வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (27/09/2017)

கடைசி தொடர்பு:20:44 (27/09/2017)

ஆளப்போறான் இந்த ‘சந்தோஷ’த் தமிழன்! #NationalOpenAthletics

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் `57-வது ஓப்பன் அத்லெடிக் சாம்பியன்ஷிப்' போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு வீரர் வீராங்கனைகள் பதக்க வேட்டையாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் அர்ச்சனா என்ற தமிழச்சி தங்கம் வென்ற நிலையில் இன்று சந்தோஷ் குமார் என்ற தமிழர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தமிழக அணிக்காக மட்டுமல்லாது சர்வீசஸ், ரெயில்வேஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் பல வீரர்களும் இந்தத் தங்க வேட்டையில் அசத்தி வருகின்றனர்.

சந்தோஷ் குமார்

இன்று மதியம் நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தங்கம் வென்றிருந்தார்.19 வயதே ஆன சந்தோஷ் குமார், 50.21 விநாடிகளில் இலக்கை எட்டி, ஓப்பன் அத்லெடிக் மீட்டின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். 2007 `போபால் ஓப்பன் அத்லெடிக் மீட்'டில், 50.26 விநாடிகளில் இலக்கைக் கடந்திருந்த ஜோசப் ஜி.ஆபிராஹமின் 8 ஆண்டுகால சாதனையை சந்தோஷ் இன்று முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் பிறந்த இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  

நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா 11.78 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இந்தியாவின் அதிவேகப் பெண்ணான இந்த தமிழச்சி, 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் ஃபைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார். நாளை நடைபெறப்போகும் ஃபைனலிலும் வென்று இரட்டைத் தங்கம் வெல்லும் முனைப்புடன் பயிற்சி செய்து வருகிறார் அர்ச்சனா. 100 மீட்டர் ஓட்டத்தில் மற்றொரு தமிழக வீராங்கனை சந்திரலேகா 11.92 விநாடிகளில் இலக்கை எட்டி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஓ.என்.ஜி.சி வீராங்கனை மவுனா மர்மா 58.25 விநாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றார். தமிழக வீராங்கனைகள் விஷ்வ பிரியாவும், ரமா லக்ஷ்மியும் முறையே 5-வது மற்றும் 7-வது இடம் பிடித்தனர். ஜாவ்லின் த்ரோவில் ரெயில்வேஸ் வீராங்கனை அனு ராணி 57.90 மீட்டர் வீசி முதலிடம் பிடித்தார். தமிழகத்தின் ஹேமமாலினியால் 10-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

National open athletics

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் இலக்கியதாசன் 0.005 விநாடி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழக்க நேரிட்டது. அவர் இலக்கை 10.570 விநாடிகளில் கடந்தார். சர்வீசஸின் சதாத் 10.565 விநாடிகளில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார். உயரம் தாண்டுதலில் ரெயில்வேஸின் சித்தார்த் யாதவும், சர்வீசஸின் பாரதியும் 2.23 மீட்டர் தாண்டி ஓப்பன் அத்லெட்டிக் மீட்டின் முந்தைய சாதனையை (2.22 மீட்டர்) முறியடித்தனர். சித்தார்த் தங்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற பாரதி தமிழகத்தைச் சேர்ந்தவர்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்ற தமிழக வீரர் கணபதி கிருஷ்ணன் 20 கிலோமீட்டர் நடைபோட்டியில் தங்கம் வென்றார். சர்வீசஸ் அணிக்காகப் பங்கேற்ற அவர் பந்தயத் தூரத்தை 1 மணி நேரம், 27 நிமிடம், 33 விநாடிகளில் நிறைவு செய்தார். சர்வீசஸின் சந்தீப் குமார் இரண்டாம் இடம் பிடித்தார். வட்டு எறிதலில் சர்வீசஸ் வீரர் தரம் ராஜ் யாதவ் 55.08 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்றார்.

NationalOpenAthletics

போட்டியின் முதல் நாளான திங்கட்கிழமை தமிழக வீரர் லக்ஷ்மணனும், வீராங்கனை சூர்யாவும் 5000 மீட்டர் ஓட்டத்தில் தாங்கள் கலந்து கொண்ட பிரிவுகளில் தங்கம் வென்றனர். சூர்யா  16:02.85 நிமிடங்களிலும், லக்ஷ்மணன் 14:04.21 நிமிடங்களிலும் இலக்கை அடைந்தனர். தமிழர்களான இருவரும் சர்வீசஸ் அணிக்காக இத்தொடரில் பங்கேற்றனர். இவர்கள் இருவருமே நாளை நடக்கும் 10,000 மீட்டர் ஓட்டத்தின் பைனலுக்குத் தகுதி பெற்றிருக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்