வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (29/09/2017)

கடைசி தொடர்பு:17:25 (29/09/2017)

ஸ்டோக்ஸ், ஹேல்ஸுக்கு கல்தா கொடுத்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

பிரிஸ்டோல் பகுதியிலுள்ள இரவு விடுதிக்கு வெளியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் இருக்கின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸை அணிக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டோல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தப் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. வெற்றிக்குப் பின்னர் அந்தப் பகுதியிலிருந்த இரவு விடுதிக்கு இங்கிலாந்து வீரர்கள் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சிலருடன் விடுதிக்கு வெளியே மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, இங்கிலாந்து போலீஸ் விசாரணை வளையத்துக்குள் அவர்கள் வந்தனர். இதையொட்டித்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர்களை அணிக்குத் தேர்வு செய்வதிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைத்திருக்கிறது.