மாநில விருதுகள் 9... தேசிய விருதுகள் 3... ஆசிய விருது 1 - கராத்தே போட்டியில் கலக்கும் சென்னை மாணவன்

18 வயதுக்குள் மாநில விருதுகள் 9, தேசிய விருதுகள் 3, ஆசிய விருது 1 என கராத்தே போட்டிகளில் சென்னை மாணவன் விஷ்ணுவரதன் கலக்கிவருகிறார். 

சென்னை கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ ஸ்டேடியத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 16 வது கோபுகான் அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர் என 8 மாநிலங்களிலிருந்து சுமார் 600 வீரர்- வீராங்கனைகள் கலந்துகொண்டனர். ‘கட்டா’, ‘குமிதே’ பிரிவில் மொத்தம் 60 பந்தயங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு சார்பில் விஷ்ணுவரதன் 84 கிலோ பிரிவில் கலந்து கொண்டார். அவர், இரண்டாம் இடத்தைப் பிடித்தார். விஷ்ணுவரதன், இதுவரை மாநில விருதுகள் 9, தேசிய விருதுகள் 3, ஆசிய போட்டியில் ஒரு விருது என 13 விருதுகளைப் பெற்றுள்ளார். 

விஷ்ணுவரதனிடம் பேசினோம். " 3 வயதில் கராத்தே பயிற்சி வகுப்புக்கு அப்பா பொன்சேகர் அனுப்பி வைத்தார். எனக்கு கராத்தே என்றால் அதிக ஆர்வம். ஆரீப் ஆலம் மாஸ்டரிடம் கராத்தே கற்றேன். பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். குறிப்பாக 9 மாநில விருதுகள், நேபாலில் நடந்த ஆசிய போட்டியில் ஒரு விருதும் கிடைத்துள்ளது. தேசிய அளவிலான போட்டிகளில் இரண்டு முறை இரண்டாமிடமும் மூன்றாமிடம் ஒருமுறையும் என மூன்று விருதுகள் பெற்றுள்ளேன்.  

கராத்தே போட்டியில் கவனம் அதிகம் தேவை. எதிரிலிருக்கும் போட்டியாளரின் தாக்குதலைத் தடுப்பதோடு அதற்கு சரியாக பதிலடி கொடுக்க வேண்டும். எனக்கு கராத்தே தவிர பாக்ஸிங், ஸ்கேட்டிங் ஆகியவையும் எனக்குத் தெரியும். ஆனால் கராத்தே போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுவருகிறேன். அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துவிட்டதால் நானும் இப்போது மாஸ்டர். பலருக்கு கற்றுக் கொடுக்கிறேன். நான் கற்றுக் கொடுத்தவர்கள் பரிசுகளைப் பெறும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. சென்னையில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நான் கற்றுக் கொடுத்த இரண்டு பேர் பரிசுகளை பெற்றுள்ளனர்" என்றார்.  கராத்தே போட்டிகளில் கலக்கும் விஷ்ணுவரதன் சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!