‘தடகளத்துல இருந்து யாரும் ஒலிம்பிக் பதக்கம் ஜெயிக்கலை... நான் ஜெயிப்பேன்!’ - தடை ஓட்ட வீரர் சந்தோஷ் குமார்

2016ஆம் ஆண்டு மே மாதம். பெங்களூரில் நடந்தது, ஜூனியர் ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டி. இதில் ஜெயித்தால், நெதர்லாந்தில் நடக்கும் உலக ஜூனியர் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதிபெறலாம். ஆனால், வெற்றி அவ்வளவு எளிதல்ல. இந்தியா முழுவதும் இருந்தும் ஏராளமான வீரர்கள் குவிந்துள்ளனர். எல்லோருமே ஜூனியர் நேஷனல் பிளேயர்ஸ்... சாம்பியன்ஸ்.  'பரவாயில்லை. எப்படியும் ஜெயிப்பேன். நெதர்லாந்து செல்வேன்’. உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான் அந்த 18 வயது இளைஞன். 400 மீட்டர் தடை ஓட்டம். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ஓடத்தொடங்கினான். மூன்று தடைகளைத் தாண்டுவதற்குள், பாதியிலேயே தடுக்கிக் கீழே சுருண்டு விழுந்தான். இலக்கு பறிபோனது; வெற்றி பறிபோனது; நெதர்லாந்து செல்லும் வாய்ப்பும் பறிபோனது. நினைத்துப் பார்த்தால் வேதனை. நினைத்துப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. தோல்வி இப்படித்தான் இம்சிக்கும்! 

இதோ இரண்டாவது வாய்ப்பு. ஹைதராபாத் நகரில் சீனியர் இன்டர்ஸ்டேட் போட்டி. இதில் ஜெயித்தாலும், ஜுனியர் அத்லெடிக்ஸ் தொடருக்குத் தகுதிபெறலாம். நெதர்லாந்து செல்லலாம். இந்த முறை தவறக் கூடாது; தவறி விழக் கூடாது, வாய்ப்பை நழுவவிடக் கூடாது. கவனமாக இருந்தான்; காரியத்தில் கண்ணாக இருந்தான். ஜூனியர் அத்லெடிக்ஸில் பங்கேற்பதற்கான குவாலிஃபிகேஷன் டைம் 53.2 விநாடி. அதை விட குறைவான நேரத்தில் இலக்கை அடைய வேண்டும். தடைகளைத் தாண்ட வேண்டும். இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டான். ஆன் யுவர் மார்க்... செட்... துப்பாக்கிச் சத்தம் கேட்டது... 53.00 நொடியிலேயே இலக்கை அடைந்தான். இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்து வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அப்பாடா... ஜூனியர் அத்லெடிக்ஸ் தொடருக்குத் தகுதி. ஓட்டமே வாழ்க்கை என்று முடிவானபின் கிடைக்கும் முதல் ஆசுவாசம்.

சென்னை, ஜவஹர்லால் நேரு மைதானம். சீனியர் அத்லெடிக் சாம்பியன்ஷிப். இப்போது ஜூனியர் இல்லை; சீனியர். போட்டி கடுமையாக இருக்கும். பரவாயில்லை. என்னை மிஞ்ச ஆளில்லை. ஆம், 400 மீ. தடை ஓட்டத்தில் சந்தோஷ் குமாரை மிஞ்ச ஆளில்லை. நம்பர் -1. முதலிடம் மட்டுமல்ல; மீட் ரெக்கார்டு. சாதனை மட்டுமல்ல, தொடரின் சிறந்த வீரர். 

சந்தோஷ் குமார்

400 மீட்டர் தடை ஓட்டம் தொடங்கும் முன், அனுபவ வீரர்களான ராமச்சந்திரன் (சர்வீசஸ்), பினு ஜோஸ் (கேரளா) மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு. போட்டி தொடங்கியதும் 8 வீரர்களும் சீறிப்பாய, சத்தமின்றி முன்னேறினார் சந்தோஷ். 6-வது தடையைத் தாண்டும்போது மற்ற 7 பேருக்கும் முன்னாள் இருந்தது இந்த 19 வயது இளைஞன்தான். தடைகள் அனைத்தையும் அநாயசமாகக் கடந்து, அனைவரையும் விட வேகமாக முன்னேறினார். வெற்றி கண்டார். ஒரு hurdle-ஐக் கூடத் தட்டிவிடவில்லை. ஒவ்வொருமுறை அதைத் தாண்டும்போதும் அவ்வளவு நேர்த்தி. அதுதான் அவருக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.

ஓடி முடித்து 5 நிமிடங்கள் 'டைமிங்' அறிவிக்கப்படவில்லை. "இதுதான் என் பெஸ்ட்" - என்று அப்போதே சொல்லிவிட்டார் சந்தோஷ். தன் கால்கள்மீது அவ்வளவு நம்பிக்கை. மைக்கில் டைமிங் அறிவிக்கப்படுகிறது. 50.16 விநாடிகள். சொன்னதுபோலவே அவரது 'பெர்சனல் பெஸ்ட்'. அதுமட்டும் அல்ல ஓப்பன் அத்லெடிக்ஸ் தொடரிலும் அதுதான் சிறந்த செயல்பாடு. இந்தியத் தடகள வீரர்களில், தான் பெரிதாக மதிக்கும் ஜோசப் ஜி. ஆப்ரஹாமின் 8 ஆண்டுகால சாதனையை முறியடித்து தனக்கென்று ஓர் அடையாளம் ஏற்படுத்தியிருக்கிறார். இரண்டாம் இடம் பிடித்த ராமச்சந்திரனுக்கும் சந்தோஷுக்கும் 0.86 விநாடி வித்தியாசம். சந்தோஷின் வேகம் அப்படி!

