மெஸ்ஸி இல்லாத உலகக்கோப்பை! கரைசேருமா அர்ஜென்டினா?

"என்னது... மெஸ்ஸி இல்லாத உலகக்கோப்பையா? சான்ஸே இல்ல, அது எப்படி ப்ரோ!" என்று கேட்டதெல்லாம் ஒரு காலம். அது இப்போது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆம், துண்டு துக்கடா அணிகளெல்லாம் 2018 கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுவிட்டது. இரண்டுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா இன்னும் தகுதி பெறவில்லை. நாளை நடக்கவுள்ள கடைசி ஆட்டத்தில் ஈக்வடாரை தோற்கடித்தால் மட்டுமே, அர்ஜென்டினா ரசிகர்கள் உலகக் கோப்பையைப் பற்றி  நினைத்துப் பார்க்க முடியும். கடந்த 2014 உலகக் கோப்பையில் 'ரன்னர்-அப்'... இந்தமுறை தகுதிச்சுற்றில் ஆறாவது இடம்...? என்னதான் பிரச்னை? 

உலகக்கோப்பை

அர்ஜென்டினாவின் இந்த 3 ஆண்டு பயணத்தை அலசுவோம்...

2014 உலகக் கோப்பையில் அர்ஜென்டினா  தொடர்ச்சியாக எந்த ஃபார்மேஷனையும் பின்பற்றவில்லை. ஒரு போட்டியில் 4-4-2, ஒரு போட்டியில் 4-3-3, இன்னொரு போட்டியில் 5-3-2. இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஃபார்மேஷன் ஆடக் காரணம், அந்த அணியிலிருந்த ஃபார்வேர்டுகளின் எண்ணிக்கை. மெஸ்ஸி, ஹிகுவைன், அகுவேரோ, லவெசி, டி மரியா என இத்தனை வீரர்களை 'பிளேயிங் லெவனில்' எப்படி ஆட வைப்பது? அதனால் ஒரு 'Fixed strategy' இல்லாமல்தான் ஆடினார்கள். ரோயோ, கேரே, ஃபெர்னாண்டஸ் மற்றும் ஸபலேட்டா ஆகியோர் அடங்கிய பின்கள கூட்டணியில் அவ்வப்போது ஸபலேட்டா எதிரணியின் கோல் பாக்ஸ் வரை முன்னேறுவார். 

அர்ஜென்டினா

நடுகளத்தில் டிஃபென்சிவ் மிட்ஃபீல்டரான மாஷரானோ அரணாக நின்று பின்களத்தையும் சேர்த்துக் கவனித்துக் கொள்ள, காகோ வலதுபுறத்தில் ஸபலேட்டாவுடன் பார்ட்னர்ஷிப் போட்டு கவுண்டர் அட்டாக்குக்கு அடித்தளமிட, இடப்புறத்தில் இருக்கும் டி மரியா பந்தை வைத்துக்கொண்டு கவுண்டர் அட்டாக்கில் வெடிவெடிப்பார். முன்களத்தின் இடப்புறம் அகுவேரோவும் நடுக்களத்தில் சென்ட்ரல் ஸ்ட்ரைக்கராக ஹிகுவைனும் முன்னேற, வலதுபுறம் இறங்கும் மெஸ்சி தன் க்ளப் அணியான பார்சிலோனாவில் ஆடுவதைப் போலே, விங்கராக மட்டுமில்லாமல் மிட்ஃபீல்ட் பிளேமேக்கராகவும் விளையாடினார். இப்படி அனைவருமே தரமான வீரர்கள். அட்டாக்கிங்கில் கில்லிகள். அவ்வளவு எளிதில் யாரையும் பெஞ்சில் அமர்த்திட முடியாது. கடந்த சில ஆண்டுகளாக பார்சிலோனா அணியின் பிரச்னை இதுதான். அணியின் ஃபார்முலா என்ன? அணியில் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்களின் 'ஃபிக்ஸ்டு ரோல்' என்ன? யாரை ஆட வைப்பது? யாரை ஓரங்கட்டுவது? பதில் இல்லை.


