``தங்கம் மட்டும் போதுமா?" - ஓப்பன் அத்லெடிக்ஸில் 3 பதக்கம் வென்ற தடகள வீராங்கனை அர்ச்சனா

``இங்கே உள்ள எல்லோருக்குமே, போட்டியில் தங்கம் வாங்கினாலே போதும்; சாதனையோ, முன்னேற்றமோ எதிர்பார்ப்பதில்லை. சாதனை நிகழ்த்தணும்னு யாரும் என்கரேஜ் பண்றதில்லை"  - அர்ச்சனாவின் வார்த்தைகளில் ஆதங்கம் வெளிப்படுவதை உணர முடிகிறது. சென்னையில் சமீபத்தில் நடந்த ஓப்பன் அத்லெடிக் மீட்டில் மூன்று பதக்கங்கள் வென்ற இந்தத் தமிழ்ப் பெண்ணுக்கு, தடைகளைத் தகர்த்தெறிந்து சாதனை படைத்து சரித்திரம் படைக்க வேண்டும் என்ற ஆசை; அல்ல அல்ல வெறி உள்ளது.  2018-ம் ஆண்டு நடக்கவுள்ள காமென்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழகம் திரும்புவதே அவரின் அடுத்த டார்கெட்!

அர்ச்சனா

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்துகொண்டிருந்தது தேசிய ஓப்பன் அத்லெடிக்ஸ் போட்டிகள். சர்வீசஸ், ரயில்வேஸ் அணி வீரர், வீராங்கனைகள் ஒருபுறம் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க, பெண்களுக்கான sprint-களில் அர்ச்சனாவின் ஆதிக்கம். 100 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்றில் 11.86 விநாடியில் இலக்கை அடைந்தார். அரை இறுதியில் 11.89, ஃபைனலில் இன்னும் சிறப்பாக 11.78. அந்த மூன்று சுற்றுகளில் அர்ச்சனாவின் அதிகபட்ச நேரமான 11.89-க்கே தங்கம் கிடைத்திருக்கும். அந்த அளவுக்கு இருந்தது அர்ச்சனாவின் ஆதிக்கம். போட்டிக்குச் செல்வதற்கு முன்னரே அர்ச்சனாதான் அனைவரின் சாய்ஸ். அந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர், பெரிதாகக் கொண்டாடவில்லை. அதற்கு அடுத்த நாள் 200 மீட்டர் heats மற்றும் அரை இறுதிப் போட்டிகள். 100 மீட்டர் ஓட்டத்தின் எல்லைக்கோட்டைக் கடந்ததும், 200 மீட்டரின் starting line-யைக் குறிவைத்தன அந்தக் கண்கள். என்றுமே லட்சியங்கள் நோக்கிப் பயணிப்பவை அந்தக் கால்கள்!

அவரின் இந்த லட்சியம், அவரது தந்தையின் லட்சியம். தன் இரண்டு குழந்தைகளில் ஒருவரையேனும் தடகள சாம்பியனாக உருவாக்க வேண்டும் என்ற வேட்கையோடு இருந்தவருக்குக் கிடைத்த தடகளத் தாரகை அர்ச்சனா. 3-ம் வகுப்பு படிக்கும்போதே ஓடத் தொடங்கிவிட்டார். விளையாட்டுப் பயிற்சிக்காக, தன் குழந்தைகளின் உறக்கத்தைக் கெடுக்க விரும்பாத அர்ச்சனாவின் அம்மா தன் மகனைப் பாதுகாக்க, தந்தையோடு கைகோத்து ஓடத் தொடங்கினார் அர்ச்சனா. தடகளப் பயிற்சிக்காக திருநெல்வேலி, ஈரோடு என விளையாட்டுப் பள்ளிகளுக்காகப் பயணித்துக்கொண்டே இருந்தார். அந்தப் பயணங்கள்தான் தாய்லாந்து ஆசியன் கிராண்ட் பிரிக்ஸ் வரை அவரைப் பயணிக்கவைத்தது. அங்கு 4x100 தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்று அசத்தியவர், SAF தொடரின்  100, 200 இரண்டிலுமே தங்கம் வென்றார். அப்போது அவருக்கு வயது 19.  

அர்ச்சனா

அர்ச்சனாவின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், அவரது பயிற்சியாளர் ரியாஸ். ராயல் அத்லெடிக்ஸ் க்ளப்பை நடத்திவரும் அவருக்கு, அர்ச்சனாவின் மீது அளவு கடந்த நம்பிக்கை. ``தன் தந்தையைப்போலவே தன்னைப் பற்றிக் கனவு காணும் அவரால்தான் தன்னால் இந்த உயரம் தொட முடிந்தது'' என்கிறார் அர்ச்சனா. கஸ்டம்ஸில் வேலைசெய்துவரும் அர்ச்சனா, அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர். குடும்பம், கல்லூரி, வேலை செய்யும் இடம் என அனைத்து பக்கங்களிலிருந்தும் ஆதரவு. ``அப்பாவுக்கு நான் பெரிய அளவுல ஜெயிக்கணும்தான் கனவு. வேறொரு வீட்டுல, இந்நேரம் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருப்பாங்க. ஆனா எங்க வீட்டுல, இதுவரை கல்யாணம்கிற பேச்சே எடுத்ததில்லை" என்று தன் தந்தையைப் பற்றிக் கூறியவர், தன் தந்தையின் கடுமையான நிபந்தனைகளைப் பற்றிச் சொன்னது சற்று வியப்பாகத்தான் இருந்தது.

