தோனியின் மண்ணில், கோலி அதிரடி... இந்திய அணி வெற்றி! #INDvsAUS

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இந்திய அணியிடம், ஆஸ்திரேலிய அணி இழந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி, இன்று மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. 

 

 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருந்தன. ரஹானே மற்றும் அக்‌ஷர் படேலுக்குப் பதிலாக, தவான் மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தனர். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, டி20 தொடரில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகியதால், அணியை டேவிட் வார்னர் வழி நடத்தினார். இந்த அணியில் அறிமுக வீரராக, JP Behrendorff களம் கண்டார். 


இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்திருந்தபோது மழை பெய்ததால், போட்டி தடைபட்டது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான ஆரோன் பின்ச், 30 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார். இதில் 4 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்திய அணி தரப்பில் குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

 

 

மழைக் குறுக்கீட்டைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு டக்வொர்த் - லூயிஸ் முறைப்படி, 6 ஓவர்களில் 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா அதிரடியான துவக்கத்தைத் தந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி, நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரின் உதவியுடன், 7 பந்துகளில் 11 ரன்களை அடித்த நிலையில், அவர் Nathan Coulternile பந்துவீச்சில் போல்டானார். 

 


பின்னர் களமிறங்கிய விராட் கோலி, ஷிகர் தவானுடன் இணைந்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஜோடியின் அதிரடியால், வெற்றி இலக்கை 5.3 ஓவர்களிலேயே இந்திய அணி எட்டியது. கோலி 22 ரன்களுடனும் (3 பவுண்டரி), தவான் 15 ரன்களுடனும் (3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த அணிகளுக்கு இடையேயான 2-வது T20 போட்டி, Guwahati-ல் உள்ள Barsapara Cricket Stadium-ல் நடைபெறுகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!