வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (11/10/2017)

கடைசி தொடர்பு:12:29 (11/10/2017)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பேருந்துமீது கல்வீச்சு

கௌகாத்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்  அணியினர் சென்ற பேருந்துமீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உடைந்த கண்ணாடி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது டி20 போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் முதல் போட்டி, அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் நடந்தது. ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, டி20 போட்டியின் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆடியது. இதில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, 1-0 எனும் கணக்கில் முன்னிலைபெற்றது. ஆனால் நேற்று, கௌகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தற்போதைய நிலவரப்படி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.

இந்நிலையில், வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணியினர் சென்ற பேருந்துமீது, நேற்று மர்ம நபர்கள் சிலர் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பேருந்து ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. ஜன்னல் கண்ணாடி உடைந்த புகைப்படம் ஒன்றை ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனது வேதனையைப் பதிவுசெய்துள்ளார். ஆனால், இந்தச் சம்பவம் குறித்து ஐ.சி.சி, பி.சி.சி.ஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் என எந்தவொரு வாரியமும் அதிகாரபூர்வத் தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், “இந்தியாவுக்கு வரும் இதர நாட்டு வீரர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.