தொடரை வெல்வது யார்..? இன்று இறுதி டி20 பலப்பரீட்சை!

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, இன்று இறுதி டி20 யுத்தம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என கணக்கில் வென்றது. அதன் பின்னர் மூன்று போட்டிகள்கொண்ட டி 20 தொடர் தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட  முதல் போட்டியில், இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறையில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில், இந்திய அணிக்கு கடும் சவால் அளித்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை அனைத்துத் துறைகளிலும் வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இதனால் தொடர் யாருக்கு என்பதை முடிவுசெய்யும் மூன்றாவது போட்டி, இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை, பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம் கிடைப்பது மிக அவசியம். கடந்த போட்டியின் மோசமான தொடக்கத்தால், கடைசி வரை இந்திய அணியால், ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்க முடியாமல்போனது. சிறப்பான தொடக்கத்தை, தொடக்க ஆட்டகாரர்கள் தவான் மற்றும் ரோஹித் அளித்துவிட்டால், தொடரை வென்றுவிடலாம். இந்திய பேட்டிங் வரிசையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. மனீஷ் பாண்டே நிலையான ஆட்டத்தை வெளிபடுத்துவது அவசியமாகும். அவர், நிலையான ஆட்டத்தை இதுவரை வெளிபடுத்தவில்லை. ஆனால், பெரும்பாலும் கடைசி ஆட்டதில் புதிய வீரரை களமிறக்க கோலி விரும்ப மாட்டார். எனவே, மனீஷ் பாண்டேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றே தெரிகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன், ’ஆஸ்திரேலிய அணி விளையாடுவது, மஞ்சள் சீருடையில் இலங்கை அணி விளையாடுவதுபோல உள்ளது’ என விமர்சனம் செய்தார். அதுபோலத்தான் இந்தச் சுற்றுப்பயணம் முழுவதும் அந்த அணி விளையாடி வந்தது. ஆனால் கடந்த போட்டியில், அந்த அணி முழு ஆதிக்கம் செலுத்தி இந்திய அணிக்கு எந்த வாய்ப்பும் தராமல் வெற்றிபெற்றது. இதை, இந்திய அணி கவனத்தில்கொள்ள வேண்டும். தவிர, வார்னர் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றவர்கள். அதனால், ஹைதராபாத் மைதானத்தின் தன்மைகுறித்து அவர்கள் நன்கு அறிவார்கள். 

ஆஸ்திரேலிய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில், இந்தப் போட்டி கடைசி வாய்ப்பாகும். அதனால், அந்த அணி இந்தமுறை வெற்றிபெற கடுமையாக முயற்சி செய்யும். இந்திய அணி சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்ற கடுமையாக முயற்சிக்கும் என்பதால், இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!