வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (28/09/2017)

கடைசி தொடர்பு:21:43 (28/09/2017)

சூர்யா, லட்சுமணன் மீண்டும் தங்கம்... நேஷனல் தடகள சாம்பியன்ஷிப் ரவுண்டப்!

சென்னையில் நான்கு நாள்களாக நடந்துவந்த 57-வது தேசிய ஓபன் அத்லெடிக் சாம்பியன்ஷிப் தொடர் இன்றுடன் முடிந்தது. பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த எல்.சூர்யா தங்கம் வென்றபோதிலும் 1 விநாடியில் மீட் ரெக்கார்ட் படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 

Athlete G.Laxmanan

‘‘ஒரு செகண்ட்ல மீட் ரெக்கார்ட் மிஸ் ஆயிடுச்சு. நடுவுல ஒரு 5 ரவுண்ட் ஸ்லோவா ஓடிட்டேன். அதனால, கடைசி ரெண்டு மூணு கிலோ மீட்டர் டைட்டா ஓட வேண்டியதாயிடுச்சு. ஒவ்வொரு ரவுண்ட் முடிஞ்சப்பவும், ஸ்பீடா ஓடச் சொல்லி கோச் சொல்லிகிட்டே இருந்தாரு. இருந்தாலும், ஒரு செகண்ட்ல போச்சு. கோல்ட் வாங்குனதை விட, மீட் ரெக்கார்ட் வைக்க முடியாம போனது வருத்தமா இருக்கு. இந்த டோர்னமென்ட்ல ரெக்கார்ட் வைக்கணும்னா, இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணும்’’ என வருத்தப்படும் சூர்யா, 32:42.62 நிமிடத்தில் இலக்கைக் கடந்திருந்தார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கவிதா ராவுத் 2015-ம் ஆண்டு 32:41.31 நிமிடத்தில் படைத்த சாதனையே இன்றளவும் மீட் ரெக்கார்ட். 

ஆண்களுக்கான 10,000 மீ. ஓட்டத்தில் எதிர்பார்த்ததுபோலவே, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜி.லட்சுமணன், தங்கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் தூரத்தை 29:16.21 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்த அவர், 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார். சென்னை வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன், துர்கிஸ்தானில் நடந்த 3,000 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற லட்சுமணன், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருவதால், ரெக்கார்ட் எதுவும் படைக்க முடியவில்லை. 

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா மயிரிழையில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். பந்தயத்தின் ஆரம்பத்தில் இருந்து முன்னிலையில் இருந்தவர், கடைசி விநாடியில் சுதாரிக்கத் தவறியதால் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. அர்ச்சனாவை உள்ளடக்கிய தமிழக அணி 4x100 தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றது. தவிர, அர்ச்சனா 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். அவர் இந்தத் தொடரில் மூன்று பதக்கங்களை அள்ளினார். 

சூர்யா


ஆண்களுக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சர்வீசஸ் முதலிடம் பிடித்தது. சுரேந்தர், இலக்கியதாசன், சிவக்குமார், குமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி 40.94 விநாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாவது இடம் பிடித்தது. 4x400 மீ தொடர் ஓட்டத்தில் ஹரியானா முதலிடம் பிடித்தது. ஆந்திரா, உத்தரப் பிரதேசம் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. 

டிரிபிள் ஜம்ப்பில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பியன் ரஞ்சித் மகேஷ்வரி, 16.00 மீட்டர் மட்டுமே தாண்டி ஏமாற்றம் அளித்தார். நேஷனல் ரிக்கார்ட், மீட் ரெக்கார்ட் என இரண்டுக்கும் சொந்தக்காரரான அவர், நான்காவது இடத்துடன் திருப்தி அடைந்தார். கேரளாவைச் சேர்ந்த சக வீரர் ஸ்ரீஜித்மோன் 1.615 மீ தாண்டி முதலிடம் பிடித்தார். பெண்களுக்கான போல் வால்ட் பிரிவில் கர்நாடகாவின் கியாத்தி வகாரியா தங்கம் வென்றார். தமிழ்நாட்டின் சத்யாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பியின் பூவம்மா ஐந்தாவது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்தார். அந்தப் பிரிவில் ரயில்வேயின் லில்லி தாஸ் தங்கம் வென்றார். 

இந்தத் தொடரின் சிறந்த வீரராக தமிழகத்தின் சந்தோஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் 50.16 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றதுடன், பழைய மீட் ரெக்கார்டை முறியடித்தார். பெண்கள் பிரிவில் ரயில்வேஸ் வீராங்கனை ஜிந்தா யாதவ், சிறந்த வீராங்கனையாக தேர்வானார். பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் அவர் முதலிடம் பிடித்திருந்தார்.

ரயில்வே அணி 296 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. சர்வீசஸ் 182 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது. ஆண்கள் பிரிவின் சிறந்த அணியாக சர்வீசஸ் அணியும், பெண்கள் பிரிவின் சிறந்த அணியாக ரயில்வேஸ் அணியும் தேர்வாகின.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்