வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (11/10/2017)

கடைசி தொடர்பு:15:02 (12/10/2017)

பெரண்டார்ஃப்... ஓவர்நைட்டில் ஃபேமஸானது எப்படி? #IndVsAus

`விராட் கோலி, முதன்முறையாக டி-20 போட்டிகளில் டக் அவுட்டானார்; தோனி, முதன்முறையாக டி-20 போட்டிகளில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்; ஜஸ்ப்ரிட் பும்ரா, டி-20 போட்டியில் தன் ரன் கணக்கைத் தொடங்கினார். 2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக டி -20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா.' என கவுஹாத்தியில் நேற்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா மேட்சில் ஏகப்பட்ட `முதல்’கள். இவை எல்லாவற்றையும் கடந்து, யாருடா அந்தப் பையன்... இந்தப் போடுபோடுறான்?’ என வியக்கவைத்தார் பெரண்டார்ஃப். ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர். ரோகித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, மனீஷ் பாண்டே என டாப் ஆர்டரை பதம்பார்த்து,  இந்திய அணியை ஆட்டம் காணச் செய்துவிட்டார். ஓவர்நைட்டில் பாப்புலராகிவிட்டார்.

பெரண்டார்ஃப்

இலை தழைகளை நீட்டி ஆட்டின் கழுத்தை வெட்டுவதுபோல வெட்டிவிட்டார் பெரண்டார்ஃப். ஆட்டத்தின் முதல் பந்து ஃபுல்டாஸ். அதை அலுங்காமல் குலுங்காமல் கவர் திசையில் பெளண்டரிக்கு விரட்டினார் ரோகித் ஷர்மா. இரண்டாவது பந்து `ஃபுல் லெங்த்'. தடுத்தாடுகிறார். அடுத்த பந்தும் அதே லெங்த். ஆனால், கொஞ்சம் வெளியே போன பந்தை மிட் ஆஃப் திசையில் பெளண்டரியாக்கினார். நான்காவது பந்து. லெஃப்ட் ஆர்ம் ஓவர் ஸ்டிக்கிலிருந்து வீசுகிறார். மிடில் ஸ்டிக் லைனில் பிட்சான பந்து ஆஃப் ஸ்டிக்குக்கு நேராகவோ, அதற்கு வெளியேவோ சென்றிருக்க வேண்டும். மாறாக, `இன்ஸ்விங்' ஆகி ரோகித்தின் pad-யைப் பதம்பார்த்தது. ஆஸி. வீரர்கள் அப்பீல் செய்த மறுகணமே விரலை உயர்த்தினார் நடுவர். ரோகித் அவுட். களம் புகுந்தார் கேப்டன் விராட் கோலி. டி-20 போட்டிகளின் நம்பர் 1 பேட்ஸ்மேன். 54-க்கும்மேல் சராசரிகொண்டிருந்தவரை, இரண்டாவது பந்திலேயே வெளியேற்றினார். ரோகித்தைக் காலிசெய்த அதே பந்து. ஆஃப் ஸ்டிக் திசையில் வரும் எனக் கணித்து ஸ்கொயர் லெக்கில் ஆட கோலி முற்பட, மீண்டும் ஸ்விங். பந்து pad-ல் பட, ஆஸி. வீரர்கள் குதித்து அப்பீல் செய்கிறார்கள். அம்பயரைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், ஓடிப்போய் பந்தைப் பிடிக்கிறார் பெரண்டார்ஃப். இப்போதும் விரலைத் தூக்கிவிட்டார் அம்பயர். கேட்சா அல்லது எல்.பி.டபிள்யூ-வா? ரிவ்யூ வேண்டாம் என தவான் சொல்ல, நடையைக்கட்டினார் கோலி. டி20-யில் முதல்முறையாக பூஜ்ஜியத்தோடு.

அப்போதே மொத்த தேசமும் ஆட்டம் கண்டது. இதுவரை நாம் பார்த்திடாத ஓர் ஆள், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை ஆட்டம் காணவைத்துவிட்டாரே! இத்தனைக்கும் அதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வீசிய இரண்டாவது ஓவர்! ஃபீல்டிங்குக்காக பெரண்டார்ஃப் பெளண்டரி எல்லையை நோக்கிச் சென்றபோது அவரைக் கண்ட கோடிக்கண்களிலும் ஆச்சர்யம். அது அகல்வதற்கு முன்பே அதிர்ச்சியைப் பரிசளித்தார் பெரண்டார்ஃப். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை `தேர்டு மேன்' திசையில் பெளண்டரி அடித்தார் மனீஷ். ஆனால், அவரை அடுத்த பந்திலேயே பெவிலியனுக்கு பார்சல் செய்தார் பெரண்டார்ஃப். ரோகித், கோலியைப்போல் அல்லாமல் மனீஷ் ஸ்விங்குக்கு ஆட, பந்து ஸ்விங் ஆகாமல் வெளியே சென்றது. அடிப்பதா, விடுவதா என்ற குழப்பத்தில் அவர் ஃப்ரீஸாகி நிற்க, பேட்டை முத்தமிட்டுச் சென்று கீப்பரின் க்ளவுஸில் தவழ்ந்தது பந்து. 