மற்ற அணிகளெல்லாம் ஒரே ஸ்ட்ராடஜியைக் கையாண்டனர். ஜெர்மனி, பிரேசில் அணிகள் கடைசி வரை 4-2-3-1 ஆடின. மூன்றாம் இடம் பிடித்த நெதர்லாந்து 5-3-2. இதுவே அந்த அணிகளின் சிறப்பான செயல்பாட்டுக்குக் காரணம். என்னதான் அர்ஜென்டினா ஃபைனலுக்கு முன்னேறியிருந்தாலும் 1 கோல் வித்தியாசத்தில்தான் பல போட்டிகளை வென்றது. உலகக்கோப்பைக்குப் பிறகும் இந்தநிலை தொடர்ந்தது. அதுவரை அமைதியாக இருந்த கொலம்பியா, சிலி அணிகள் விஸ்வரூபம் எடுத்தன. பிரேசில் அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் மண்ணைக் கவ்வ, ஒரு மாபெரும் மாற்றத்தைச் சந்திக்கத் தொடங்கியது. அர்ஜென்டினாவுக்கு மட்டும் அதே நிலைமை. இகார்டி, டிபாலா, பெனொட்டோ என அடுத்த ஜெனரஷனில் இருந்தும் ஸ்ட்ரைக்கிங் படையே கிளம்பி வர,  வீரர்களுக்கு ஓய்வளிக்கும் 'ரொடேஷன்' முறையே, அர்ஜென்டினாவின் பிரதான ஃபார்முலாவானது.

அகுவேரோ

இன்னைக்கு மேட்ச்சுக்கு ஹிகுவைன் இல்ல. நாளைக்கு அகுவேரோ பெஞ்ச்ல. அப்புறம் கொஞ்ச நாள் மெஸ்ஸிக்கும் ரெஸ்ட். இப்படித்தான் அணியைத் தேர்வு செய்துகொண்டிருந்தனர் அர்ஜென்டினா பயிற்சியாளர்கள். உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றின் நான்கு போட்டிகளில் அவருக்கு ஓய்வளிக்கப்பட, அந்தப் போட்டிகளில் வெறும் 7 புள்ளிகள் மட்டுமே பெற்றது அந்த அணி. ஒருகட்டத்தில் தொடர்ந்து இரண்டு கோபா அமெரிக்க போட்டிகளை சிலியிடம் இழக்க, ஓய்வையே அறிவித்து உலகை உறையவைத்தார் மெஸ்ஸி. பின்னர் சமரசம் செய்து அவரை அழைத்துவந்த அர்ஜென்டினா நிர்வாகம், சிலிக்கு இரண்டு கோப்பைகள் பெற்றுத்தந்த தங்கள் நாட்டுக்காரர் ஜார்ஜ் சாம்போலியை பயிற்சியாளராக நியமித்தது. 

சாம்போலி வந்ததும் அவர் எடுத்ததெல்லாம் வேற லெவல் முயற்சிகள். பார்சிலோனா அணியின் டிகி-டாகா ஸ்டைலின் பிராதனமே, பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதுதான். பந்து தங்களிடமே இருந்தால், எதிரணி எப்படி கோல் அடிக்கும். இந்த முறைதான் பார்காவுக்கு வெற்றிகளைத் தேடித் தந்தன. அதற்கு ஒரு படி மேலே போக நினைத்த சாம்போலி, வெறும் 2 டிஃபண்டர்களோடு ஒரு போட்டியில் அணியைக் களமிறக்கினார். "கோல் அடிச்சுகிட்டே இருந்தாலும், எதிரணி ஆஃப் ஆகும்ல?". அனைத்து ஸ்ட்ரைக்கர்களைக் களமிறக்கவும் வாய்ப்பு. கால்பந்தில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்த நினைத்தார். அந்தத் திட்டமும் ஃப்ளாப். காரணம் கால்பந்து ரசிகர்களுக்கு வேண்டுமானால் கோல் அடிப்பவர்கள் ஹீரோக்களாக இருக்கலாம். ஆனால் ஒரு ஆட்டத்தின் வேகத்தை, அதன் போக்கை பின்கள வீரர்களும், நடுகள வீரர்களுமே நிர்ணயிக்க முடியும். ஆக, இந்த ஃபார்மெட் அர்ஜென்டினாவுக்கு செட்டாகவில்லை. 

உலகக்கோப்பை


பிக்லியா, பிசாரோ, பனேகா என்று நடுகள வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்தான். மாஷரானோ, ஓட்டாமெண்டி என தடுப்பாட்டக்காரர்கள் கொஞ்சம் பலசாலிகள்தான். ஆனாலும், ஆட்டத்தின் போக்கை மாற்ற அவர்களால் முடியவில்லை. ஃபுல்பேக்குகள் உலகத்தரம் வாய்ந்தவர்களாக இல்லை. ஸபலேட்டாவுக்கு வயதாகி விட்டது. ரோயோ தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டார். அதனால் விங்கில் ஆடுபவர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. ஸ்ட்ரைக்கர்களும் போதிய அளவு சோபிக்கவில்லை. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. ஹிகுவைன், டிபாலா இருவரும் யுவன்டஸ் அணிக்காக ஆடுபவர்கள். அவர்களது ஸ்டைல் ஹோல்டிங்-கேம். அகுவேரோ மான்செஸ்டர் சிட்டி வீரர். கார்டியாலோவின்  கீழ் இப்போது அவரும் பல பரிசோதனை முயற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். மெஸ்ஸி - பார்சிலோனாவின் டிகி-டாகா. டி மரியா மொரினியோவின் கவுன்டர்-அட்டாக்கிங் கேமை கரைத்துக்குடித்தவர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலில், ஒவ்வொரு அணியில், ஒவ்வொரு தொடரில் விளையாடுபவர்கள். கெமிஸ்ட்ரி செட் ஆக வேண்டுமே.