``ஒரே ஒரு விஷயத்துல மட்டும் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். எப்பவும் யாரையும் இன்ஸ்பிரேஷனா வெச்சுக்கக் கூடாதுனு சொல்லிட்டார். அப்படி ரோல்மாடல்னு யாராச்சும் இருந்தா, என்னோட uniqueness போயிடும்னு சொல்வார். நான் ஒருநாள் எல்லோருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆகணும்கிறதுதான் அவரோடு ஆசை. ஸோ, எனக்கு ரோல்மாடல், இன்ஸ்பிரேஷன்னு யாருமே கிடையாது" என்று அவர் சொல்லும்போதே அவர் தந்தையின் கனவுகள் நம் கண்களுக்குள் விரிகின்றன.

ஒரு பெண்ணுக்கு அனைத்தும் நன்றாக வாய்ப்பது கடினமே. அப்படி அனைத்தும் கிடைக்கப்பெற்றவர் அர்ச்சனா. ஒரு தடகள வீராங்கனைக்கு அது மட்டும் போதுமா? அவளது சின்ன வெற்றியிலேயே எல்லோரும் திருப்தியடைந்து, அவள் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முட்டுக்கட்டையாகத்தானே இருக்கிறோம். சென்னை ஓப்பன் அத்லெடிக்ஸின் 200 மீட்டர் ஃபைனலுக்கு சில நிமிடம் முன்பு ``இதுலயும் கோல்டு வாங்கிருடா. ஆல் தி பெஸ்ட்'' என்று போனில் வாழ்த்துகிறார் அப்பா. போட்டிக்குத் தயாராகி starting point நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்.

``எப்படியாச்சும் இந்த கோல்டை ஜெயிச்சுடு. பெஸ்ட் அத்லெட் அவார்டு வாங்கிடலாம்" - TNAA நபர் ஒருவரின் அக்கறையான வார்த்தைகள். இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு அவரால் சிரிக்க முடியவில்லை. மாறாக கோபம். கடைசி நொடி வரை முன்னிலையில் இருந்தவர், ஹிமா தாஸின் (அசாம்) ஃபினிஷிங்கால் இரண்டாவதாகவே போட்டியை முடிக்கிறார். தங்கத்தைத் தவறவிட்ட ஆதங்கம். தன் தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்றுக்கொண்ட அர்ச்சனாவால், மற்றவர்களின் எண்ணங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அர்ச்சனா

``இவங்களுக்கு நம்பிக்கை இல்லையான்னு புரியலை. `எப்படியாச்சும் கோல்டு ஜெயிச்சுடு போதும்'னு சொல்லிச் சொல்லி, நம்மையும் அதைத் தாண்டி பார்க்க விடாம செஞ்சுடுறாங்க. `மீட் ரெக்கார்ட பீட் பண்ணு. புது நேஷனல் ரெக்கார்ட் உருவாக்கு'னு சொன்னா, நமக்கும் எனர்ஜிடிக்கா இருக்கும். இன்னும் பெட்டரா பெர்ஃபாம் பண்ணணும்னு ஒரு உத்வேகம் வரும். `கோல்டு... கோல்டு'னு நம்மையும் அந்த வட்டத்துக்குள்ளயே இருக்க வெச்சுடுறாங்க. ஏன்... நாங்க ரெக்கார்ட் பண்ண மாட்டோமா? எங்களாலயும் இன்னும் பெட்டரா பெர்ஃபாம் பண்ண முடியும். ஆனால், அவங்க நம்பிக்கையா என்கரேஜ் பண்ணணும். அதுதான் ஒரு அத்லெட் எதிர்பார்க்கிறது" என்று கூறும் அவரது வார்த்தைகள் முற்றிலும் உண்மை.

உதாரணமாக, ரியோ ஒலிம்பிக்கில் சிந்துவின் அரை இறுதியின்போது இருந்த எதிர்பார்ப்பு, இறுதிப்போட்டியின்போது கொஞ்சம் குறைவாகவே இருந்தது. காரணம், அரை இறுதி வெற்றிப் பதக்கத்தை உறுதி செய்துவிட்டது. நமக்குத் தேவை ஒரு பதக்கம். அது உறுதியானதும் நிம்மதியாகிவிட்டோம். தங்கத்தை எதிர்பார்த்தோம்தான். ஆனால், அரை இறுதியோடே திருப்தியாகிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. `ஒரு பொண்ணு, இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம்' என நாம் திருப்திப்படும்போதே அவளது அடுத்த வெற்றியைத் தடுத்துவிடுகிறோம். அவளால் `இவ்வளவுதான் முடியும்' என வகுக்க வேண்டாம். அவள் பட்டம்போன்றவள். நூலை விட விட அவள் உயரே எழுவாள்; இழுத்துப் பிடிக்க வேண்டாம். அர்ச்சனாவைப் போன்றோர் பறந்து உயரம் தொடட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!