சந்தோஷ் குமார்


சில ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் நடந்த 'யூத் நேஷனல்ஸ்' போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார் சந்தோஷ். அப்போதுதான் அவரின் திறமையை தேசம் அறிந்தது. அன்று முதல் ஜூனியர் போட்டிகளில் கலக்கத் தொடங்கினான். இவனது திறமையைக் கண்ட இந்திய தடகள சம்மேளனம், சந்தோஷை பாட்டியாலாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டியூட்டில் சேர்த்தது. இப்போது ரஷ்ய பயிற்சியாளர் கலீன்ஸின் மேற்பார்வையில் 400 மீட்டர் hurdles, 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் பயிற்சிபெற்று வருகிறார் 'சீனியர்' சந்தோஷ். 

“தடகளத்துல நம்நாட்டைச் சேர்ந்த, யாரும் ஒலிம்பிக் பதக்கம் ஜெயிக்கலை. எப்படியேனும் போராடி தேசத்துக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றுவர முயற்சிப்பேன்" என்று கூறும் சந்தோஷின் கண்கள் நம்பிக்கையோடு மிளிர்கின்றன. மதுரையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சந்தோஷ், தன் அண்ணன் விளையாடப் போவதைப் பார்த்து ஓடத்தொடங்கினான். அவனது தடகள ஆர்வம், அவனை 11 வயதில் திருச்சி விளையாட்டுப் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தது. அன்று முதல் ஓட்டம்தான் அவனது உணவு, மூச்சு எல்லாம். 'நான் ஓடப்பிறந்தவன். சாதிக்கப் பிறந்தவன்' - தீர்க்கமாக முடிவெடுத்தான். முதலில் 400, 600 மீட்டர் போட்டிகளில் பங்கேற்றுக்கொண்டிருந்த சந்தோஷை, 3 ஆண்டுகளுக்கு முன் hurdles பக்கம் திருப்பினார் அவரது பயிற்சியாளர் ஞான சுகந்தி.  

"நார்மல் அத்லெட்ஸுக்கு ஸ்பீட் இருந்தாப்போதும். ஆனா hurdles-ல அச்சீவ் பண்ணனும்னா, வேகத்தோட, பொறுமையும் அவசியம். அது எங்கிட்ட இருந்ததால எங்க கோச், என்னை hurdles-க்கு மாத்தினார். இதோ இப்போ தங்கம் வாங்கிட்டேன்" - என பெருமையாகச் சொல்லும் சந்தோஷ், மங்களூரு Alwa's கல்லூரியில் B.A பொருளாதாரம் படிக்கிறார். சந்தோஷின் சாதனையைப் புரிந்து அவரது கல்லூரியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் ஸ்காலர்ஷிப் வழங்கி ஊக்குவித்து வருகின்றன. 

சந்தோஷின் செயல்பாடு ஒவ்வொரு தொடரிலும் மெருகேறி வருவது அவர்மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு ஃபெடெரேஷன் கோப்பையில் வெள்ளி வென்றவர், இன்டர்ஸ்டேட் அத்லெடிக்ஸில் வென்றது வெண்கலம். ஒடிஸாவில் நடந்த ஆசிய அத்லெடிக் போட்டியில் ஆறாவது இடம். ஆனாலும், டைமிங் பரவாயில்லை. 50.22 விநாடிகள். முன்பு ஓடியதை விட பெஸ்ட் டைமிங்.

"பாட்டியாலா கேம்ப்ல தினமும் 5 மணி நேரம் பிராக்டிஸ். காலைல இரண்டரை மணி நேரம், சாயந்தரம் இரண்டரை மணி நேரம். நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். அடுத்த வருஷம் நடக்கும் காமன்வெல்த் கேம்ஸ்லையும், ஆசியன் கேம்ஸ்லையும்  மெடல் அடிக்கணும். சீக்கிரமே 49.5 செகண்ட்ஸ்ல ரேஸ் கம்ப்ளீட் பண்ணனும்" என்று லட்சியத்தோடு இருக்கும் சந்தோஷின் ரோல் மாடல், அமெரிக்க தடகள வீரர் எட்வின் மோசஸ். இவர் தொடர்ந்து 22 போட்டிகளில் பட்டம் வென்ற மகத்தான வீரர்.

சந்தோஷ் குமார்

19 வயதில் சந்தோஷுக்கு இருக்கும் தெளிவும் நம்பிக்கையும் பிரமிப்பு. "எந்த மாற்றமும் உடனே கிடைச்சிடாது. கொஞ்சம் கொஞ்சமா என் பெர்ஃபாமென்ஸை டெவலப் பண்ணனும். அப்படிப் பண்ணும்போது ஒருநாள் பெரிய சாதனை படைக்க முடியும்" என்று கூலாகப் பேசுகிறார். இந்திய தடகளத்தின் சார்பில் ஒலிம்பிக் பதக்கம் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. திறமை இல்லாமல் இல்லை. பெரிய களங்களில் அவை சோடைபோகின்றன. ஆனால் சந்தோஷின் கண்களில் தெரியும் வெளிச்சம் அவரது எதிர்காலத்தை பிரகாசமாகக் காட்டுகிறது. தடகளத்திலிருந்து ஒரு பெரிய வெற்றி நமக்குக் கிடைக்கலாம். அது இந்தத் தங்கத் தமிழனின் மூலமாகவும் இருக்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!