விக்கெட்டை விடுங்கள்... அந்த ஒரு ஜம்ப் போதும்! #HBDZaheerKhan | Zaheer Khan birthday special article

வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (07/10/2017)

கடைசி தொடர்பு:12:57 (07/10/2017)

விக்கெட்டை விடுங்கள்... அந்த ஒரு ஜம்ப் போதும்! #HBDZaheerKhan

2011-ம் ஆண்டு பிராட்மேன் நினைவுதினக் கூட்டத்தில் பேச, ஆஸ்திரேலியர்கள் அல்லாத முதல் சிறப்பு விருந்தினராக ராகுல் டிராவிட் அழைக்கப்பட்டிருந்தார். கிரிக்கெட்டில் இந்தியா எப்படி கோலோச்ச ஆரம்பித்தது என்பது குறித்தும், தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் ஒளிபரப்பான பிறகு, சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி மட்டுமல்லாது சிறு நகரங்களிலிருந்தும் பன்முகத்தன்மைகொண்ட வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தது குறித்தும் ஆழமாகப் பதிவுசெய்தார் இந்தியாவின் சுவர்.

zaheer khan

பல்வேறு வீரர்களைப் பற்றிக் குறிப்பிடும் முன், டிராவிட் மேற்கோள்காட்டிய வீரர் ஜாகிர் கான். மகாராஷ்ட்ராவில் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த ஜாகிர் கான், தன்னுடைய 17 வயது வரை பிரத்யேகமான ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெறவில்லை. தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்தும், கண்ணாடி முன் நின்று தன்னுடைய பௌலிங் திறமையை அசாத்தியமான கற்பனையில் வளர்த்துக்கொண்டும் இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்து, `இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியாளர்’ என்கிற மினிமம் கியாரன்டி கனவைக் கைவிட்டு, `எப்படியாவது இந்தியாவுக்காக விளையாட வேண்டும்' என முடிவெடுத்தபோது, அவருக்கு 18 வயது பூர்த்தியாகியிருந்தது.
 
அவருடைய உயரமும், இடதுகை பந்துவீச்சும், பந்தைப் போடுவதற்கு முன் ஒரு ஜம்ப் செய்து அதனுடைய அழுத்தத்தில் பந்தின் வேகத்தை அதிகப்படுத்தும் லாகவமும், ஜாகிர் கானை இரண்டு வருடங்களுக்குள் ரஞ்சி போட்டிகளில் விளையாட உதவின. பரோடா அணிக்காக விக்கெட் வேட்டை நடத்தினார். மறுபுறம், கங்குலி தலைமையிலான இந்திய அணி, வெற்றிகளை மட்டுமல்லாமல் மீண்டும் இந்திய மக்களிடமிருந்து அன்பையும் சம்பாதிக்கவேண்டிய நேரத்தில் இருந்தது. அந்தநேரத்தில்தான், ஜாகிர் கானை முதல்நிலை வேகப்பந்து வீச்சாளராக டிக் அடித்தார் தாதா.

கிரிக்கெட்டுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடுகளத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே விளையாடிய நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பை தன் அதிவேக கால்களில் சுமந்து, ஸ்டீவ் வாஹ்வின் விக்கெட்டை `யார்க்கர்’ கொண்டு சிதறடித்த அந்த நொடியில்தான் ஜாகிர் கான் என்கிற புதிய ஹீரோ பிறந்தார்.

ஏக்நாத் சோல்கர், கார்சன் காவ்ரி வரிசையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து, இந்திய அணிக்கு இடதுகை வேகபந்து வீச்சாளராக ஜாகிர் கிடைத்தார். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் போன்ற வீரர்களைப் பார்த்து ஏங்கிய இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தும், பிற்காலத்தில் ஆஷிஷ் நெஹ்ரா, இர்ஃபான் பதான், ஆர்பி சிங் போன்ற இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை இனம் காண உதவியதும் ஜாகிர் கானின் வெற்றியை மனதில் வைத்துதான்.

zaheer khan
 
 

கிரிக்கெட்டில் ஏன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பெஷல்?

