’சச்சினின் சூப்பர் கிஃப்ட்’: நெகிழும் மிதாலி ராஜ்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிசாக அளித்த கிரிக்கெட் பேட் மூலமே அதிக ரன்களைக் குவித்ததாக இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார். 

 

சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மேனகா காந்தி, சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிய மிதாலி ராஜ், தனது கேரியரில் சச்சினின் அறிவுரைகள் ஊக்கம் அளித்ததாகத் தெரிவித்தார். அப்போது பேசிய மிதாலி, ‘சர்வதேச கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த போது சச்சினிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இத்துடன் நிறுத்திவிடாதீர்கள்; தொடர்ந்து பயணித்து வெற்றிகள் பலவற்றை ஈட்ட வேண்டும் என்று அவர் ஊக்கமளித்தார்.
 

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக சச்சினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். வாழ்வின் முக்கியமான போட்டி ஒன்றுக்கு முன்பாக அவரது வார்த்தைகள் அணி வீராங்கனைகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று நான் எண்ணினேன். எங்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கக் கூடிய வகையிலேயே அவர் இருந்திருக்கிறார். அவர் எனக்கு பரிசாக அளித்த பேட் மூலமே அதிகப்படியான ரன்களை நான் குவித்தேன். பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பொருளாதார ரீதியான முன்னேற்றத்துக்கு கல்வி அத்தியாவசியமான ஒன்று. பெண்களை, அவர்கள் அணியும் ஆடைகளைக் கொண்டு மதிப்பிடுவது சரியானது அல்ல’ என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!