ஆஸ்திரேலிய அணிக்கு முதல் வெற்றி! #IndvsAus

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Photo Credit: ICC


ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 335 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா, அஜிங்கியா ரஹானே ஜோடி முதல் விக்கெட்டுக்குச் சிறப்பான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்த நிலையில் 53 ரன்கள் எடுத்திருந்த ரஹானே ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் ஷர்மா 65 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 21 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையடுத்து கைகோர்த்த பாண்ட்யா - கேதர் ஜாதவ் ஜோடி சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடியது. பாண்ட்யா 41 ரன்களிலும், கேதர் ஜாதவ் 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி 6 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணியின் ரன்குவிப்பு மந்தமடைந்தது. தோனி 13 ரன்களிலும் மணீஷ் பாண்டே 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, வெளிநாட்டு மண்ணில் 13 போட்டிகளுக்குப் பின்னர் முதன்முறையாக வெற்றியை ருசித்தது. நூறாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.  அதேபோல், கோலி தலைமையிலான இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணி முற்றுப்புள்ளி வைத்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் தொடங்கி தொடர்ச்சியாக 9 ஒருநாள் போட்டிகளை வென்றிருந்த கோலி தலைமையிலான இந்திய அணி, முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தது. கடந்த 2008-09 சீசனில் தோனி தலைமையிலான இந்திய அணி சர்வதேச ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!