2010 உலகக் கோப்பை சாம்பியன் ஸ்பெயின் அணியில் இருந்தவர்களில் அநேகம் பேர் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா க்ளப்களில் விளையாடியவர்கள்.  2014 உலகக் கோப்பை சாம்பியனான ஜெர்மனி அணியில் இருந்த வீரர்களில் பெரும்பாலானோர்  பேயர்ன் மூனிச், டார்ட்மண்ட் க்ளப்களில் விளையாடியவர்கள். வேறு அணிகளில் ஆடியவர்களான கெதிரா, டோனி க்ரூஸ் போன்றோரும் ஜெர்மனி ஆடிய 4-2-3-1 ஸ்டைலுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள். அதனால்தான் ஸ்பெய்ன், ஜெர்மனி அணிகள் ஆதிக்கம் செலுத்தின. வாரந்தோறும் க்ளப்புக்காக ஒரு ஸ்டைலிலும், திடீரென்று தேசிய அணிக்காக புது ஸ்டைலிலும் ஆடுவது கொஞ்சம் கஷ்டம் தான். அதுவும் அர்ஜென்டினா அணி வேறு ஒவ்வொரு Half time-லும் புது யுக்திகளைப் பின்பற்றுகிறது. 

மெஸ்ஸி

வீரர்களும் எளிதில் சோடை போய்விடுகின்றனர். வீரர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்பட்சத்தில் அவர்களும் போராடக்கூடும். கோப்பையை வென்ற ஜெர்மனி ரசிகர்கள், மேன்யல் நூயர், மரியா கோட்சே, கேப்டன் பிலிப் லாம், மிராஸ்லேவ் குளோஸ், தாமஸ் முல்லர் என அனைவரையும்தானே கொண்டாடினர். காயத்தால் தொடரிலிருந்து வெளியேறிய மார்கோ ருயூசுக்குக் கூட மரியாதை செலுத்த அவர்கள் தவறவில்லை. ஆனால் அர்ஜென்டினா வீரர்களுக்கான மரியாதை? யார் போராடி வெற்றி பெற்றாலும் அது மெஸ்ஸியின் வெற்றி. டி மரியா கோலடித்து காலிறுத்திக்கு அணி முன்னேறினாலும் மெஸ்ஸிதான் நாயகன். அந்தத் தொடரில் மெஸ்ஸியின் பங்களிப்புக்கு சற்றும் குறைந்ததல்ல மாஷரானோவின் பங்களிப்பு. தங்கப் பந்து வாங்குவதற்குத் தகுதியானவர்தான்? கிடைத்ததா அங்கீகாராம்?

யாரைக் குறைசொல்லியும்  பயனில்லை. தனி மனிதனைக் கொண்டாடுவது ரசிகனின் இயல்பு. தங்கள் போராட்டத்துக்கான பலன் இல்லாதபோது தொய்வடைவது ஒரு வீரனுக்கும் சகஜம். வெற்றிகளைத் தேட அடிக்கடி ஃபார்முலாக்களை பயிற்சியாளர்களும் மாற்றித்தான் ஆகவேண்டும். இப்படி ஒவ்வொன்றும் பிணைந்திருக்க, யார்தான் எப்படித்தான் அந்த அணியை மீட்டெடுப்பது? ஒவ்வொருவரும் போராடித்தானாக வேண்டும். சில காலங்களுக்கு சோதனை முயற்சிகளை புறந்தள்ளிவிட்டு மெஸ்ஸியை மட்டும் மையமாக வைத்து மற்ற வீரர்களை ஓரங்கட்டாமல், ஸ்பெய்ன் போல், ஜெர்மனி போல் ஒரு 'டீமாக' ஆடினால் அர்ஜென்டினா மீண்டு வரும்.

மெஸ்ஸி

சரி, இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் அர்ஜென்டினா அணியால் உலகக் கோப்பைக்குத் தகுதிபெறமுடியுமா? நாளை காலையில் விடை தெரிந்து விடும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!