முக்கால் வாசி பேட்ஸ்மேன்கள் வலதுகை ஆட்டக்காரர்கள். பந்துவீச்சாளர்களும் வலதுகையில் பந்து வீசுகையில், பேட்ஸ்மேன்கள் பந்தை சுலபமாகக் கணித்து ஆடிவிட முடியும். எப்படி என்றால், கள நடுவரின் இடதுகை பக்கத்திலிருந்து பந்து வீசுவது என்பதே இயல்பாக எல்லோரும் செய்யக்கூடிய விஷயம். பேட்ஸ்மேனுக்கு அவ்வாறு பந்து வருகையில், விழித்திரை சற்றும் பாதிக்கப்படாமல் பந்தின் தன்மை அறிந்து அடித்து ஆடவோ அல்லது விட்டுவிடவோ முடிவெடுப்பது சுலபம். அதே வேளையில், வலதுகை ஆட்டக்காரர்களுக்கு இடதுகை கொண்டு நடுவரின் வலது பக்கத்திலிருந்து பந்தை எதிர்கொள்ளும்போது, பந்து ரிலீஸ் ஆனவுடன் அதன் தன்மையை உணர்ந்து முழு விழித்திறனுடன் எதிர்கொள்வது கடினம். கண்களை இடது தோள்மீது நிலைநிறுத்தி, இடதுகை பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்வது, நேராக நிலைநிறுத்தி வலது கையில் வீசும் பௌலர்களைச் சமாளிப்பதைவிட கடினம்.

ஜாகிரின் வருகைக்கு முன்னர், மித வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் போன்றோரை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு, பாகிஸ்தான் பௌலர்களைப்போல மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஜாகிரை உடனே பிடித்துவிட்டது. தொடக்கக் காலங்களில் சீரான பயிற்சி இல்லாத காரணத்தால், மூன்று  வருடங்களுக்குள்ளாகவே ஜாகிரின் தொடை பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. பல்வேறு அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகு, தன்னுடைய குதித்து பௌலிங் செய்யும் ஸ்டைலில்தான் பிரச்னை என்பதை அறிந்துகொண்டார். இரண்டு வருடங்களுக்கு மேலாக ஓய்விலும், தன்னுடைய இயல்பான ஆட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்த ஜாகிருக்கு, இங்கிலாந்திலிருந்து கவுண்டி கிரிக்கெட் ஆட வாய்ப்புக் கிடைத்தது.
 
`உர்செஸ்டர்ஷைர்’ அணிக்காக விளையாடிய சீஸனில் 78 விக்கெட்டுகள் வீழ்த்தி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தன்னுடைய உடம்பை நன்கு புரிந்துகொண்டு, ரன்அப்பைக் குறைத்துக்கொண்டு அதிகம் ஜம்ப் செய்யாமல் கொஞ்சம் வேகத்தை மட்டும் குறைத்து அதிகமாக விவேகத்தைக் கூட்டிக்கொண்டார். 2007-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் டிராவிட் முதலில் தேர்வுசெய்தது ஜாகிரை.

zaheer khan

இந்தியாவின் `எஸ்ஜி’, இங்கிலாந்தின் `ட்யூக்’, ஆஸ்திரேலியாவின் `கூக்குபுர்ரா’ பந்துகள் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை. இங்கிலாந்திலே 18 மாதங்களுக்குமேல் விளையாடிய ஜாகிரின் அனுபவம் கைகொடுக்கவே இந்தியா தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. ஜாகிரின் வித்தையைக் கண்டு வாயடைத்துப்போன, ஆங்கிலேயே விமர்சகர்கள், என்ன சொல்வதெனத் தெரியாமல் `ஜாகிர் `ஜெல்லி பீன்’ மென்று அதனின் உமிழ்நீர் கொண்டு பந்தை `ஷைன்’ செய்வதால்தான் பந்து அவருக்கு மட்டும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது' எனப் புலம்பித் தீர்த்தார்கள்.
 
கவுன்டிக்காக விளையாடிய அனுபவமும், இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியும் ஜாகிரை இந்திய அணியின் அறிவிக்கப்படாத பௌலிங் கேப்டனாகச் செயல்படவைத்தன. இதைப் பல முறை தோனி வெளிப்படையாகவே சொன்னது, ஜாகிரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவே செய்தது. ஸ்ரீசாந்த், இஷாந்த ஷர்மா, முனாஃப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா போன்றோரோடு கூட்டணி அமைத்து, தோல்விகளின் பிடியிலிருந்தும் வெற்றிகளைத் தேடித் தந்தார்.
 
2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணங்களில், ஜாகிரின் 21 விக்கெட்களும் முக்கிய இடம்பிடிக்கிறது. பௌலர்களுக்குப் பெரிதும் உதவாத இந்திய ஆடுகளங்களில் தன்னுடைய இறுதி காலகட்டங்களில், துல்லியமாக வேகத்தை மாற்றினார். விரல்களின் மூலம் பந்தை விடுவிக்காமல், உள்ளங்கையிலிருந்து கொஞ்சம்கூட பிசிறில்லாமல் பந்தை விடுவித்து விக்கெட்டுகளைக் குவித்ததை உலகமே ஆச்சர்யமாகப் பார்த்தது.
 
