காக, மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவர் முதல் பந்தையே ஏறி வந்து அடிக்க முற்பட்டான். தீயோடு விளையாடி கடைசித் தருணத்தில் அணிக்கு ஏதும் செய்ய முடியாமல் பெவிலியன் திரும்பியபோது உலகமே சோகமுற்றது. 

லீக் ஆட்டத்தில், ஒரு விக்கட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றதால் கோப்பையைக் கைப்பற்றுவதில் அதீத முனைப்போடு இருந்தனர் நியூஸிலாந்து அணியினர். மேலும், அதுவரையில் இந்தியா  மட்டுமே சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற ஒரே அணி என்பதாலும், ரசிகர்களும் நிபுணர்களும் `நியூஸிலாந்து எப்படியும் வென்றுவிடும்' என்றே கணித்திருந்தனர். இறுதி ஆட்டத்துக்கு முன்பாக 44 பெளண்டரிகள், 17 சிக்ஸர்கள் எனத் தெறிக்கவிட்ட ஆட்டத்தை மாற்றுவதற்கு மெக்கல்லமுக்கு  ஐடியா இல்லை. 

Brendon McCullum

அதே சமயத்தில், எதிராளியின் பலம் வாய்ந்த வீரனை ஆரம்பத்திலேயே மழுங்கடித்துவிட்டால், வெற்றி வசமாவது உறுதி எனத் தைரியமாக ஸ்டார்க்கை ஒரு கைபார்க்க நினைத்ததில் சற்றே பிசகிவிட்டார். மெக்கல்லம் அவுட் ஆனதும், நியூஸிலாந்து நிலைகுலையத் தொடங்கியது. ஒட்டுமொத்த அணிக்குமே முதல் உலகக்கோப்பை இறுதி ஆட்டம். அதுவும் ஒரு லட்சம் ரசிகர்களின் முன்பு, பதற்றமான ஒரு நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, சுவாரஸ்யமில்லாமல் 1999-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தைப்போல, அசால்ட்டாக வியர்வை சிந்தாமல் ஆஸ்திரேலியா ஐந்தாவது முறையாக கோப்பையைக் கைபற்றியது. மெக்கல்லம் கொஞ்சம் பொறுமையாக விளையாடியிருக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழத்தான் செய்தன. ஆனால், அவருக்குத் தெரிந்த அதே அதிரடியைக்கொண்டுதான் அணியை இறுதிவரை அழைத்துவந்தார் என்பதை, விமர்சனம் செய்பவர்கள் ஏனோ மறந்துபோனார்கள்.   

உலகத்தின் அனைத்து வீரர்களும் ஊர்கூடி தேர் இழுக்கத் தயாரான முதல் ஐ.பி.எல்-லின் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். அஜித், விஜய் படங்களுக்கு நிகரான ஓப்பனிங்கை ஐ.பி.எல் பெற, அந்த இன்னிங்ஸ் மிகவும் உதவியது . அங்கு சூடுபிடித்த அவரின் ஆட்டம், கொச்சி, கொல்கத்தா என மாறி மாறிச் சென்றாலும், 2014-ம் வருடம் முதல் சென்னைக்காக மேற்கிந்திய தீவுகளின் ஆட்டக்காரர் ஸ்மித்தோடு அவர் போட்ட ஆட்டம் அதகளத்தின் உச்சம். 

Brendon McCullum

முதுகு, கை வலிகளால் விக்கெட் கீப்பிங்கைத் துறந்தாலும், ஃபீல்டிங் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. ஜடேஜா, ரெய்னா, டு பிளேஸிஸுடன் சேர்ந்து மெக்கல்லம் அமைத்த கோட்டைச்சுவரைத் தாண்டி அடிப்பதெல்லாம் ஆகாத காரியமாகிப்போனது. 

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும், இன்றும் இருபது ஓவர் லீக் ஆட்டங்களில் உலகை வலம் வந்துகொண்டிருக்கும், சூப்பர் மேன் மெக்கல்லமுக்கு 36-வது பிறந்த நாள் வாழ்த்துகள்.