வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (29/09/2017)

கடைசி தொடர்பு:18:39 (29/09/2017)

கிரிக்கெட் சாதனைகள் தெரியும்... வீரர்களுக்கு நடந்த சோதனைகள் தெரியுமா? #FunnyWickets

கிரிக்கெட்... வியர்க்க விறுவிறுக்க கடைசிப் பந்து வரை போராடி வெற்றிபெற்ற அனுபவங்கள் எல்லா அணிகளுக்கும் இருக்கும். அதேபோல் எல்லா அணிகளிலுமே `அடப் பாவத்த' என்ற ரகத்தில் சில விக்கெட்டுகளும் விழுந்திருக்கும். அவற்றைப் பற்றிய ஓர் அலசல்! 

கிரிக்கெட்


பாகிஸ்தானின் மிக முக்கியமான வீரர் இன்சமாமுக்கும் இப்படியொரு நிலை இருமுறை ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2006-ம் ஆண்டு நடந்தது. `களமிறங்கிக் கலக்கலாம்!' என்ற எண்ணத்தில், 19 ரன்களைக் கடந்துவிடுவார் இன்சமாம். அந்த நேரத்தில் `ரவுண்டாக 20 ஆக்கிவிடலாம்' என நினைத்து, பந்தை சிங்கிள் தட்டிவிடுவார். யூனிஸ் கானுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகாத காரணத்தால், மறுமுனையில் நின்ற அவர் ரன்னை நிராகரித்துவிடுவார்.  மைதானத்தின் மையத்தில் நின்ற இன்சமாமுக்குப் பின்னால் இருக்கும் ஸ்டம்பை நோக்கி சுரேஷ் ரெய்னா பந்தை விட்டெறிவார். என்ன செய்வதென அறியாத இன்சாமம், ரன் அவுட்டுக்கு எறிந்த பந்தை ஸ்டோக் வைத்துவிடுவார். `Obstruction the field' என்ற முறையில் நடுவர்கள் `அவுட்' வழங்கிவிடுவார்கள். இது ஒரு பரிதாபம். 

இரண்டாவது சம்பவம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் ஸ்டீவ் ஹார்மின்சன் வீசிய பந்தை `ஓங்கி அடிச்சா, ஒன்ரை டன் வெயிட்டுடா' என்ற தொனியில் அடிப்பார். அதுவோ, நேராக ஹார்மின்சன் கையிலேயே போய் சிக்கிவிடும். வழக்கம்போல் பாதி கிரவுண்டு வரை வாக்கிங் வந்துவிடுவார் இன்சமாம். அதில் சுதாரித்த ஹார்மின்சன், பந்தைப் பிடித்துப் `பாஞ்சு அடிச்சா பத்தரை டன் வெயிட்டுடா' என்ற வேகத்தில் ஸ்டம்ப்பை நோக்கி அடித்துவிடுவார். பயந்துபோன இன்சாமம், `எறியறாய்ங்க. ஆனா, எங்க இருந்து எறியறாய்ங்கன்னு தெரியலையே!' என்ற சோகத்தில் பெவிலியன் திரும்பிவிடுவார். `இதுக்குமேல தாங்க முடியாது குருநாதாஆஆஆ...'
 

இந்த ரகத்தில் நிகழ்ந்த விக்கெட், உலகமே அறிந்த ஒன்று. இந்த விக்கெட்டுக்கு `மேஜிக் பந்து' என்ற தனிப்பட்ட பெயரே உள்ளது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரில் ஷேன் வார்னே, ஆன்ட்ரூ ஸ்டார்ஸுக்கு பந்து வீசுவார். ஒருநாள் முழுக்க பந்து வீசி சேதமடைந்த காரணத்தால், மைதானத்தின் மூலையில் பந்து குத்தியவுடன், ஆஸ்திரேலியாவில் பிட்ச்சான பந்து, இங்கிலாந்தில் இருக்கும் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸைப் பதம்பார்த்துவிடும். `என்னடா பித்தலாட்டம் இது!' என்ற ரகத்தில் அனைவரின் முகத்தையும் பாவமாகப் பார்க்கும் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், குழப்பம் நிறைந்த முகத்துடன் பெவிலியன் திரும்பிவிடுவார். `ஸ்பின்னா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா பாஸ்?'  

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் நிதானமாக ஆடிய மிஸ்பா உல் ஹக், 242 பந்துகளுக்கு 82 ரன்கள் என்ற நிலையில் இருப்பார். அப்போது `சிங்கிள் அடிக்கலாம்' என்ற எண்ணத்தில் ஆஃப் சைடு தட்டிவிடுவார். அந்தப் பக்கம் ஃபீல்டிங் நின்ற தினேஷ் கார்த்திக் விரைந்து வந்து பந்தை எடுத்து மிஸ்பாவை நோக்கி எறிவார். தன் காலைக் கவ்வ வருகிறது என்று பயந்த மிஸ்பா, சடாரென தாவுவார். அதுவோ, நேராக ஸ்டம்பில் அடித்து பைஸ் தெறித்துவிடும். லாங் ஜம்ப் தாவி தன் கால்களைக் காப்பாற்றிக்கொண்ட மிஸ்பா, விக்கெட்டைப் பரிதாபமாகப் பரிகொடுத்துவிடுவார். `எய்மிங் பண்றார்... பந்து போகுது... ஜஸ்ட் மிஸ் இல்லை, எக்ஸாட் ஹிட்டு!' 

 

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் சங்ககரா 99 ரன்களை அடித்துவிட்டு, 100 ரன்களைப் பெறுவதற்காக சிங்கிள் அடித்துவிட்டு மெதுவாக ஓடி `ஒரு ரன்னை எடுத்துவிட்டோம்' என்று நினைத்து 100 ரன்களைக் கொண்டாடிக்கொண்டிருப்பார். மறுமுனையில் முத்தையா முரளிதரனோ சங்ககரா 100 அடித்துவிட்ட குஷியில் பந்து இன்னும் கீப்பர் கைக்கு வராமலேயே பேட்டை கிரீஸில் மட்டும் வைத்துவிட்டு சங்ககராவுக்கு வாழ்த்து தெரிவிக்க வருவார். சுதாரித்த நியூஸிலாந்து கீப்பர் மெக்கல்லம், தயவுதாட்சண்யம் பார்க்காமல் முரளிதரனை ரன் அவுட் செய்துவிடுவார். இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இலங்கைக்கு அதுதான் கடைசி விக்கெட். `வாழ்த்து சொல்ல வந்தது ஒரு குத்தமா?' என நினைத்த முரளிதரன், முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு பெவிலியன் திரும்பிவிடுவார். பிறகு நடந்த பிரஸ் மீட்டில் இதுகுறித்து மெக்கல்லம் விவரித்துக் கூறி மன்னிப்பும் கேட்பார். டோன்ட் ஃபீல் ப்ரோ!


டிரெண்டிங் @ விகடன்