உலகக்கோப்பையை வென்றது தன்னுடைய சாதனைகளின் உச்சம் என ஜாகிரே தெரிவித்தாலும், அதையும் தாண்டி அவர் ஏன் என்றென்றும் போற்றப்படவேண்டுமென்றால்... டெஸ்ட் போட்டிகளில், குறிப்பாக இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்களின் வேலை என்னவென்றால், பேருக்கு நான்கு ஓவர் வீசிவிட்டு, பந்தை ஹர்பஜன், கும்ப்ளேவிடம் ஒப்படைத்துவிட்டு பெளண்டரிக்கு அருகில் போய் நின்றுக்கொள்வது. இந்தியாவின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இல்லாததும், நாம் இங்கு பயன்படுத்தும் பந்து அதன் பொலிவை சீக்கிரம் இழந்து வேகமாகவோ, ஸ்விங்கோ ஆகாமல் கடுப்பேற்றும். இவ்வளவு பாதகங்கள் இருந்தாலும், அதனிலும் ஒரு ரூட் பிடித்து வெற்றிபெற்றவர் ஜாகிர்.
 
பந்தை நேராகப் பிடிக்காமல், `கிராஸ் சீம்’ பிடித்து, பந்தை சொரசொரப்பாக்கி, `ரிவர்ஸ் ஸ்விங்’ செய்வதற்குத் தயார்ப்படுத்தி, ஆடுகளங்கள் ஒத்துழைக்காதபோதும் எவ்வாறு விக்கெட் எடுக்க வேண்டும் எனச் சொல்லிக்கொடுத்தார். கவுண்டி கிரிக்கெட் கொடுத்த அனுபவத்திலிருந்து அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களில், ஏழு வருடங்களில் 45 டெஸ்ட் போட்டிகளில்186 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கும் குறைவான சராசரியில் அள்ளினார். இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியா தைரியமாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தது. தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரை சமன் செய்தும், இங்கிலாந்து, நியூஸிலாந்து தொடர்களைக் கைப்பற்றியும் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக உருவானது.

zaheer khan
 

2014-ம் ஆண்டு நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதே போட்டியில், மெக்கல்லம்  - வாட்லிங் இணை இந்தியாவின் வெற்றியைத் தடுத்ததே ஜாகிரின் கடைசிப் போட்டியாக அமைந்தது. அவரது நீண்டகால பிரச்னைகளான தசைப்பிடிப்புகளும் காயங்களும் மீண்டும் துரத்தின. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற கையோடு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு, முதல் நாளே அதிர்ச்சி காத்திருந்தது. வெறும் 13 ஓவர்கள் வீசியதோடு, காயம் காரணமாக ஜாகிர் விலக, தோனியின் அணி சரிவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்தத் தொடரிலிருந்து ஜாகிர் தொடர்ந்து விளையாட முடியாமல் போனாலும், அணியின் நலனுக்காக பயணம்செய்து, வியூகங்களை வகுத்துக்கொடுத்துக்கொண்டே வந்தார்.
 
தன்னுடைய 89-வது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவின் காலிஸை வீழ்த்தி, கபில் தேவுக்குப் பிறகு `300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்' என்ற பெருமையைப் பெற்றார். உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக கம்மியான ரன்கள் கொடுத்து அதிகமுறை அவர்களை வெளியேற்றியுள்ளார். அதில் குறிப்பிடும்படியான வீரர்களின் பட்டியலில், மைக்கல் க்ளார்க், ரிக்கி பாண்டிங், சங்கக்காரா, க்ரீம் ஸ்மித், ஹேடன் போன்றோரை அவர்களின் பேட்டிங் சராசரிக்குப் பாதிக்குப் பாதி விகிதத்தில் வீழ்த்தி தன்னுடைய ஆளுமையை நிரூபித்துள்ளார்.
 
மொத்தம் 23 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று 44 விக்கெட்டுகள் குவித்து, இருமுறை இறுதிப் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களில் ஒருவர் ஜாகிர். இன்றளவும் ஐ பி எல் போட்டிகளில் டெல்லி அணிக்காகப் பயிற்சியாளராகவும் கேப்டனாகவும் விளையாடிவருகிறார். பி.சி.சி.ஐ இரண்டு மாதங்களுக்கு முன், இந்திய அணி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும்போது ஜாகிரை பௌலிங் ஆலோசகராக நியமித்த செயல் ஒன்று போதும், ஜாகிர் கான் யார் என அறிவதற்கு.
 
வசதி வாய்ப்புகள் ஏதுமில்லாதபோதும், கனவுகள் காண்பதை மட்டும் என்றுமே நிறுத்தாமல் `எனக்குத் தெரியும், நான் என் கனவை வென்றெடுத்தே தீருவேன்' என்று கனவு காணும் அனைத்து விளிம்புநிலை மனிதர்களுக்கும், ஜாகிர்தான் சிறந்த உதாரணம். இன்று 39-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ஜாகிர் கானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!


டிரெண்டிங் @ விகடன்