நெஹ்ரா கம்பேக்; அஷ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு: ஆஸி. டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதையடுத்து வரும் 7-ம் தேதி தொடங்கும் டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கெதிரான தொடர்களில் புறக்கணிக்கப்பட்ட முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாக அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த முறையும் அணியில் இடம்பிடிக்கவில்லை. மேலும், ஆஸ்திரேலிய தொடரில் 4 அரை சதங்கள் விளாசிய அஜிங்கியா ரஹானே மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் ஆஸ்திரேலிய டி20 தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 


அதேபோல், மனைவியின் உடல்நலக் குறைவால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் இருந்த ஷிகர் தவான் அணிக்குத் திரும்பியுள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். இளம் வீரர் ரிஷாப் பாண்ட் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நியூசிலாந்து ஏ அணிக்கெதிராக இந்திய ஏ அணி பங்கேற்கும் தொடரில் விளையாட இருப்பதால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 

38 வயது ஆசிஷ் நெஹ்ரா அணிக்குத் திரும்பியுள்ளது குறித்து பேசிய பி.சி.சி.ஐ வட்டாரங்கள், இங்கிலாந்து அணிக்கெதிராக இந்த வருடத் தொடக்கத்தில் நடைபெற்ற தொடரில் நெஹ்ரா விளையாடினார். அதற்கடுத்து சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரிலும் அவர் பங்கேற்க இருந்தார். ஆனால், ஐ.பி.எல் தொடரின்போது ஏற்பட்ட காயத்தால் நெஹ்ராவால் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாட முடியவில்லை. பின்னர் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை தொடர்கள் வெளிநாட்டில் நடந்ததால் அவரைத் தேர்வு செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர். யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோரது செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதால், அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பெயர்களை பி.சி.சி.ஐ பரிசீலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்திய அணி விபரம்: 

விராட் கோலி (கேப்டன்) , ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, மணீஷ் பாண்டே, மகேந்திரசிங் தோனி, குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!