பெரண்டார்ஃப்

14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இந்தியா. ஷிகர் தவான், கேதர் ஜாதவ் இருவரும் அணியை மீட்பார்கள் என நம்பி இருந்தார்கள் ரசிகர்கள். கூல்டர்நைல் வீசிய அடுத்த ஓவரில் ஜாதவ் அற்புதமாக புல் ஷாட்டில் சிக்ஸர் அடிக்க, 11 ரன்கள் கிடைத்தன. இந்திய ரசிகன் ஆசுவாசப்பட்ட நொடியில் மீண்டும் பெரண்டார்ஃப். கவனமாகக் கையாண்டார் தவான். பெரண்டார்ஃப் லெங்தை மாற்றி மாற்றி வீச, இந்த மாயக்காரனின் வலையில் தவானும் வீழ்ந்தார். ஓவர் பிட்ச் பாலை லாங் ஆஃப் திசையில் விளாச முற்பட, நன்றாகப் படாமல் எல்லைக்கோட்டுக்கு முன்பாகவே தரை இறங்கியது பந்து. லாங் ஆன், லாங் ஆஃப் ஃபீல்டர்கள் இல்லை. விக்கெட் போக வாய்ப்பே இல்லை. ஆனால், திடீரென அங்கு அட்டெண்டன்ஸ் போட்டார் வார்னர். மிட் ஆன் திசையில் நின்றவர் இங்கு எப்படி? பிடிக்க வாய்ப்பே இல்லாத கேட்சை பின்னோக்கி ஓடிவந்து, அற்புதமாகக் கணித்து, அநாயசமாகப் பிடித்து அசத்தினார் வார்னர்? இந்தியா 27/4. பெரண்டார்ஃப் ஹீரோவாகிவிட்டார். இந்தியப் படகில் அவர் ஓட்டை போட்டுவிட்டார்.

தோனி, ஜாதவ் இருவரும் கைகோக்க ஆறு ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள். இந்தியாவை மொத்தமாக முடித்துக்கட்ட நினைத்த வார்னர், பெரண்டார்ஃப் கையில் மீண்டும் பந்தைக் கொடுத்தார். தோனி மிகவும் கவனமாக ஆட, இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளை எப்படியோ தாக்குப்பிடித்தது இந்தியா. கடைசிப் பந்தில் ஜாதவையும் தன் பாக்கெட்டில் மடித்துச் சென்றிருப்பார். நல்லவேளை ஜாதவ் தப்பித்தார். இல்லையேல், அது அவருக்கு ஐந்தாவது விக்கெட்டாக அமைந்திருக்கும். 4 ஓவர்கள், 21 ரன், 4 விக்கெட். 24 பந்துகளில் 17 `டாட் பால்'கள். ஜேசன் பெரண்டார்ஃப், கடந்த சில வாரங்களில் முதல்முறையாக இந்திய மண்ணில் ஆஸி. கொடியைப் பறக்கவிட்டவர். இந்திய வீரர்களை ஸ்தம்பிக்கவைத்தவர். 7-வது ஓவரின் முடிவில் தனது பணியை செவ்வென முடித்து, தன் அணிக்கு அப்போதே வெற்றியையும் பரிசளித்தவர்.

பெரண்டார்ஃப்

 அதன் பிறகு, இந்தியா மீளவுமில்லை; ஆஸி-யை மிரட்டவுமில்லை. பெரண்டார்ஃபின் ஸ்பெல் முடிந்தபோதே, அவரிடம் சரண்டர் ஆகியிருந்தது மென் இன் ப்ளூ. ``நான்கு ஓவர்களில், நான்கு விக்கெட்டுகள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று புருவங்கள் உயர்த்திய பெரண்டார்ஃப், மற்ற ஆஸி. வீரர்களைப்போல் வாய்ச்சண்டையில் ஈடுபடுவதை விரும்பாதவர். ``எப்போதும் என் பந்துவீச்சுதான் பேச வேண்டும்" என்று கூறுபவர், தன் இரண்டாவது போட்டியிலேயே உரக்கமாகப் பேசிவிட்டார் தன் பந்துவீச்சின் மூலம்! 


டிரெண்டிங் @ விகடன்