இதனால்தான் கோபிசந்த் பெஸ்ட்: கோவையில் சிந்து நெகிழ்ச்சி

கோவையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில், ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற, பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி சிந்து கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "எந்த ஒரு விளையாட்டிலும் தடம்பதிக்க பேஸிக் மிகவும் முக்கியம். ஒரு துறையில் சாதிக்க விரும்புபவர், பேஸிக்கை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். ஸ்டெப் பை ஸ்டெப்பாக முன்னேற வேண்டும். அதுதான் நிலையான ஒன்று. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதால், நான்தான் பெரிய வீராங்கனை என்றாகிவிடாது. எந்த ஒரு வெற்றியையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பி.வி.சிந்து

நான்,  எட்டு வயதில் பேஸ்கெட் பால் பயிற்சியில் ஈடுபட்டேன். பின்னர், 10 வயதில்தான் கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தேன். கடுமையாகப் பயிற்சிசெய்தேன். கோபிசந்த் சிறந்த பயிற்சியாளர். அவர், எனக்கு பயிற்சியாளராகக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். எனக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நான் கேட்பதற்கு முன்னரே செய்வார். அதற்காக, கோபிசந்த் அகாடமியில் சேர்ந்த உடன் ஒலிம்பிக் பதக்கம் வென்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அதற்கு மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.

என் தந்தையும் என்னை சிறப்பாக வழி நடத்திவருகிறார். இது, அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் கிடைக்கவேண்டிய ஒன்று. ஒலிம்பிக்கிற்குப் பிறகு, இந்தியாவில் பேட்மின்ட்டன் விளையாட்டும் ரசிகர்களிடம் பிரபலமாகிவருகிறது. இது, ஆரோக்கியமான விஷயம். எனது ஆட்டத்தின்மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகிவருகிறது. அதை முடிந்த அளவுக்கு பூர்த்திசெய்ய முயற்சிக்கிறேன். ஆனால், எல்லா நாளும் 100 சதவிகிதத்தைக் கொடுக்க முடியாது" என்றார். இந்த நிகழ்ச்சியில், பி.வி.சிந்துவின் தந்தை பி.வி.ரமணாவும் கலந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!