வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (12/10/2017)

கடைசி தொடர்பு:17:00 (12/10/2017)

சொந்த ஊரில் ஓய்வுபெறுவது குறித்து நெஹ்ரா நெகிழ்ச்சி!

தனது 18 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்க்கையை வரும் நவம்பர் 1-ம் தேதியுடன் முடித்துக்கொள்ளப்போவதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தரப்பலிருந்து நேற்று அறிவிப்பு வெளியானது. இதையொட்டி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது ஓய்வுகுறித்து அதிகாரபூர்வமாகத் தகவல் தெரிவித்தார் நெஹ்ரா.

ஆஷிஸ் நெஹ்ரா

செய்தியாளர்களை சந்தித்த நெஹ்ரா, `நான் ஓய்வுபெறுவது குறித்து இந்திய அணி நிர்வாகத்துக்கும் தேர்வுக் குழு தலைவருக்கும் முறைப்படி தெரிவித்துவிட்டேன். நான் ஓய்வுபெறுவது குறித்து முடிவு செய்துவிட்டதால், இனிமேல் ஐ.பி.எல் போட்டிகளில்கூட விளையாட மாட்டேன். இது என் முடிவுதான். வரும் நவம்பர் 1-ம் தேதி என் சொந்த ஊரில், சொந்த மக்கள் முன் சர்வதேச கிரிக்கெட்டில் எனது கடைசிப் போட்டியில் விளையாடுகிறேன். இதைவிட எனக்குப் பெரிய விஷயமே இருக்க முடியாது' என்று கூறினார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1999-ம் ஆண்டு அறிமுகமான நெஹ்ரா, தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பல காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறார். அதனால், அவருக்கு இந்தக் காலகட்டத்தில் 12 சர்ஜரிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் அவர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் ஒருவராக இருந்தார். 2003-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நெஹ்ரா, 23 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதுதான் உலகக் கோப்பைகளில் இன்றளவும் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் பெஸ்ட் பௌலிங் ஃபிகராக இருந்து வருகிறது. இப்படி பல சாதனைகளைப் புரிந்த நெஹ்ரா, அவரது சொந்த ஊரான டெல்லியில் நடக்கும் போட்டியுடன் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கிறார்.