வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (13/10/2017)

கடைசி தொடர்பு:15:35 (13/10/2017)

வந்ததுக்கு ஒரு கோப்பையாவது வெல்லுமா ஆஸ்திரேலியா!? #IndVsAus

இந்தியா - ஆஸ்திரேலியா (#IndVsAus) அணிகளுக்கு இடையிலான 3-வது டி 20 போட்டி, ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்பதுடன், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரன் விருந்தாகவும் இருக்கலாம்.

IndVsAus

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 4-1 எனக் கைப்பற்றி அசத்தியது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ராஞ்சியில் நடந்த டி20 தொடரின் முதல் ஆட்டத்திலும், தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது இந்திய அணி. ஆனால், கெளகாத்தியில்  நடைபெற்ற 2-வது டி 20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி தோல்வியைப் பரிசளித்தது. எனவே, கடந்த போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்திலும், டி 20 தொடரை வெல்லும் முனைப்புடனும், டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இன்று களமிறங்குகிறது. கடந்த போட்டியில் அனைத்துத் துறைகளிலும், முழுவீச்சுடன் செயல்படத் தவறிய இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று, டி 20 தொடரையும் வெல்ல முயற்சிக்கும்.

இந்திய அணியின் ப்ளஸ், மைனஸ் 

கடந்த போட்டியில், இந்திய அணியின் டாப் ஆர்டரை, ஆஸ்திரேலியாவின்  இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெகண்டார்ஃப்,  தொடக்கத்திலேயே வெளியேற்றிவிட்டார். எனவே, அவரது பந்துவீச்சை, இந்திய அணி வீரர்கள் கவனமுடன் எதிர்கொள்வார்கள் என நம்பலாம். போட்டியை வெல்வதற்கு ஏதுவாக, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடமிருந்து, இன்றாவது ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் வெளிப்பட வேண்டும்.

 #IndVsAus

மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஆர்டர், இதுவரை நிலைத்து நின்று விளையாடவில்லை என்பது மைனஸ். சுரேஷ் ரெய்னா இல்லாதது தெரிகிறது. இச்சமயங்களில் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை அளித்தாலும், அவருக்குப் பக்கபலமாக யாரும் அடித்து ஆடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. எதிரணியை குறைத்து மதிப்பிட்டு,  அதிகப்படியான தன்னம்பிக்கையினால் செய்யக்கூடிய தவறுகளை, இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

கடந்த போட்டியில் புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள், விரைவாகவே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களை வெளியேற்றி, ரன்குவிப்பைத் தடுத்தனர்.  ஆனால், அதை சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் குல்தீப் யாதவ், சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதுடன், அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தனர் (7.3 ஓவர்களில் 75 ரன்கள்). எனவே, இன்றைய ஆட்டத்தில் இந்த இருவரில் ஒருவர் வெளியே அமர வைக்கப்பட்டு, அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்படலாம்.

 

Ashish nehra

 

அதேபோல புவனேஷ்வர் அல்லது பும்ரா ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகும் ஆசிஷ் நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளிக்கலாம். இதுபோன்ற எந்தப் பிரச்னைகளும், இந்திய அணியின் ஃபீல்டிங்கில் இல்லை என்பது ஆறுதல். தினேஷ் கார்த்திக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் சேர்க்கை, இன்று அணியில் அதிரடி மாற்றங்களாக இருக்கலாம்.

ஆஸ்திரேலிய அணியின் பலம், பலவீனம்

கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய விதத்தில், பெரிய வித்தியாசத்தை உணர முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித்துடன் ஒப்பிடும்போது, ஆக்ரோஷமாக அணியை வழிநடத்துகிறார் டேவிட் வார்னர். எனவே, ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விகளுக்குப் பதிலடியாக, இன்றைய போட்டியில் வென்று, டி-20 தொடரையும் வெல்வதற்கு அந்த அணி கடுமையாகப் போராடும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை அதிரடியாக இருக்கிறது.

 #IndVsAus

 

ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, இதே மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடிய வார்னர், இன்று தேசிய அணிக்காக ஆரோன் ஃபின்ச் உடன் சேர்ந்து அதே அதிரடியைத் தொடர்ந்தால், அது இந்திய அணிக்கு மைனஸ்தான். ஒன் டவுனில் களமிறங்கும் வீரரைப் பொறுத்தே, இந்த அணியின் ரன்குவிப்பு அமையும் எனலாம். கடந்த போட்டியில் விராட் கோலி ரிவ்யூ கோராததால், ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிப் பிழைத்த ஹென்ட்ரிக்ஸ், இன்றும் ஒரு நல்ல இன்னிங்ஸை வெளிப்படுத்தலாம். 

கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ட்ராவிஸ் ஹெட், அதிரடிக்குப் பெயர்பெற்ற க்ளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், போட்டியின் முடிவை தனியாளாக மாற்றக்கூடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் டேனியல் க்றிஸ்டியன் என டி 20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற பேட்டிங் வரிசை இருந்தாலும், இவர்கள் வடிவேலு சொல்வது போல, ''ஒன்னு தூங்குற, இல்ல தூர் வாருற'' என்ற ரகத்திலேயே இருக்கின்றனர். ஆனால், இன்றைய போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விளையாடுவர்கள் எனத் தெரிகிறது.

 

 #IndVsAus

 

தன் பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்த ஜேசன் பெகண்டார்ஃப், இன்றும் மீண்டும் இந்தியாவுக்கு தலைவலியாக அமையலாம். இவருக்கு நாதன் கோல்டர்நைல் மற்றும்  ஆண்ட்ரூ டை ஆகியோர் பக்கபலமாக இருக்கின்றனர். பனிப்பொழிவு இருந்தாலும், கடந்த போட்டியின் முக்கியமான நேரத்தில், தன் சுழற்பந்து வீச்சால் ஜாதவ் மற்றும் தோனியின் விக்கெட்களை வீழ்த்திய ஆடம் ஜாம்பா, வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் வித்தியாசத்தைக் கொண்டுவருகிறார். 

ஹைதராபாத் மைதானம் எப்படி?

ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் வார்னர், ஹென்ரிக்ஸ் - தவான், புவனேஷ்வர் ஆகியோருக்கு, இன்றைய டி20 போட்டி நடைபெறும் ராஜீவ்காந்தி மைதானம், மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. இது வழக்கமாகவே ரன்குவிப்புக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி, தாராளமாக இங்கே ரன்களைக் குவிக்க முடியும்.

 #IndVsAus

எனவே, இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து, முதன்முறையாக இங்கே சர்வதேச டி 20 போட்டி நடைபெற உள்ள நிலையில், இன்று ஹைதராபாத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி, முதல் டி 20 போட்டியைப் போல மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அணி விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், அக்ஷர் படேல், ஆசிஷ் நெஹ்ரா.

 

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் ஃபின்ச், ட்ராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், ஜேசன் பெகண்டார்ஃப், டேனியல் க்றிஸ்டியன், ஹென்ட்ரிக்ஸ், டிம் பெய்ன், கேன் ரிட்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரு டை, நாதன் கோல்டர்நைல்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்