வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (14/10/2017)

கடைசி தொடர்பு:18:15 (14/10/2017)

டெஸ்ட் சாம்பியன்ஷிப், 4 நாள் டெஸ்ட்... பரிணாமம் காணும் கிரிக்கெட்!

டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐ.சி.சி. கிரிக்கெட் விதிகளில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், விளையாட்டை மேலும் சீரமைக்கும் நோக்கில், சில புதிய முடிவுகளை எடுத்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப், லீக் முறையில் ஒருநாள் போட்டிகள், நான்கு நாள் டெஸ்ட் போட்டி போன்றவற்றை அறிமுகப்படுத்த முடிவுசெய்துள்ளது. 

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஐ.சி.சி ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்துவது, அயர்லாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக சேர்மேன் சஷாங்க் மனோகர் தலைமையில், உயர்மட்ட அதிகாரிகள் கூடி விவாதித்தனர். அதன்பிறகு ஐ.சி.சி அறிமுகப்படுத்தவுள்ள புதிய நடைமுறைகளைப் பற்றி சஷாங்க் மனோகர்  தெரிவித்தார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தை கிரிக்கெட் உலகில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. நாக்-அவுட் முறையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தி வந்தது. பின்னர், டெஸ்ட் தரவரிசையில் முதலிரு இடங்களிலிருக்கும் அணிகள் டெஸ்ட் பட்டத்துக்கு மோதும் என்ற பேச்சு அடிபட்டது. கடந்த 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிக்கு முழுக்குப் போட்ட ஐ.சி.சி, அதற்குப் பதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் எடுக்கப்படாமலே இருந்தது. ஒருகட்டத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் முழுக்குப் போட்டார்கள். டி20-யின் தாக்கத்தால், டெஸ்ட் போட்டி கலையிழக்க, பகல் - இரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. வெகுகாலம் ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே ஆடிவந்த அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு டெஸ்ட் உரிமம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்ட முயற்சியாக, பழைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் பிளானையே தூசி தட்டியுள்ளனர்.

கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 9 நாடுகள் பங்கேற்கும். டெஸ்ட் அந்தஸ்து உள்ள 12 நாடுகளில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான் அணிகளைத் தவிர்த்து, தரவரிசையில் முதல் 9 இடங்களில் இருக்கும் அணிகள் பங்கேற்கும். 2019 உலகக்கோப்பை முடிந்ததும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும். இதுவொரு தொடர் போல் அமையாது. 2021-ல் நடக்கும் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக மற்ற அணிகள் குறைந்தபட்சம் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருக்க வேண்டும். அதில் 3 தொடர்கள் உள்நாட்டிலும், 3 தொடர்கள் அயல்நாடுகளிலும் ஆடியிருக்க வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் குறைந்தபட்சம் 2 போட்டிகளாவது இருக்க வேண்டும். இந்தப் போட்டிகளின் முடிவைப் பொறுத்து தரவரிசை அமைக்கப்படும். அதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 2021 ஏப்ரலில் டெஸ்ட் சாம்பியன் பட்டத்துக்கு மோதும்.

4 நாள் டெஸ்ட் போட்டி

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆடாத சிறு அணிகளும், டெஸ்ட் போட்டிகளில் முன்னேற்றம் காண்பதற்கு 4 நாள் டெஸ்ட் போட்டிகள் நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பெரிய அணிகளுடன் இந்த அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மோத வழிவகை செய்யும். தரவரிசையில் முதல் 9 அணிகளுடன் இருக்கும் இடைவெளியைக் குறைக்கவும் அது உதவும். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டிகள் கட்டாயம் 5 நாள் போட்டிகளாகத்தான் நடக்கும்.

கிரிக்கெட்

ஒருநாள் லீக்

டெஸ்ட் போட்டிகளைப் போன்று ஒருநாள் போட்டிகளையும் லீக் அடிப்படையில் நடத்த ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இந்த லீக் அடிப்படையில் அடுத்த உலகக்கோப்பையின் பிரதான சுற்றுக்குத் தகுதிபெறும் அணிகள் முடிவு செய்யப்படும். இந்த லீக் 2020-21 சீசனில் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நடக்கும். 2023 உலகக்கோப்பைக்குப் பிறகு 3 ஆண்டுகள் நடக்கும் லீகாக இது மாற்றப்படும். முதல் ஒருநாள் லீகில் 13 அணிகள் கலந்துகொள்ளும். ஐ.சி.சி உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் அணி 13-வது அணியாக கலந்துகொள்ளும். இந்த சமயத்தில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 8 ஒருநாள் தொடர்களாவது ஆட வேண்டும். ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட தொடராக அமையவேண்டும். 

கிரிக்கெட்

இந்த மாற்றங்கள் பதில் சொல்லுமா?

டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும். ஒருநாள் லீகுக்குமான அட்டவனை விரைவில் அமைக்கப்படும் என்று ஐ.சி.சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த மாற்றங்கள் முழுமையாக சாத்தியப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில், உள்ளூரில் ஒவ்வொரு அணியும் 3 டெஸ்ட் தொடரில் விளையாடியாக வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் மற்ற அணிகள் பாகிஸ்தானில் விளையாட சம்மதம் தெரிவிக்குமா? இந்த 10 ஆண்டுகளில் அங்கு விளையாடிய ஒரே அணியான ஜிம்பாப்வே அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆடத் தகுதியில்லை. உலக லெவன் அணி விளையாடியிருந்தாலும், பிற தேசிய அணிகளின் நிலைப்பாடு இன்னும் கேள்விக்குறிதான். ஷார்ஜா, அபுதாபி போன்ற 'நியூட்ரல் வென்யூ'வில் விளையாடினாலும் கூட அங்கு இந்தியா நிச்சயம் பங்கேற்காது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவை ஐ.சி.சி-யின் தலையீடு மாற்றுமா?

இந்தக் கேள்விகளுக்கு ஐ.சி.சி-யின் அட்டவணை வரும்போதுதான் விடை கிடைக்கும். ஐ.பி.எல், பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக், பங்களாதேஷ் லீக், பாகிஸ்தான் லீக், இப்போது தென்னாப்பிரிக்க லீக் என ஒவ்வொரு டி-20 தொடரும் ஒவ்வொரு மாதத்தில் நடக்கிறது. அதனால் பல வீரர்கள் அந்தச் சமயத்தில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்க்கின்றனர். அப்படியிருக்கையில் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆர்வத்தை மீட்டெடுப்பது கடினமே. 'டொமஸ்டிக் லீக்ஸ் விண்டோ'வை அறிமுகப்படுத்தி, அனைத்து டி-20 தொடர்களும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்று நிர்பந்திக்கும்போது, ஒரு வீரரால் பல அணிகளுக்கு விளையாட முடியாது. கவனிப்புக் குறையும். சர்வதேச கிரிக்கெட்டின் மீது இன்னும் வெளிச்சம் படரும். இதைச் செய்யுமா ஐ.சி.சி?


டிரெண்டிங் @ விகடன்